Published:Updated:

தேர்தல் நடந்ததா... இல்லையா?

நடிகர் சங்க கலாட்டா

##~##

'நடக்காத தேர்தலை நடந்த​தாகக் கூறி, யாரும்தேர்ந்து எடுக்காதவர்களை நிர்வாகி​களாக அறிவித்து, நல்லதொரு நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது தென்​னிந்திய நடிகர் சங்கம்!’- என்று சங்க உறுப்பினர்களே குமுறு​கிறார்கள்! 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமாரும், பொதுச்செயலாளராக ராதாரவியும் தேர்வு செய்யப்பட்டதில்தான் இப்படி ஒரு சர்ச்சை. 'இந்தத் தேர்தல் செல்லாது; இதை உடனடியாக ரத்து செய்து மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார், நடிகர் சங்க உறுப்பினர் பூச்சி முருகன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அவரிடம் பேசி​னோம். ''கலைவாணர் என்.எஸ்.கிருஷ்​ணன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்​களின் முயற்சியால் 1952-ல் தொடங்​கப்பட்டது தென்னிந்திய நடிகர் சங்கம். எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் என்ற நான்கு முதல் அமைச்சர்கள் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்​துள்ளனர். இத்தனை பெருமைகள் உடைய நடிகர் சங்கம், சிலருடைய சூழ்ச்சி வலையில் சிக்கி உள்ளது. சங்கத்​தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் தன்னிச்​சையாக நடத்தப்படும் தேர்தலால், குறிப்பிட்ட சிலரே நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து இருக்கின்றனர்.

தேர்தல் நடந்ததா... இல்லையா?

கடந்த ஆறு வருடங்களாக தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்பில் இருந்த சரத்குமாரும் ராதாரவியும் நடிகர் சங்கத்துக்காகவும், நலிந்த உறுப்பினர்​களுக்காகவும் எந்தக் காரியங்களையும்

தேர்தல் நடந்ததா... இல்லையா?

செய்யவில்லை. இவர்கள் செய்த ஒரே காரியம், நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பெருமுயற்சி எடுத்து நடிகர் சங்கத்துக்காக தி.நகரில் கட்டிய கட்டடத்தையும் காலி மனையையும் குத்த​கைக்கு விட்டதுதான். 29 ஆண்டுகளுக்கு காலி மனையை குத்தகைக்கு விட்டால், அதை இந்தக் காலத்தில் எப்படி மீட்க முடியும்? இவர்களின் சுயலாபத்துக்காக நடிகர் சங்கத்துக்கு என்று இருந்த ஒரே சொத்தையும் தாரை வார்த்து விட்டனர். அந்த விவரத்தையே மூன்று மாதங்கள் கழித்துத்தான், பொதுக்குழுவில் அறிவித்தார்கள். இதுதான் நேர்மை​யான நிர்வாகமா?

இதனால் இந்த முறை சங்கத்​துக்குத் தேர்தல் நடத்தினால் தோற்று விடுவோம் என்று பயந்து போன இருவரும், அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்த முற்பட்டனர். இதற்கு உடந்தையாக அவர்களுக்கு வேண்டப்பட்ட கவிஞர் பிறைசூடனை தேர்தல் அதிகாரியாக அவர்களே அறிவித்துக் கொண்டனர். அவர் நடிகர் சங்கத்துக்கு என்று சொசைட்டி பதிவு சட்டத்தின்படி உள்ள விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. சரத்குமாரையும் ராதா​ரவியையும் மீண்டும் தலைமைப் பொறுப்புகளுக்கு கொண்டுவருவதையே நோக்கமாக வைத்துக்கொண்டு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டார்.

தேர்தல் அறிவித்த பிறகு, தேவைப்படும் உறுப்பினர்களுக்கு வாக்காளர் பட்டி​யலை தேர்தல் அதிகாரி கொடுக்க வேண்டும். ஆனால், நானும் நடிகர் குமரிமுத்துவும் பலமுறை கேட்டும் எங்களுக்கு வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் அதிகாரி கொடுக்கவில்லை. ஏழு ஆண்டு காலம் நடிகர் சங்க உறுப்​பினர்களாக உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்பது சங்கத்தின் விதிமுறை. ஆனால், திடீரென இதை எட்டு ஆண்டுகள் என மாற்றினார் பிறைசூடன். இப்படி சங்கத்தின் விதிமுறைகளை எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் மாற்றுவதற்கு தேர்தல் அதிகாரிக்கு அதிகாரமே கிடையாது. தேர்தலை முறையாக நடத்த வேண்டியது மட்டுமே அவருடைய வேலை. இந்த திடீர் மாற்றத்தால், இந்த முறை போட்டியிடத் தயாராக இருந்த பல உறுப்பினர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டது.  

தேர்தல் நடைபெறும் நாளாக ஜூன் 10-ம் தேதியை அறிவித்து இருந்தனர். ஆனால், வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான மே 27-ம் தேதியே தேர்தல் முடிந்து விட்டதாக அறிவித்​துள்ளனர். தலைவராக சரத்குமாரும் பொதுச்செயலாளராக ராதாரவியும் தேர்ந்து எடுக்கப்​பட்டதாகவும் அவசர கதியில் அறிவித்துள்ளனர். சங்கத்தின் நிர்வாகிகள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டாலும்கூட, அவர்கள் பொதுக்குழுவைக் கூட்டி அந்தக் குழுவின் முன்னிலையில்தான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இப்போது நிர்வாகப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் ஒரு சிறிய அறைக்குள் அவர்களுக்குள்ளாகவே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். எனவேதான் விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக அவசர கதியில் நடைபெற்றுள்ள இந்தத் தேர்தலை ரத்துசெய்யக்கோரி நீதிமன்றத்தை நாடினேன். இப்போது, இந்த வழக்கில் சரத்குமார், ராதாரவி மற்றும் கவிஞர் பிறைசூடன் ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது'' என்று சொன்னார்.  

பூச்சி முருகன் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து நடிகர் ராதாரவியை போனில் தொடர்பு கொண்டு கேட்டோம். ''பூச்சி முருகன் நடிகர் சங்கத் தேர்தல் பற்றி பேசுவதற்கு தகுதி அற்றவர். தேர்தல் அதிகாரி எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. நாங்களும் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. நாங்களும் இந்தப் பிரச்னையை சட்டப்படி சந்திப்போம்'' என்றார்.

தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட கவிஞர் பிறை​சூடனிடம் கேட்டோம். ''தகுதி பெற்ற வேட்பாளர் எவரோ அவருக்கு மட்டுமே வாக்காளர் பட்டியல் தர வேண்டும் என்பதுதான் விதி. அதன்படிதான்  செயல்பட்டேன். சங்க பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட விதிமுறைகளின் படிதான் நான் செயல்பட்டேன். நானாக எந்த விதிமுறையையும் சேர்க்கவும், மாற்றவும் இல்லை. பூச்சிமுருகன், நடிகர் சங்கத் தலைவர்கள் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறார். அதனால்தான் இப்படி தேவையில்லாத பிரச்னையை கிளப்புகிறார்'' என்றார்.

இந்த விவகாரம் இப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்குப் போய் இருக்​​கிறது. ஏற்கனவே, நடிகர் சங்க இடத்தில் கட்டடம் கட்டுவது தொடர்பாக தாக்கல் செய்யப்​பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. என்ன தீர்ப்பு வரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்​போம்!

- ஜோ.ஸ்டாலின்