Published:Updated:

களத்தில் புதியவர்கள்... கலக்கத்தில் பழையவர்கள்!

போலீஸ் ஸ்டோரி

களத்தில் புதியவர்கள்... கலக்கத்தில் பழையவர்கள்!

போலீஸ் ஸ்டோரி

Published:Updated:
##~##

ரண்டு மாதங்கள் ஆகியும் குற்றவாளிகளை நெருங்க முடியாத ராமஜெயம் கொலை வழக்கு, திருச்சி போலீஸுக்கு அவமானச் சின்னம்தான். அதனால்தானோ என்னவோ, இந்த வழக்கை விசாரித்து வரும் ஸ்பெஷல் டீமில் சில மாற்றங்கள் அரங்கேற... மீண்டும் சூடு பிடிக்கிறது ராமஜெயம் கொலை வழக்கு. 

திருச்சி மாநகரக் கமிஷனராக இருந்த சைலேஷ்குமார் யாதவ் தேர்தல் பார்வையாளராக ஆந்திராவுக்குச் சென்றுவிட, அந்தப் பதவிக்கு இன்சார்ஜ் ஆக டி.ஐ.ஜி. அமல்ராஜ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதுவரை, 'விசாரணை நடத்துகிறோம்’ என்ற பெயரில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களும், வெட்டியாகத் திரிந்தவர்களும் தனிப் படையில் இருந்து அகற்றப்பட்டு, திறமை யாளர்களைக்கொண்ட புதிய ஸ்பெஷல் டீம்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.

ராமஜெயம் கொலை விவகாரத்தைத் துப்புத் துலக்குவதற்காக அமைக்கப்பட்ட ஏழு தனிப் படைகளில்,

களத்தில் புதியவர்கள்... கலக்கத்தில் பழையவர்கள்!

ஒன்றிரண்டைத் தவிர மற்றவை எல்லாம் பெயரளவுக்கே இயங்கி வந்தன. 'மெரீனா’ படத்தின் காமெடிபோலத்தான் பல காட்சிகள் இருந்துள்ளன. ''ஒரு டீமின் இன்ஸ்பெக்டர் விசாரணைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு தனது மகனை கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் செல்வதில்தான் காலத்தை ஓட்டினார். இன்னொருவர், 'வெயில் கடுமையாக இருக்கிறது’ என்ற காரணத்தைச் சொல்லி, பகலில் வெளியே வரவே மாட்டார். இன்னும் சிலரோ கன்டோன்மென்ட், ஜங்ஷன் பகுதிகளில் உள்ள பார்களில் முகாமிட்டு ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.  

ராமஜெயம் கொலையான மார்ச் 29-ம் தேதி அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரத்தில் திருச்சி தில்லை நகர், ஸ்ரீரங்கம் பகுதிகளில் செல்போன் தொடர்புகளில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தப் பகுதிகளில் பெண்கள் விடுதிகளில் தங்கி இருந்த சிலர், தங்களது பாய் ஃப்ரெண்ட்களிடம் அந்த நேரங்களில் அளவளாவிக்கொண்டு இருந்து இருக்கிறார்கள். அதைத் தெரிந்துகொண்ட ஸ்பெஷல் டீம் போலீஸாரில் சிலர், அவர்களிடம் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி மிரட்டி கடலை போடத் தொடங்கி விட்டார்கள்.  

இதைவிடக் கொடுமையாக ராமஜெயத்தின் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் விசாரணைக்குச் சென்ற போலீஸாரில் சிலர், பெரிய அளவுக்குப் பணம் சுருட்டிக் கொண்ட சம்பவங்களும் நடந்திருக் கின்றன. 'குற்றவாளிகளைத் தேடி வெளியூர்களுக்குச் சென்று வர வாகன வாடகை, அங்கே தங்குவதற்கு லாட்ஜ் கட்டணம்’ என்று கேட்டு மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் மூலம் நேரு குடும்பத்தினரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருக்கிறார்கள். 'எப்படியாவது உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்தால் சரி’ என தாராள மாகவே அவர்களும் பணத்தை அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள்.

