Published:Updated:

பெட்ரோல் தட்டுப்பாடு - ஏன்... எதற்கு.. எப்படி?

பெட்ரோல் தட்டுப்பாடு - ஏன்... எதற்கு.. எப்படி?

##~##

திர்க் கட்சிகள், உதிரிக் கட்சிகள், கூட்டணிக் கட்சிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள்... என்று பாரபட்சம் இல்லாமல் எல்லாத் தரப்புகளில் இருந்தும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்புகள். மன்மோகன் சிங், சோனியா காந்தி மட்டும்தான் இன்னும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. 

திடீரென, லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி னாலே, தாங்கிக்கொள்ள முடியாத நடுத்தர வர்க்கத்தினரால் லிட்டருக்கு ஏழரை ரூபாய் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அதனால் அறிவிப்பு வெளியான வேகத்தில், பெட்ரோல் பங்க்குகள் வாசலில் கூட்டம் மொய்க்கத் தொடங்கியது. விலையேற்றத்துக்கு முன்னால் பெட்ரோலை நிரப்பிக்கொண்டால், ஏதோ கொஞ்ச ரூபாயை மிச்சப்படுத்த முடியுமே என்றுதான் அவசரப்பட்டார்கள். இப்படி எல்லாம் மிச்சப்படுத்த நினைத்தால் விடுவார்களா என்ன? உடனே பங்க்கு களை மூடினார்கள். அதனால், உண்மையிலேயே பெட்ரோல் போட நினைத்தவர்களும் போட முடியாமல் தவித்தார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெட்ரோல் தட்டுப்பாடு  - ஏன்... எதற்கு.. எப்படி?

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் லிட்டருக்கு 100 ரூபாய் கொடுக்கத் தயாராக இருந்தாலும்கூட எங்கும் பெட்ரோல் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பெட்ரோல் பங்க் வாசலிலும் வாகனங்கள் தவம் கிடந்தன. அதற்கு என்ன காரணம்?

பொதுவாக விலை ஏறும் பொருட்களை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். சில பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அதில் ஒன்று தங்கம். அதன் விலை எவ்வளவு உயர்ந்தாலும், நடுத்தர மக்கள் தொடர்ந்து வாங்கிக்கொண்டே இருப்பார்கள். ஏனென்றால், இப்போதும் வாங்கவில்லை என்றால் இனி எப்போதும் வாங்க முடியாது என்ற பயம்தான் முக்கியக் காரணம். இப்போது தங்கத்தைப் போலத் தான் பெட்ரோலையும் பார்க்கிறார்கள் மக்கள்.

பெட்ரோல் தட்டுப்பாடு என்றதுமே, கைவசம் பெட்ரோல் வைத்திருந்தவர்கள்கூட மேலும் வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்ள நினைத்தார்கள். டூ வீலர், கார்களில் செல்பவர்களுக்கு, பெட்ரோல் இல்லை என்ற காரணத்தால் பஸ் போன்ற பொதுப் போக்கு வரத்து வாகனங்களில் செல்வதற்கு விருப்பம் இல்லை. அதனால், எப்படியும் பெட்ரோல் வாங்கியே தீருவது என்று கால் கடுக்க நின்றார்கள்.

இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் காஞ்சிபுரத்தைத் தாண்டி இருக்கும் பெட்ரோல் பங்குகளில் இருந்து பெரிய பெரிய பேரல்களில் பெட்ரோலையும் டீசலையும் சென்னைக்குக் கொண்டுவந்து கூடுதல் விலைக்கு விற்றார்கள். நிலைமை எல்லை தாண்டிப் போனது. அதன் பிறகுதான் கொச்சியில் இருந்து பெட்ரோலையும் டீசலையும் கொண்டுவந்து நிலைமையைச் சரிசெய்தார்கள்.

இது செயற்கையாக உருவாக்கப்பட்ட தட்டுப் பாடு என்று பலரும் சொன்னார்கள். விலை ஏற்றத்தை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது என்று பேசிக்கொண்டார்கள். ஆனால் பெட்ரோல் டீலர்கள் சங்கத் தலைவர் கண்ணன் இதை மறுக்கிறார். ''பெட்ரோல் உயர்வு என்பது இந்தியா முழுமைக்குமான விஷயம். அரசாங்கத்தால் இந்தத் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டது என்றால், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்னை ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால், சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தட்டுப் பாடு ஏற்படவில்லை. எண்ணெய் நிறுவனங்கள் சரியாக சப்ளை செய்யாததே இதற்குக் காரணம். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், மெட்ராஸ் ரீஃபைனரீஸ் லிமிடெட் இரண்டும் அந்த நாளில் பராமரிப்புப் பணிகளுக்காக பெட்ரோல் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி இருந்தார்கள். அதனால்தான் இந்தத் தட்டுப்பாடு'' என்றார்.

இந்த நிலையில் சில கேள்விகள் எழுகின்றன...

 உலகம் முழுக்க இருக்கும் அரசுகள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் அவசியத் தையும் விழிப்பு உணர்வையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறது. ஆனால், இந்தியாவில் இது வரை, அப்படி ஒரு பிரசாரம் ஏன் தொடங்கவே இல்லை?

 இந்திய பெட்ரோல் மற்றும் டீசல் தேவையில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையிலும்கூட, உலகின் முக்கியமான கார் நிறுவனங்களின் சந்தையாக ஏன் இந்தியா இருக் கிறது?

அத்தியா வசியப் பொருட்கள் விலை உயரக்கூடாது என்பதற்காக டீசல் விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு இன்னும் தன்வசம் வைத்திருக்கிறது. டிராக்டர், லாரிகளுக்கு மானிய விலையில் கொடுக்கப்படும் டீசல், சொகுசு கார்களுக்கு ஏன் போய்ச் சேர வேண்டும்? இப்போதைய நிலையில் இரண்டு லட்சம் டீசல் கார்களுக்கு ஆர்டர்கள் இருக்கின்றன. இது அதிகரிக்கவே செய்யும். மானிய விலை டீசலை சொகுசுக் கார் வைத்திருப்பவர்களுக்குக் கொடுப்பது நியாயமா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்தால், பெட்ரோல் விலை குறையத் தொடங்கி விடும்.

- வாசுகார்த்தி, படம்: வி.செந்தில்குமார்