Published:Updated:

''விஜி எனது மகள்... நான் அவளின் தந்தை!''

'வெளியே வந்த' தியாகு விளக்கம்!

''விஜி எனது மகள்... நான் அவளின் தந்தை!''

'வெளியே வந்த' தியாகு விளக்கம்!

Published:Updated:
##~##

மாற்றுக் கருத்துகொண்ட தோழர்களால்  கூட மதிக்கப்படுபவர் தோழர் தியாகு. எதையும் அறிவுப்பூர்வமாக அணுகும் தியாகு, இளைய தலைமுறையினரின் கொள்கை வகுப்பாளராகவும் மதிக்கப்படுகிறார். நக்சல்பாரி இயக்கத்தில் அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை பெற்று 13 ஆண்டு காலம் சிறையில் இருந்து, தண்டனை தகர்த்து வெளியில் வந்து, தாய்த் தமிழ்ப் பள்ளியையும் தமிழ் தேச விடுதலை இயக்கத்தையும் நடத்தி வரும் தியாகு மீது சமீப காலமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். கடந்த சில வாரங்களாகத் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தவர், தொடர்புக்கு வந்தபோது அவர் மீதான குற்றச்சாட்டுகளை அவரிடமே வைத்தோம். 

''விஜி என்ற பெண் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெள்ளக்கோவில் சண்முக சுந்தரம் குற்றம் சாட்டியிருக்கிறாரே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''2011 பிப்ரவரியில் ஈரோட்டைச் சார்ந்த  சார்ந்த ஒரு வழக்கறிஞர் விஜியை என்னிடம் அனுப்பி, இந்தப் பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரால் ஆபத்து இருக்கிறது. கணவராலும் குடும்பத்தினராலும் துன்புறுத்தப்படுகிறார் என்று கூறி, அவளுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். நான் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்தேன். அவரைத் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியர் ஆக்கி சட்ட ரீதியான உதவிகளும்

''விஜி எனது மகள்... நான் அவளின் தந்தை!''

செய்தோம். போலீஸார் அந்தப் பெண்ணைத் தேடி வந்தார்கள். 'என் பெற்றோர் என்னை 10,000 ரூபாய் பணத்துக்காக, ஏற்கெனவே திருமணமான ஒருவருக்கு விற்றுவிட்டார்கள்’ என்று போலீஸாரிடம் விஜி எழுதிக் கொடுத்தார். அப்படி விஜியை விலைக்கு வாங்கியவர்தான் சண்முகசுந்தரம். 16 வயதில் விற்கப்பட்ட அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் துன்புறுத்தல் தொடர்ந்தது. விஜி, தப்பிச் சென்று ஒரு பள்ளியின் ஹாஸ்டலில் வேலை பார்த்தார். அங்கும் அவரை நிம்மதியாக வாழவிடவில்லை. அதன் பின்னர்தான் அவர் என்னிடம் அனுப்பப்பட்டார். பிரச்னைக்கு உள்ளான பல பெண்களுக்கு நான் உதவியிருக்​கிறேன். அப்படித்தான் விஜிக்கும் உதவினேன். இப்போது விஜியின் கணவர், அவரது அம்மா, மாமியார் மீது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் சைதை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது.''

''நீங்கள் அந்தப் பெண்ணுடன் பல பொது நிகழ்ச்சி​களுக்குச் சென்ற​தாக​வும் உங்களுக்கும் அந்தப்பெண்​ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும் சொல்​​கிறார்களே?''

''ஒரு கம்யூனிஸ்ட்டுக்குத் தனிப்பட்ட வாழ்வு என ஒன்று இல்லை. அவனது அரசியல் வாழ்வும் தனிப்பட்ட வாழ்வும் வெவ்வேறு அல்ல. தன்னோடு பழகும் எவர் ஒருவரையும் தான் சார்ந்த அரசியலுக்காக வென்றெடுத்து, இயக்கப் பணிகளில் ஈடுபடுத்த முயற்சிப்பதுதான் ஒரு புரட்சிக்காரனின் நோக்கம். விஜி என்னிடம் வந்தபோது அவர் தாய்த் தமிழ்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணி செய்தார். எமது இயக்கப் பணிகளில் ஈடுபடுத்தினேன். நான் அரசியல் கூட்டங்​களுக்குச் செல்லும்போது அங்கும் அவர் வந்தார். இதில் என்ன ஒரு குற்றத்தைக் கண்டுவிட்டார்கள்? என் மீதுள்ள அன்பினால் அவர் என்னை 'அப்பா’ என்கிறார். நானும் என் மகளாகத்தான் விஜியைப் பார்க்கிறேன். தந்தை - மகள் உறவைத் தாண்டி வேறு எதுவும் எங்களுக்கு இடையில் இல்லை.''

