Published:Updated:

`அரிசி மூட்டைக்கு அடியில் குட்கா; டெல்லி டு நெல்லை!' -அதிகாலை ரெய்டில் மிரண்ட சேலம் போலீஸ் அதிகாரி

குட்கா லாரி
குட்கா லாரி

சேலம் வழியாகப் பல்வேறு மாவட்டங்களுக்கு பான்பராக், குட்கா கடத்தி செல்வதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாருக்கு தகவல் வந்தது.

டெல்லியிலிருந்து ஈரோட்டுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பான்பராக், குட்கா ஏற்றி வந்த லாரியை சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் சேலம் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அதையடுத்து, அந்த லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். மற்றொரு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். அவரை சேலம் போலீஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

துணை  கமிஷனர் ஆய்வு
துணை கமிஷனர் ஆய்வு

சேலம் வழியாகப் பல்வேறு மாவட்டங்களுக்கு பான்பராக், குட்கா கடத்திச் செல்வதாக சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாருக்குத் தகவல் வந்தது. அதையடுத்து, அவர் அனைத்துப் பகுதிகளிலும் வாகனத் தணிக்கை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில், இன்று அதிகாலை சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் வாகனத் தணிக்கை செய்து வந்தனர்.

அப்போது ஒரு லாரி, ஈரோட்டை நோக்கி வேகமாக வந்தது. அந்த லாரியைப் பார்த்த போலீஸார் நிறுத்தினார்கள். ஆனால், லாரி நிற்காமல் வேகமாகச் சென்றது. பின்னர், சேலம் போலீஸார் அந்த லாரியை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பிறகு, அந்த லாரியில் காவலர்கள் ஏறி ஆய்வு செய்தனர். லாரியின் மேல் பகுதியில் அரிசி மூட்டைகளும், அதற்கடியில் இரும்பு பொருட்களும், அதற்கடியில் பான்பராக் மூட்டைகள், குட்கா, ஹான்ஸ் மூட்டைகளும் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து, அந்த லாரி அன்னதானப்பட்டி காவல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அதை துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் மற்றும் உதவி கமிஷனர் ஈஸ்வரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதுகுறித்து சேலம் துணை கமிஷனர் செந்தில், '' இந்த லாரி டெல்லியிலிருந்து பான்பராக், குட்கா, ஹான்ஸ் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேலம் வழியே ஈரோடு மாவட்டம் சித்தோடுக்கு சென்று, அதன் பிறகு நெல்லைக்குச் செல்ல இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த லாரியை ஓட்டிவந்த பிரகாஷ் என்பவர், சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர். அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துணை ஆணையாளர்
துணை ஆணையாளர்

மற்றொரு ஓட்டுநர் பெயர் சூரியா. இவர் தப்பி ஓடிவிட்டார். இவரை தீவிரமாகத் தேடிவருகிறோம். இந்த லாரியில் கடத்தி வந்த பான்பராக், குட்காவின் மதிப்பு 20 லட்ச ரூபாய் இருக்கும். இந்த லாரியில், பலமுறை பான்பராக் மற்றும் குட்கா கடத்திச் சென்றதும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு