Published:Updated:

சகாயத்தை சாய்த்த ஆஸ்ரா... ஆஸ்ராவை அசைத்த சகாயம்!

மதுரைக்கு வந்த சோதனை!

சகாயத்தை சாய்த்த ஆஸ்ரா... ஆஸ்ராவை அசைத்த சகாயம்!

மதுரைக்கு வந்த சோதனை!

Published:Updated:
##~##

மிஷனர் கண்ணப்பன், கலெக்டர் சகாயம், எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க் - அதிரடிக்குப் பிரபலமான இந்த மதுரை சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்றாவது விக்கெட்டும் வீழ்ந்து விட்டது. கலெக்டர் சகாயத்துக்கு டிரான்ஸ்ஃபர் உத்தரவு வந்த மறுநாளே, ஆஸ்ரா கர்க் திருப்பூருக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்படவே, 'என்னதான் நடக்கிறது?’ என்று புரியாமல் குழம்பிக்கிடக்கிறார்கள் மதுரை மக்கள்.

 ஆஸ்ராவுக்கும் கிரானைட் பின்னணி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்றெழுத்து கிரானைட் கம்பெனிக்கு கிடுக்கிப்​பிடி போட்டதுதான் சகாயம் டிரான்ஸ்ஃபருக்கு முக்கியக் காரணம் என்று கடந்த இதழில் கழுகார் சொல்லி இருந்தார். ஆஸ்ரா கர்க், டிரான்ஸ்ஃபருக்கும் அதையேதான் காரணம் சொல்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன், கிரானைட் அதிபரின் மகன் மீது நிலஅபகரிப்பு வழக்குப் போட்டார் ஆஸ்ரா கர்க். அப்போது தலைமறைவாக இருந்துகொண்டே, புகார் கொடுத்தவரை அந்தர்பல்டி அடிக்க வைத்தார் கிரானைட் அதிபரின் மகன். இதில் கடுப்பான எஸ்.பி., கிரானைட் குவாரிக்குள் நடந்த ஒரு மர்ம மரணம் குறித்து நோண்ட ஆரம்பித்​தாராம். இதைத் தெரிந்துகொண்டு, 20 நாட்களுக்கு முன் காலை 8.30 மணிக்கு எஸ்.பி-யைத்

சகாயத்தை சாய்த்த ஆஸ்ரா... ஆஸ்ராவை அசைத்த சகாயம்!

தேடி முகாம் அலுவலகத்துக்கே வந்தாராம் கிரானைட் புள்ளி. உடனே அவரை அழைக்காமல் மற்ற விசிட்டர்களைச் சந்தித்துவிட்டு, ஐந்து மணி நேரம் கழித்து மதியம் 1.30 மணிக்கு அழைத்தவர், 'சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்று பொதுவாகச் சொல்லிவிட்டு எழுந்து போனாராம். அதுவரை அப்படி ஓர் அனுபவத்தைச் சந்திக்காத கிரானைட் புள்ளி, அப்போதே சபதம் போட்டுவிட்டு காரில் ஏறினாராம். இதுதான் ஆஸ்ராவுக்கு ஆப்பு வைத்​திருக்கும் என்கிறார்கள் உள் விவரங்களை அறிந்தவர்கள்.

தி.மு.க-வினரோடு டீல்?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க-வினரால் பாதிக்கப்பட்ட நபர்கள் நிலஅபகரிப்புப் புகார்களைக் கொட்டினார்கள். அந்தப் புகார்கள் தொடர்பாக பொட்டு சுரேஷ், எஸ்ஸார் கோபி, அட்டாக் பாண்டி, வி.கே.குருசாமி உள்ளிட்ட அழகிரி வட்டத்தினர் மீது வழக்குகளைப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பினார் ஆஸ்ரா கர்க். சிலர் குண்டாஸிலும் வைக்கப்பட்​டார்கள். ஆனால், முக்கியமான இந்த வழக்குகளை ஏனோதானோ என ஜெயலலிதாவால் நியமிக்​கப்பட்ட  அரசு வழக்கறிஞர்கள் கையாண்டதால், அனைத்துமே வலுவிழந்து, குண்டர் சட்டத்தில் போனவர்கள்கூட அடுத்தடுத்து வெளியில் வந்துவிட்டார்கள். 'தி.மு.க-வினர் மீது வழக்குப் போடுவது​போல் போட்டு அதில் இருந்து தப்பிப்பதற்கான ஓட்டைகளையும் போலீஸாரே ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்கள். குற்றவாளிகள் அனைவரும் தப்பி விட்டதால் மக்களுக்கு இந்த ஆட்சி மீது அவநம்பிக்கை ஏற்படும் சூழல் உண்டாகி விட்டது’ என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம்.