''நீங்கள் ஏன் கடந்த சில வாரங்களாகத் தலைமறைவாக இருந்தீர்கள்? விஜி இப்போது எங்கு இருக்கிறார்?''

''விஜி எனது மகள்... நான் அவளின் தந்தை!''

''நான் தலைமறைவாகவில்லை. பொதுக் கூட்டங்களிலும் போராட்டங்களிலும் அரசியல் வகுப்புகளிலும் தொடர்ந்து கலந்துகொள்கிறேன். இது ஊடகங்களில் செய்தியாகவே வந்துள்ளது. மற்றபடி ஒரு மகளாகவும், பாதிக்கப்​பட்ட பெண்ணாகவும் இயக்கத் தோழராகவும் அவரது வாழ்வைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்​களுக்கு உள்ளது. அவரையும் அவரது குழந்தைகளையும் அவரது உறவினர்கள் கடத்திய முன்அனுபவம் இருப்பதால், அவருக்கும் அவரது குழந்தை​களின் பாதுகாப்புக்​காகவும் இப்போது அவர் காஞ்சி மக்கள் மன்றத்தில் இருக்கிறார்.''  

''உங்களுக்கும் உங்கள் மனைவி கவிஞர் தாமரைக்கும் இடையில் இதனால் பிரச்னை​யாமே?''

''இல்லை. நாங்கள் இருவரு​மே பொது வாழ்க்கை​யில் இருக்கிறோம். இருவருக்குமே ஏராளமான வேலைகள் இருக்​கின்றன. நேரப் பற்றாக்​குறைக் காரணமாக என்னால் சில நேரங்களில் உரிய நேரத்தில் வீட்டுக்குத் திரும்பி வர இயலாமல் போய்விடும். அமைப்புப் பணிகளுக்காகப் பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் வெளியூர்களில் தங்கி வேலை செய்வேன். தொடர்பு​கொள்வதில் ஏற்படும் சில பிரச்னைகளை வைத்து இப்படிச் சொல்கிறார்கள். மற்றபடி எனக்கும் கவிஞர் தாமரைக்​கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.''

''அவர் உங்களைத் தனி அறையில் அடைத்துத்​துன்​புறுத்தியதாகவும் காயப்​படுத்திய​தாகவும் கூறு​கிறார்​களே?''

''அப்படி எல்லாம் எதுவும் இல்லை. குளியல் அறையில் தவறு​தலாக வழுக்கி விழுந்ததில் என் உதடு கிழிந்துவிட்டது. காயமடைந்த என்னை மருத்துவ​மனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததே தாமரைதான். ஆகவே எனக்கும் கவிஞர் தாமரைக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை.''

''வாரிசு அரசியல் பற்றி கலைஞரை விமர்சிக்​கிறார் தியாகு. ஆனால் தன் மகள் சுதா காந்தியை நாடு கடந்த தமிழீழ அரசின்எம்.பி-யாக ஆக்கியிருக்​கிறார். தன் கட்சியைச் சார்ந்த இன்னொ​ருவர் அந்தப் பதவிக்குக் கிடைக்க​வில்லையா எனக் கேட்கிறார்களே?''

''நாடு கடந்த தமிழீழப் பேரவையை ஏதோ நம் ஊர் சட்டப்பேரவை, நாடாளுமன்றம் போல நினைக்கிறார்கள் பலரும். அது பெயரளவில்தான் அரசு என்னும் சொல்லுடன் இருக்​கிறதே தவிர, அரசு ஆகவில்லை. அது தமிழீழத்துக்காகப் போராடும் ஓர் இயக்கம். அதனால் எந்த ஆதாயமும் கிடையாது. இழப்புகளே அதிகம். ஈழத்தின் மீதுகொண்ட அக்கறையால் சுதா அதற்குப் பயன்படுவார் என்பதால்தான் அவரைப் பரிந்துரைத்தேனே தவிர, என் மகள் என்பதால் அல்ல. தவிரவும் அவருக்கென்று ஒரு போராட்டப் பின்னணி இருக்கிறது. சட்டக் கல்லூரியில் படிக்கும்போதே அவர் பல போராட்டங்களில் பங்கேற்றார். சிறைக்கும் சென்றிருக்கிறார். நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாகத் தோழமை மையத்தை இங்கு வைத்திருக்கிறோம். அதில் இருந்து பேராசிரியர் சரஸ்வதி, செல்வராஜ் முருகைய்யன், மும்பை சிறிதரன், பாண்டிமா தேவி ஆகியோரின் பெயர்களையும் பரிந்துரைத்தோம். அதில் சுதாவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.''

''தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீங்கள், இந்திய தேசியக் கொடியை சட்டையில் குத்திக்கொண்டதன் மூலம் தமிழ் தேச விடுதலை இயக்கத்துக்கு தீராக் களங்கத்தை உருவாக்கி விட்டதாகச் சொல்கிறார்களே?''

''இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு விவாத நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். அரங்கத்தில் தேசியக் கொடியை வைத்திருந்தார்கள். விவாதம் தொடங்கும் முன் என் சட்டையில் இந்திய தேசியக் கொடியை குத்தினார்கள். நான் விரும்பாதபோதிலும், இன்று குடியரசு தினம் அனைவரும் குத்திக்கொள்கிறார்கள் என்றார்கள். நான் முகதாட்சண்யத்துக்காகக் குத்திக்கொண்டேன். ஆனால், என் செயலுக்கு எவ்வித நியாயமும் கற்பிக்க முடியாது. இப்போதும் சொல்கிறேன் அந்தச் செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கிறேன்.''

''கட்சியையும் தாய்த் தமிழ்ப் பள்ளியையும் சரி யாக நடத்தவில்லை என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுவதிலேயே உற்சாகம் காட்டுகிறீர்கள்என்றும் உங்கள் கட்சித் தோழர்கள் குற்றம் சாட்டு​கிறார்களே?''

''தொலைக்காட்சி பணிகளையும் இயக்கப் பணியாகவே கருதுகிறேன். என் மீதான குறையைச் சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். நியாயமான கோபமும் தவறான புரிதலும் சேர்ந்து கொண்டதால் நான்கு பேர் கூடி அமைப்பு நெறிகளுக்குப் புறம்பாக முடிவெடுத்துள்ளார்கள். பொதுப்பேரவையைக் கூட்டி எல்லாவற்றையும் சரிசெய்து விடுவோம்.''

''2009 ஈழப் போருக்குப் பிறகு, தமிழ் தேசியக் குழுக்களுக்கு இடையே உருவான கருத்து முரண்​பாடுகளின் காரணமாக உங்களைப் பழிவாங்க சிலர் முயற்சி செய்கிறார்களா?''

''இல்லவே இல்லை. ஈழம் தொடர்பாகவும் தமிழ்த் தேசியம் தொடர்பாகவும் என்னோடு கருத்து மாறுபட்ட தோழர்களும் தலைவர்களும்கூட இந்த நெருக்கடியில் என் பக்கம் நிற்கிறார்கள். இதோடு இவனை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. தமிழ் தேசியத்துக்குத் தியாகு வேண்டும் என்று அவர்கள் நினக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு நான் தலை வணங்குகிறேன். இறுதியாக, எல்லாவற்றுக்கும் காலமும் என் செயல்பாடுகளும் பதில் சொல்லும்!''

- டி.அருள் எழிலன்

படங்கள்: ப.சரவணகுமார்

தியாகுவுக்குத் தடை!

''விஜி எனது மகள்... நான் அவளின் தந்தை!''

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகுவுக்கு ஆதரவு தெரிவித்து, கடந்த 27-ம் தேதி சென்னை, சூளைமேட்டில் தியாகுவின் தலைமையிலேயே ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில், 'இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகுவின் மீது இந்த அமைப்பு முழு நம்பிக்கை தெரிவிக்கிறது. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை நீக்க எல்லா தரப்பினரோடும் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை நியமித்து இருக்கிறோம்’ என்று முடிவு எடுத்தார்கள்.

அதே நாளில், ஈரோட்டில் தியாகுவின் எதிர்ப்பாளர்கள் ஒரு போட்டிக் கூட்டத்தை நடத்தினார்கள். அதில், 'தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தியாகுவை நீக்கிவிட்டு மோகன்ராசு என்பவரை புதிய பொதுச் செயலாளராக நியமித்துள்ளோம்’ என்று அறிவித்தார்கள். தியாகுவை மீண்டும் இயக்கத்தில் சேர்ப்பது குறித்து, ஒரு வருடம் கழித்து​தான் முடிவெடுப்பார்களாம்.

- ம.சபரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism