Published:Updated:

மாங்காய் பறித்த உயிர்கள்!

தருமபுரி சோகம்

மாங்காய் பறித்த உயிர்கள்!

தருமபுரி சோகம்

Published:Updated:
##~##

தாங்கள் பறித்த மாங்காய்களே, தங்கள் உயிரைப் பறிக்கும் என்று நினைத்துக்கூட பார்த் திருக்க மாட்டார்கள், அந்தத் தொழிலாளர்கள். கடந்த 27-ம் தேதி, தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலத்தை அடுத்த திம்மராயன ஹள்ளி கிராமத்தில்தான் அந்தக் கோர விபத்து. 

அந்தக் கிராமத்தில் உள்ள தோட்டங்களில் மாங்காய் பறிப்பதற்காக 35-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் அக்கம்பக்கத்தில் இருந்து அழைத்து வரப்பட்டனர். பறித்த மாங்காய்களை லாரியில் ஏற்றியவர்கள், உழைத்தக் களைப்போடு மாங்காய்கள் மீதே அமர்ந்து பயணித்து இருக்கிறார்கள். அது மலைப் பாங்கான பகுதி. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே லாரி கட்டுப்பாட்டை இழந்து விடவே, பள்ளத்தில் உருண்டு இருக்கிறது. சற்றும் எதிர்பாராமல், வண்டியில் இருந்து சிதறி விழுந்த தொழிலாளர்கள் மீது தார்ப் பாய், மாங்காய், லாரி என மொத்தமாக அழுத்த... மூச்சுத் திணறி 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் ஆறு பேர் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்கள் என்பதுதான் கூடுதல் சோகம். 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்களில் ஏழு பேர் காவேரிப்பட்டினத்தை அடுத்த சவூளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்தவர்கள்தான். இந்தக் கிராமங்கள் அனைத்துமே சோகத்தில் மூழ்கிக் கிடக்கின்றன.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாங்காய் பறித்த உயிர்கள்!

பிரேக் ஃபெயிலியர், முன்சக்கர ஆக்ஸில் விரிசல் என விபத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், அதிகப்படியான பாரமும் அறியாமையோடு தொழிலாளர்கள் பயணித்ததும்தான் விபத்துக்கு முக்கியக் காரணங்கள். இப்படி விளிம்பு நிலை மக்களைக் கொன்றுபோடும் விபத்துக்கள் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் அதிகம் நடக்கின்றன. கடந்த 2007-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி மலைப் பகுதியில் ஈமச் சடங்குக்குச் சென்று திரும்பிய லாரி, பள்ளத்தில் உருண்டு 18 பேர் பலியானார்கள். அதே போல், கடந்த 2010-ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே திருமண கோஷ்டியினர் சென்ற டெம்போ, லாரியுடன் மோதியதில் 18 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்.பி. அமித்குமார் சிங், ''இதுபோன்ற சரக்கு வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். சரக்கு வாகனங்களில் ஆட்கள் செல்லத் தடை விதிக்கப்படும். அதே சமயத்தில் மக்களுக்கும் பொறுப்பு வர வேண்டும்'' என்று அறிக்கை விடுத்து இருக்கிறார்.

விபத்து நடந்த நேரத்தில் மட்டும் கண்காணிப்பதும், பிறகு, மறந்துபோவதும் தீர்வு ஏற்படுத்தாது. இனியாவது இந்தக் கண்காணிப்பு தொடர்ந்து நடக்கட்டும்!

- எஸ்.ராஜாசெல்லம்

படம்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism