Published:Updated:

நான் கேட்க விரும்பும் ஒரே வார்த்தை... மன்னிப்பு!

கலைக் குடும்பத்தில் மறுபடியும் இணையும் வனிதா

##~##

மாதம் ஒருமுறை ஏதாவது போலீஸ் ஸ்டேஷனில் வந்து நிற்பார் வனிதா விஜயகுமார். தன் அப்பா விஜயகுமார், அம்மா மஞ்சுளா ஆகியோர் மீதே புகார் கிளப்பி வந்தவர், மீண்டும் தனது கலைக் குடும்பத்துடன் ஐக்கியம் ஆகப்போகிறார் என்ற தகவல் கிடைத்தது. 

சினிமாவில் நடிக்கப் போகிறார், இரண்டாவது கணவரையும் பிரிந்து விட்டார், முதல் கணவருடன் வாழ்கிறார் என்று வனிதாவைச் சுற்றித்தான் எத்தனை வதந்திகள். என்னதான் நடக்கிறது?

''2000-ம் ஆண்டு எனக்கும் ஆகாஷ§க்கும் திருமணம். அப்போது எனக்கு 18 வயசுதான். மண மேடையில் உட்காரும்போதே, 'இந்தக் கல்யாணம் நிலைக்காது’னு நினைச்சு யாரும் உட்காருவது கிடையாது. ஆனால், சூழல்அப்படி ஏற்பட்​டால் என்ன செய்வது? தவறுகள்செய்து கற்றுக்கொண்​டால்தான்... அனுபவம் கிடைக்கிறது.

நான் கேட்க விரும்பும் ஒரே வார்த்தை... மன்னிப்பு!

ஆகாஷை விட்டுப்பிரிய நான் எடுத்த முடிவு எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்கலை. எதையும் மூடிமறைக்க முடியலை. மீடியா பெரிசாக்கிடுச்சு. ஒரு பக்கம் என் குடும்பம் இருந்தது. என்னுடைய சுயநலத்தையும் அப்ப பார்க்க வேண்டி இருந்தது. நான் ஆகாஷ் மீது தப்பு சொல்லலை. என் வாழ்க்கையை நான் வாழ்ந்துதான் ஆகணும். என்கூட கடைசி வரைக்கும் யார் நிற்பாங்கன்னு கவலை வந்துச்சு. கோபப்பட்டேன். கோபப்பட்டால் அதை ஊதி வளர்க்கிறதுக்கு நாலு பேர் கூடவே இருப்பாங்க. எம்.பி.ஏ. படிச்ச திமிர் வேறே. எதையும் நம்மால் சமாளிக்க முடியும்னு கொஞ்சம் அகந்தை. அப்புறம், ஆகாஷ் போன பின்னாடி பார்த்தால்... தனிமை. ஒண்ணும் செய்ய முடியலை. சப்போர்ட் இல்லாம இருக்கவே முடியாதுன்னு நினைச்ச நேரம், இரண்டாவதா இவர் வந்தார். ரொம்ப எச்சரிக்கையாத்தான் இருந்தேன். அதுவும் சரியில்லைன்னு அப்புறம்தான் உறைச்சது.

அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஏதேதோ பேச ஆரம்பிச்சேன். எனக்கு புத்தி கெட்டுப்போச்சு. ஒரு கொலைகாரனைக் கேட்டால், அவனுக்கு அந்தச் செயலைச் செய்ததில் ஒரு சின்ன நியாயம் இருக்கும். திருடனுக்குக்கூட இருக்கும். அப்படித்தான் எனக்கும் ஆனதோ என்னவோ? இப்ப யோசிச்சுப்பார்த்தா, என்னை மன்னிக்க எனக்கே டயம் ஆகும்னு தோணுது. ஏதோ குருஷேத்ர யுத்தம் மாதிரி நினைச்சுக்கிட்டேன். என் பேர்லதான் தப்பு இருக்கு. எனக்கு சுயபுத்தி இல்லை. சொல்புத்தி இருந்தது. எவ்வளவு தூரம் பாதிக்கும்னு யோசிக்காமல் ஏதேதோ பேசிட்டேன். 'சில நேரங்களில் சில மனிதர்கள்’னு சொல்வாங்க. நானும் அப்படி ஆகிப்போயிட்டேன். ஒன்றரை வருஷம் ரொம்பக் கஷ்டப்பட்டேன். பெரிய நிறுவனங்​களில் நல்ல வேலை பார்த்தேன். ஆனால், வீட்டுக்கு வந்தால் நிம்மதியே இல்லை. என் 11 வயசு மகனுக்குக்கூட என்னைப் பிடிக்காமப் போயிடுச்சு. அப்பா எங்களை, 'தென்பாண்டிச் சீமையிலே’ பாட்டைப் பாடித்தான் தூங்கவைப்பார். ஒரு கல்யாணத்​​துக்குப் போய், அந்தப் பாட்டைக் கேட்டுட்டு, அங்கேயே துடிச்சுத் துடிச்சு அழுதது எல்லாம் நடந்தது.

சமீபத்தில், அம்மாவுக்கு போன் செய்தேன். அம்மா எடுக்கலை. யாரோ எடுத்து அம்மா ஆஸ்பத்திரியில இருக்காங்கன்னு சொன்னாங்க. அப்புறம் என்ன செய்றதுன்னு புரியாமப் பயந்துக்கிட்டே அப்பா​வுக்கு டயல் செய்தேன். 'வணக்கம் விஜயகுமார்’னு குரல் வந்துச்சு. 'அப்பா’ன்னு உயிரைப் பிடிச்சுக்​கிட்டுக் கூப்பி ட்டேன். 'என்னம்மா சொல்லு’னு பதற்றம், கோபம், வெறுப்பு எதுவும் இல்லாமப் பேசினார். ஹாஸ்பிட்ல் போய் அம்மாவைப் பார்த்தேன். அப்படியே உசுரு கரைஞ்ச மாதிரி இரண்டு பேரும் அழுது தீர்த்தோம். அப்பா அரவணைச்சுப் பேசியது, என்னை செருப்பால் அடிச்ச மாதிரி இருந்துச்சு. எந்த மீடியாவில் என் குடும்பத்தைப்பத்தி தப்பாகப் பேசினேனோ, அவங்க முன்னிலையிலேயே என்னைப் பெத்தவங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

எனக்கு எதுவும் வேண்டாம். இந்தக் கொஞ்ச நாளில் நிறையவே கத்துக்​கிட்டேன். எனது அருமை​யான நண்பர் ஒருவர், குடும்பம் சேருவதற்கு முயற்சி எடுத்தார். ஆகா​ஷோடு சமாதானம் ஆனேனே தவிர, சேர்ந்து வாழலை. எல்லாத்​தையும் உணர்கிற இடம் வந்தாச்சு. எல்லோரும் என்னை மன்னிக்கிறதுதான் எனக்குப் பெரிய ஆறுதலா இருக்கும். கோபத்தால் நான் இழந்தது நிறைய. இவ்வளவு பெரிய குடும்பத்தின் பாசத்தை விட்டுட்டுப் போனது தப்பு. சினிமாவில் இருக்கிற எல்லோருமே எமோஷனல் ஆட்கள்தான். நான் உச்சம் வரைக்கும் போயிட்டேன். அதுதான் தப்பு. என்னை ஏத்துக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும், எல்லோரும் என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லும் வனிதாவின் கண்களில் கண்ணீர் தளும்பி நிற்கிறது. என்ன நடக்கிறது என்று புரியாமல் இரண்டு குழந்தைகளும் திகைத்து நிற்கின்றன!

- நா.கதிர்வேலன்

படம்: சு.குமரேசன்