Published:Updated:

தமிழகத்தில் கெளரவக் கொலை அபாயம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஜி.ஆர்.

தமிழகத்தில் கெளரவக் கொலை அபாயம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஜி.ஆர்.

Published:Updated:
##~##

ந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்புகள் குறையவே இல்லை. இதற்கு சமீபத்திய உதாரணம், பா.ம.க-வின் எம்.எல்.ஏ-வான குரு மாமல்லபுரத்தில் பேசிய பேச்சு. இந்நிலையில், சாதி மறுப்புத் திருமணத்துக்கு ஆதரவாக தனிப்பிரசாரத்தை நடத்த இருக்கிறது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். 

''சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை, கௌரவக் கொலை செய்யும் அபாயம் தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன், வேதாரண்யம் பகுதியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த ஒரு பெண்ணை நிர்பந்தப்படுத்தி தற்கொலை செய்ய வைத்து இருக்கிறார்கள். போலீஸ் தலையிட்டதால் பையனின் உயிர் மட்டும் தப்பியது. இதுபோன்ற வன்செயல்களைக்  கிள்ளி எறியாவிட்டால், பெரும் சமூகமோதல் ஏற்படவும், மக்கள் ஒற்றுமை சீர்குலை யவும் நாமே காரணம் ஆகிவிடுவோம்.

தமிழகத்தில் கெளரவக் கொலை அபாயம்!

பெரியார், அம்பேத்கரின் கொள்கைகளின் பின்னால் செல்வதாகச் சொல்லிக்கொள்ளும் ராம தாஸை மேடையில் வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட சாதியினரை சாதி மறுப்புத் திருமணம் செய்யும் இளைஞர்களை வெட்டுவேன், குத்துவேன் எனப் பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார் குரு. இது அடிப்படை நாகரிகமற்ற செயல் மட்டும் அல்ல, சட்டத்துக்கும் விரோதமானது. இதுபோன்ற சாதி வெறியூட்டும் பேச்சுகள்தான், கௌரவக் கொலை செய்வதற்கான துணிவைத் தருகின்றன. வட மாவட்டங்களில் சாதி மோதல் கூடாது என வலியுறுத்திப் பேசிவரும் டாக்டர் ராமதாஸ், குரு பேசியது தவறு என்று கூறாததும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

குருவின் இந்தப் பேச்சு, குறிப்பிட்ட சாதி மக்களின் வாக்குகளைத் திரட்டுவதற்காகப் பேசப்பட்டதாகவே தெரிகிறது. பெரியார், அம்பேத்கர் பற்றி பேசிக் கொண்டே, சில பதவிகளைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, சாதி வெறியைத் தூண்டுவது வேதனை அளிப்பதாகும். இதைத் தவறு என தடுத்து நிறுத்துவது, இங்குள்ள சமூக சீர்திருத்த இயக்கங் களின் உடனடிக் கடமை.

அண்மையில், கரூரில் கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை எனும் அமைப்பின் சார்பில், ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன் தலைப்பே, 'கலப்புத் திருமணம் எதிர்ப்புப் பிரசார இயக்கம்’ என்பதுதான். அங்கே பகிரங்கமாகவே, சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்டது. ஏற்கெனவே, கொங்கு மண்டலத்தில்தான் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்களை, சாதிக் கௌரவத்துக்காக கொலைகள் செய்வதாக அரசு சாரா அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதுமட்டும் அல்ல, தமிழ்நாடு பிராமணர் சங்கமும் அண்மைக் காலமாக அமைப்பு ரீதியாகவும் பத்திரிகை வாயிலாகவும், 'சாதி மறுப்புத் திருமணம் செய்யக் கூடாது’ என தீவிரப் பிரசாரம் செய்து வருகிறது.

ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தைக் காணும் சமூக சீர்திருத்தப் போரில், சாதி மறுப்புத் திருமணம் ஒரு முக்கிய அம்சம். ஆனால், தங்களின் சுயநலத்துக்காக, உழைக்கும் மக்கள் மத்தியில் சாதிய உணர்வை உசுப்பி விட்டு, அதில் குளிர்காய நினைப்பவர்கள், சமுதாயத்தை மீண்டும் காட்டுமிராண்டி காலத் துக்குத்தான் இழுத்துச் செல்கிறார்கள். நாகரிக சமுதா யத்தைச் சேர்ந்த யாராலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இப்போது உலகமயம் காரணமாக சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கை பல நெருக்கடி களுக்குள் சிக்கியுள்ள நிலையில், சாதிய உணர்வைக் கிளறிவிடுவது என்பது ஆடிக்காற்றில் பற்றிப் படரும் காட்டுத் தீயை வளர்ப்பது போன்றது. அதனால், சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிரான பிரசாரம் ஒரு புறமும், அப்படிச் செய்பவர்களைத் தாக்க வேண்டும் எனத் தூண்டுவதும் கௌரவக் கொலை செய்பவர்களை ஊக்குவிப்பதுதான். எனவே, சமூகத்தை அநாகரிக காலத்துக்கு இழுத்துச் செல்லும் இந்த சாதிய வன்முறையைத் தடுக்க, தமிழக அரசு தனி சட்டத்தை இயற்ற வேண்டும்.

நாங்கள் எங்கள் கட்சி சார்பாக, சமூக ஒற்றுமைக் கான உந்துதலாக சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்தும் கௌரவக் கொலைகளைத் தடுக்கவும் கோரி, தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறோம். பெரியாரின் பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் கட்சிகள், தாங்களாகவே இதை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் இன்னும் அவர்கள் மௌனம் காப்பது ஆச்சர்யம் அளிக்கிறது' என்று ஆதங்கப்பட்டார்.

நேர்மையான ஆதங்கம் இது!

- இரா. தமிழ்க்கனல்