ராமஜெயத்துக்கு நெருக்கமாக இருந்த உறவுக்கார இளைஞரிடம்  நடத்திய விசாரணையின்போது, அவர் குறுகிய காலத்தில் ஏகப்பட்ட சொத்துக்களைச் சேர்த்த விவரத்தை அறிந்துகொண்டது ஒரு ஸ்பெஷல் டீம். 'இந்தச் சொத்துக்களை வாங்க வருமானம் எப்படி வந்தது?’ என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகளைப் போல் பாவனை காட்டி அவர்கள் விசாரிக்க... தாராளமாக 'கவனித்து’ ஸ்பெஷல் டீமின் வாயை

அடைத்தார் அந்த இளைஞர். இந்தத் தொகை உயர் அதிகாரிகள் வரை பங்கிட்டுப் பிரித்துக்கொள்ளப்பட்டதாக டி.ஜி.பி. வரை புகார் போனது'' என்கிறது புகார் பட்டியல்.

கடந்த வாரம் திருச்சிக்கு விசிட் அடித்து விசாரணை மேற்கொண்டார் டி.ஜி.பி. ராமானுஜம். விஷயங்களை முழுமையாக ஆய்வு செய்தவர், 'எஸ்.பி. ரேங்கில் உள்ள நேர்மையான சில அதிகாரிகளை நியமித்து புதிய ஸ்பெஷல் டீம்களை உருவாக்கி, குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள்’ என்று உத்தரவிட்டுச் சென்று இருக்கிறார். மூன்று புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக் கிறார்கள். பழைய ஸ்பெஷல் டீம்களை முற்றிலுமாகக் கலைத்து விட்டால், அது பலத்த சர்ச்சைகளை உருவாக்கும் என்பதால், இப்போதைக்கு இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் தலைமையில் இயங்கி வந்த ஒரே ஒரு டீமை மட்டும் முதல்கட்டமாக கலைத்து இருக்கிறார்கள். மற்ற டீம்களின் தலைமையை மட்டும் மாற்றி அமைத்து இருக்கிறார்கள். சரியாக செயல்படாத டீம் மெம்பர்கள் படிப்படியாக மாற்றப்படுவார்களாம்.

திருவாரூர் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், நாகப்பட்டினம் ஏ.டி.எஸ்.பி மணிவண்ணன், வல்லம் ஏ.எஸ்.பி விஜயகுமார் ஆகிய மூவரும் மூன்று ஸ்பெஷல் டீம்களுக்குத் தலைமை ஏற்றுள்ளனர். 'மூன்று பேருமே நேர்மையானவர்கள், யாருக்கும் வளைந்து கொடுக்காதவர்கள்’ என்கிறது காவல்துறை வட்டாரம்.

சேவியர் தன்ராஜ், திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாகப் பதவி ஏற்ற புதிதில், தமிழகத்தின் அதிகார மையமாகச் செயல்படும் திவாகரனைச் சென்று சந்திக்கும்படி பலரும்  சொன்னார்களாம். 'எந்த அரசுப் பதவியிலும் இல்லாதவரை நான் எதற்குப் போய் சந்திக்க வேண்டும்?’ என்று, மறுத்து விட்டாராம் சேவியர். 'போலீஸ் பதவியின் கௌரவத்தை எதற்காகவும் அடகு வைக்காதவர்’ என்றும் ஒரு குரூப் சொல்கிறது.

நாகப்பட்டினம் ஏ.டி.எஸ்.பி மணிவண்ணன் அதிரடிக்குப் பெயர் போனவர். அதனாலேயே நீண்ட நாட்கள் எந்த ஊரிலும் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் ஊர் ஊராக இடமாற்றம் செய்யப்பட்டு, சுற்றிக் கொண்டு இருக்கிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் புதுக்கோட்டையில் பணிபுரிந்தபோது தி.மு.க. புள்ளி ஒருவருக்குச் சொந்தமான லாட்ஜில் விபசார ரெய்டு நடத்தியதற்காகப் பரபரப்பாகப் பேசப்பட்டவர். சமீபத்திய சாதனையாக, 'ஒரு வாரத்துக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த திவாகரனை, தானே வலிய வந்து சரணடையும்  வியூகம் வகுத்தவர்’ என்று பெருமையாகச் சொல்கிறது காக்கி வட்டாரம்.

வல்லம் ஏ.எஸ்.பி. விஜயகுமார், ஒரு மருத்துவர். சிவில் சர்வீஸ் தேர்வில் ஐ.ஏ.எஸ். கிடைத்த போதும் காவல்துறை பதவி மீதுகொண்ட காதல் காரணமாக ஐ.பி.எஸ்-ஸைத் தேர்வு செய்து, போலீஸ் துறைக்கு வந்தவர். தொழில்நுட்பத் துறை மீதும் ஆர்வம் உள்ளவர். ராமஜெயம் கொலை வழக்கைத் துப்புத்துலக்க உயிரியல், மருத்துவ, தொழில்நுட்ப ரீதியான விஷயங்களுக்கு இவரைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது திருச்சி மாநகர போலீஸ்.

இவர்கள் தவிர, பொன்மலை உதவி கமிஷனராக இருக்கும் ஸ்ரீநிவாசன் ஸ்பெஷல் டீமில் இடம் பெற்றிருக்கிறார். இவர், பொன்மலை அ.தி.மு.க. பகுதிச் செயலாளர் கேபிள் சேகர் கொலை வழக்கு, மனைவியை கூலிப்படை வைத்து கொலைசெய்ய முயன்ற கணவன், கள்ளக் காதலுக்கு இடையூராக இருந்த குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் என்று பல வழக்குகளில் திறமையாகத் துப்புத் துலக்கியவர்.

புதிதாகப் பொறுப்பு எடுத்துள்ள ஒரு டீம், திருச்சியில் உள்ள ஆட்டோமொபைல் மெக்கானிக் நிறுவனங்களுக்குச் சென்று விசாரணையில் இறங்கி உள்ளது. மார்ச் 29-ம் தேதி மற்றும் அதற்கு பிந்தைய தினங்களில், ஸீட் ரிப்பேர் செய்ய, பெயின்ட் அடிக்க, வாட்டர் வாஷ் செய்ய வந்த வாகனங்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தனர். அந்த வாகன உரிமையாளர்களின் பின்னணி விவரங்களைத் தோண்டி துருவி வருகிறது.

இன்னொரு டீம் கொலை நடந்த நாளில், திருச்சியில் உள்ள லாட்ஜ்களில் தங்கி இருந்த நபர்களின் பின்னணியை விசாரிக்கிறது. மற்றொரு டீம். தில்லை நகர் ஏரியாவில் ஓர் ஆண்டுக்குள் புதிதாக குடியேறியவர்களின் விவரங்களைச் சேகரித்து, அவர்களின் முந்தைய வரலாற்றை அறியும் முயற்சியில் இறங்கி உள்ளது. புதியவர்களின் விறுவிறுப்பைக் கண்டு பழைய ஆட்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். இதுவரை வாங்கிய பண விவகாரம் தொடங்கி பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் ஆபத்து என்று கலங்குகிறார்கள்.

ஜூன் 20-ம் தேதி, சைலேஷ்குமார் யாதவ் தேர்தல் பார்வையாளர் பணியை முடித்துவிட்டு ஊர் திரும்புவதற்குள் ராமஜெயம் கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்போடு களம் இறங்கியுள்ளார் டி.ஐ.ஜி. அமல்ராஜ்.

பார்க்கலாம்!

- அ. சாதிக்பாட்சா