கொலை வழக்கில் இருந்து விடுவிப்பு ஏன்?

அவனியாபுரம் ஆட்டோ டிரைவர் பாண்டி​ய ராஜனை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் (வழக்கு எண் 130/2009), பொட்டு சுரேஷ், எஸ்ஸார் கோபியின் அண்ணன் மருது உள்ளிட்டவர்கள் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டார்கள். ஆனால், கடந்த டிசம்பரில் தாக்கலான குற்றப் பத்திரிகையில் பொட்டு சுரேஷ், மருது பெயர்கள் இல்லை. கொலை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது, அரசு வழக்கறிஞரின் அப்ரூவல் இருக்க வேண்டும். ஆனால், அரசு வழக்கறிஞருக்குத் தெரியாமலேயே படுரகசியமாக இந்தக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள். 'இதில் உள்ள மர்மம் என்ன?’ என்று அரசு வழக்கறிஞர் கேட்டதற்கு, 'அவருகிட்டத்தான்  கேக்​கணும்’ என நழுவிக்கொண்டதாம் போலீஸ். இதுதொடர்பாக, அப்போதே உள்துறைச் செயலாளருக்கு புகார் போய் இருக்கிறது. மறுநாளே பதறி அடித்து ஓடி வந்த போலீஸ், கோர்ட்டில் இருந்த குற்றப் பத்திரிகையைத் திரும்பப் பெற்றுச் சென்றது.

போட்டுக்கொடுத்த அ.தி.மு.க. புள்ளி!

'மதுரை அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அழகிரி தரப்பினரோடு டீல் வைத்துக்கொண்டு கட்சிக்குத் துரோகம் செய்கிறார்கள்’ என்று ஒரு ரிப்போர்ட் தலைமைக்குப் போயிருக்கிறது. அதனால் தனது தலைக்கு கத்தி வந்துவிடுமோ எனப் பதறிய ஆளும் கட்சி முக்கியப் புள்ளி ஒருவர், 'கலெக்டர் சகாயமும் ஆஸ்ரா கர்க்கும் முன்னைப் போல் இல்லை. பொட்டு சுரேஷை வெளியில் விட்டுவிட்டு, அவருக்கு எதிரியான அட்டாக் பாண்டியையும் அவரது குடும்பத்தையும் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தால் போலீஸ் அழகிரி தரப்பினரோடு சமரசம் செய்துகொண்டதுபோல் தெரிகிறது’ என்று ஒரு புகாரை தலைமைக்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.

சகாயம் எழுதிய மூன்று புகார்கள்!

ஒன்று: ஜனவரி மாதம் சென்னையில் முதல்வர் நடத்திய கலெக்டர்கள் மா​நாட்டுக்குப் போயிருந்தார் சகாயம். அந்த நேரம், உத்தப்புரம் பிரச்னை தொடர்பாக அமைதிக்குழு கூட்டம் போட்டு, அந்த மக்​களுக்கு சில உத்தரவாதங்களைக் கொடுத்து ஒப்பந்தக் கையெழுத்து வாங்கி இருக்கிறார் ஆஸ்ரா கர்க். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, 'வருவாய்த் துறையினர் செய்ய வேண்டிய வேலைகளில் எஸ்.பி. ஏன் மூக்கை நுழைக்கிறார்?’ என்று எகிறினாராம் கலெக்டர். இந்த மோதலால் உத்தப்புரத்தில் வருவாய் துறையினரால் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்தும் தடைபட்டுப்போயின. இதை எதிர்த்து இந்து அமைப்புகள் கலெக்டரைக் கண்டித்து போராட்​டம் நடத்தின. அப்போதே உள்துறைச் செயலாளருக்கும் டி.ஜி.பி-க்கும் கடிதம் எழுதிய கலெக்டர், 'நான் எஸ்.பி-யின் அதிகாரத்தில் தலையிடுவது இல்லை. ஆனால், அவர் என்னுடைய அதிகார வரம்​புக்குள் தலையிடுகிறார். நான் ஊரில் இல்லாத நேரத்தில் உத்தப்புரத்தில் அமைதிக் கூட்டம் நடத்தி சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். எனக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டிவிடுவதும், பத்திரிகைகளில் எழுதவைப்பதும்தான் ஒரு எஸ்.பி-யின் வேலையா?’ என்று கேட்டிருந்தாராம்.

இரண்டு: வீரணன் என்பவர் குடித்துவிட்டு வந்து தனது மகளிடமே தகாத முறையில் நடக்க முயன்றார். மகளைக் காப்பாற்றுவதற்காக வீரணனின் மனைவி உஷாராணி கிரிக்கெட் மட்டையால் அவரை அடித்துக் கொன்றார். தற்காப்புக்காக ஒருவரைத் தாக்கும்போது அவர் மரணமடைந்தால், அதைக் கொலையாகக் கருத முடியாது என்று, வழக்குப் பதிவு செய்யாமல் உஷாராணியை விடுதலை செய்தார் எஸ்.பி. இந்த வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த கலெக்டர், ''வீரணன் உடம்பில் 10 இடங்களில் காயங்கள் இருக்கிறது. தற்காப்புக்காக அடிப்பவர்கள், அடித்தவுடன் ஓடத்தான் பார்ப்பார்கள். இப்படி உயிர்போகும் அளவுக்கு அடிக்க மாட்டார்கள். 'சாகும் வரை வீரணின் மர்ம உறுப்பை பிடித்து நசுக்கினேன்’ என்று உஷாராணி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதனால், வீரணனைக் கொலை செய்வதுதான் அவருடைய திட்டம். அப்படிப்​பட்ட ஒருவரை விடுதலை செய்ய எஸ்.பி-க்கு எந்த அதிகாரமும் இல்லை'' என்று உள்துறைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினார்.

மூன்று: 'சாதி, மதப் பற்றுதலுடன் செயல்படுவதாக தன்​னைப் பற்றி போலீஸார் பொய்ப்பிரசாரம் செய்​வதாக’ மூன்றாவதாக ஒரு கடிதத்தையும் உள்துறைக்கும் டி.ஜி.பி-க்கும் எழுதி இருக்கிறார் சகாயம். வெளிமாநிலங்களில் இருந்து தனது முயற்சியால் மீட்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு மறுவாழ்வுக்கான உதவிகளைச் செய்யவில்லை என கலெக்டர் மீது, எஸ்.பி. புகார் கிளப்பினார். 'ஆதிதிராவிடர் நலத்துறையில் தற்சமயம் அதற்கான நிதி இல்லை. அதனால் செய்ய முடியவில்லை’ என்று பதில் கொடுத்தாராம் கலெக்டர். இதைத்தெரிந்து​தான் சகாயம் மீது, ஆஸ்ரா கர்க் கோபத்தில் இருந்​துள்ளார். இதுதவிர சந்தையூர் பாதைவிவகாரத்​திலும் இருவருக்கும் முட்டல், மோதல் ஏற்பட்டதாம்.

இந்த தகவல் அனைத்தும் ஆட்சி மேலிடத்துக்குச் சென்றது. இனியும் இந்தப் பனிப்போர் நீடிக்கக் கூடாது என்பதால்தான் இருவரையுமே டிரான்ஸ்ஃபர் செய்த​தாகச் சொல்கிறார்கள்.  சகாயம் புது இடத்​துக்குப் புறப்படத் தயார். ஆஸ்ரா கர்க், 'மறுபடியும் மதுரை கிடைக்குமா?’ என்று கேட்டு வருகிறாராம்.      

''எங்கு போனாலும் சகாயம், சகாயமாகத்தான் இருப்பான். இதுவரை கிடைக்காத அனுபவங்களை, இந்த ஓர் ஆண்டில் பெற்றிருக்கிறேன். மனிதர்களைப் படித்தால் மட்டும் போதாது, இடத்துக்குத் தக்க நடக்கும் அதிபுத்திசாலித்தனமும் வேணும் என்பது மதுரை எனக்கு தந்த பாடம்'' என்கிறார் சகாயம்.

''எதுக்கு டிரான்ஸ்ஃபர் போட்டாங்கன்னு எனக்கு உண்மையிலேயே தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சா கேட்டுச் சொல்லுங்க'' என்று சிரிக்கிறார் ஆஸ்ரா கர்க்.

ஒர் உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடி​யாது என்பதற்கு உதாரணம்தானோ சகாயமும் ஆஸ்ரா கர்க்கும்?

  - குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism