Published:Updated:

ஆபாசப் பேச்சு கேட்க வா!

இளசுகளைக் கெடுக்கும் செல்போன் நட்பு

ஆபாசப் பேச்சு கேட்க வா!

இளசுகளைக் கெடுக்கும் செல்போன் நட்பு

Published:Updated:
##~##

தேசிய நெடுஞ்சாலையில் பெண்களை நிறுத்திவைத்து, ஜொள்ளர்களிடம் இருந்து பணத்தையும் நகையையும் அபேஸ் செய்யும் வழிப்பறிக் கொள்ளையர்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதே வழியில்தான் இப்போது பணம் பறிக்கின்றன, சில செல்போன் நிறுவனங்கள்! 

புதுப்புது ஐடியாக்களில் காசைக் கறப்பதில் செல்போன் நிறுவனங்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஒரு நிறுவனம் ஏதாவது ஒரு புதிய திட்டத்தை அறிவித்தால், அடுத்த சில நாட்களிலே மற்ற நிறுவனங்களும் அதே திட்டத்தை, வேறு பெயரில் அறிமுகம் செய்துவிடும். அந்த வகையில் இப்போது இளைஞர்களைக் குறிவைத்துக் காசைக் கறக்கும் புதிய திட்டத்தின் பெயர், 'நட்பு வட்டம்.’

இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களுக்கு, இந்த நட்பு வட்டம் குறித்து ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். வந்து இருக்கலாம். அல்லது விரைவில் வரும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாமல் எஸ்.எம்.எஸ். வரும். அந்தக் குறுந்தகவலை நீங்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். என்றாவது ஒரு நாள் ஆர்வக்கோளாறில் பதில் அனுப்பிவிட்டால், உடனே உங்களுக்கு 13 இலக்கங்கள்கொண்ட ஓர் அடையாள எண் வழங்குவார்கள். இந்த நேரத்தில் உங்கள் பில்லில் 30 ரூபாய் ஏறி இருக்கும். அதன்பிறகு, உங்களுக்கு ஏராளமான மிஸ்டு கால்கள் வரத் தொடங்கும். அந்த எண்களுக்கு நிச்சயமாக நீங்கள் டயல் செய்வீர்கள். அப்போது எதிர்முனையில் ஸ்வீட் வாய்ஸில் ஒரு பெண் கொஞ்சுவார்.

ஆபாசப் பேச்சு கேட்க வா!

நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும், உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவதுமாதிரி மென்மையாகப் பதில் சொல்வார். நீங்கள் நாகரிகம் மறந்து ஆபாசமாகப் பேசினாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார். எதற்காகவும் கோபப்பட மாட்டார். நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் செக்ஸியாகப் பதில் வந்துகொண்டே இருக்கும். நீங்கள் உடனே சுதாரித்து உங்கள் செல்போன் இணைப்பைத் துண்டிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கில் பணம் எகிறிக்கொண்டே இருக்கும்.

வழக்கமாக ஏதாவது ஓர் எண்ணுக்கு நீங்கள் அழைத்தால், எதிர்முனையில் இணைப்பு கிடைத்த பிறகுதான் மீட்டர் ஓடும். ஆனால் இந்தத் திட்டத்தில் மட்டும், நீங்கள் டயல் செய்த உடனே மீட்டர் ஓடத் தொடங்கும். ஒரு நிமிடத்துக்கு இரண்டு ரூபாய் கட்டணம். எஸ்.எம்.எஸ். கொடுப் பதற்குக்

ஆபாசப் பேச்சு கேட்க வா!

கட்டணம் ஒரு ரூபாய். வெவ்வேறு எண்களில் இருந்து மிஸ்டு கால் வரும். எடுக்கவும் முடியாது, எடுக்காமல் இருக்கவும் முடியாது என்று தடுமாறி ஏமாறுபவர்கள் அதிகம்.

இந்த நட்பு வட்டார சீட்டிங் குறித்து ஏராளமான நபர்கள் ஏகப்பட்ட பணத்தைத் தொலைத்து, நமக்குப் புகார் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். களம் இறங்கினோம்.

வெளிநாடுகளில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த 'செக்ஸ் கால்’ என்பதைத்தான் 'நட்பு வட்டம்’ என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இங்கு களம் இறக்கி உள்ளனவாம். நட்பு வட்டப் பெண்கள் பேசும் அத்தனையும் அதிர்ச்சி ரகம்!

காலர் 1 - மேலூர் அமுதா:

ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசியவர், தனது பெயர் சசிகலா, வயது 22 என்று முதல் தூண்டிலைப் போட்டார். அடுத்தடுத்து இரண்டு நாட்கள் பேசியபோது, கொஞ்சம் கொஞ்சமாகப் புதுப்புதுத் தகவல்களைச் சொல்லி ஆர்வத்தைத் தூண்டினார். அதன் பிறகு நம்மைப் பற்றி அறிமுகம் செய்து உண்மையைக் கேட்டோம். மிகவும் தயக்கத்துக்குப் பிறகு பேசினார். ''என் நிஜப் பேர் அமுதா. எனக்கு 38 வயசாச்சு சார். ஏற்கெனவே கல்யாணம் ஆன ஒருத்தனுக்கு விஷயம் தெரியாமக் கழுத்தை நீட்டிட்டேன். ஒரு புள்ளையக் குடுத்துட்டுப் போயிட்டான். கிடைச்ச வேலைகளுக்குப் போய் என் புள்ளையையும், என்னோட அம்மாவையும் காப்பாத்திட்டு வந்தேன். அப்போ எனக்குத் தெரிஞ்சவங்கதான் இந்த ஸ்கீம்ல சேர்த்துவிட்டாங்க. தினமும் நெறைய போன் வருது. சின்னச் சின்னப் பசங்கல்லாம் நேரம் காலம் பாக்காமக் கூப்பிடுறாங்க. நேத்து ராத்திரி எட்டாம் வகுப்பு படிக்கிறேன்னு சொன்ன ஒரு பையன், 'ஏய்... எங்கிட்ட வர்றியா? அஞ்சாயிரம் ரூபா தர்றேன்’னு சொல்றான். இதெல்லாம் எம் புள்ளைங்க மாதிரி இருப்பாங்க. ஆனா ஏதேதோ பேசுறாங்க.....'' என்று கதறினார்.

''எங்களுக்கு மாசத்துக்கு 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்றாங்க. நிஜப் பேரையும் எங்க செல்போன் நம்பரையும் யாருகிட்டேயும் கொடுக்கக் கூடாது. எப்படிப் பேசுறதுன்னு சொல்லிக் கொடுப்பாங்க. மாசத்துக்கு 3,500 ரூபா சம்பளம் குடுக்குறாங்க. தமிழ்நாடு மட்டும் இல்லே சார்... பாம்பே, டெல்லியில இருந்து எல்லாம் பேசுறாங்க. நெறையப் பேரு பணம் அனுப்புறேன்னு அட்ரஸ் வாங்குறாங்க, ஆனா அதோட அவ்வளவுதான். எனக்கு இந்த நம்பர் குடுத்த மேடம்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். 'கம்பெனி ரூல்ஸ் படி உன் அட்ரஸை யாருகிட்டயும் கொடுக்கக் கூடாது. இந்தத் தடவை மன்னிச்சுடுறேன்’னு சொல்லிட்டாங்க.  இப்போதான் பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சிருக்கேன். இனிமே, மாசாமாசம் அதுல சம்பளம் போடுவாங்களாம்'' என்றார் அப்பாவியாக!

காலர் 2 - ஸ்ரீரங்கம் பிரியா:

தொடர்ந்து 10 நாட்கள் பேசிய பிறகும், இவரிடம் இருந்து உண்மையைப் பெற முடியவில்லை. அதன் பிறகு செல்போன் நிறுவனத்தில் இருந்து நாம் பேசுவதாகவும், செக் செய்வதற்காகத்தான் இத்தனை நாட்கள் பேசியதாகவும், மிகத் திறமையாக வாடிக்கையாளர்களைச் சமாளிப்பதாகச் சொல்லிப் பாராட்டினோம். ''மாதச் சம்பளம் 5,000 சரியாகக் கிடைக்கிறதா?'' என்று கேட்டதும், ''அய்யய்யோ... 3,500தான் தர்றாங்க'' என்று அலறினார். இரண்டு குழந்தைகளையும் சென்னையில் இருக்கும் அம்மா வீட்டில் விட்டுவிட்டு, கணவனுடன் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறார். கணவனுக்குத் தெரிந்தேதான் இந்த நட்பு வட்டத்தில் பேசுகிறாராம் பிரியா. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மட்டும் படுசெக்ஸியாகப் பேசுவாராம். பணம் கிடைப்பதைவிட, இப்படிப் பேசுவது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு என்கிறார் பிரியா!

காலர் 3 - ரம்யா, கல்லூரி மாணவி:

முதலில் தன் பெயரை ரேவதி என்று கூறியவர், நீண்ட முயற்சிக்குப் பிறகு உண்மையைச் சொல்ல ஆரம்பித்தார். இவரது பேர் நட்பு வட்டத்தில் மிகப் பிரபலமாம். எந்த நேரமும் செல்போனும் கையுமாகவே அலைவதால் வீட்டிலும் ஏக அர்ச்சனை. இந்த வட்டத்தில் சேர்ந்ததில் இருந்து கல்லூரி வகுப்புகளை அதிகமாகப் புறக்கணித்து வருகிறாராம்.  ''காலர்ஸ்கிட்ட நான் சொல்றது எல்லாமே பொய்தாங்க. உங்ககிட்ட மட்டும்தான் என் பேரையும், மதுரையில இருக்கேன்னு உண்மையும் சொல்லி இருக்கேன். செக்ஸியாப் பேசுற துக்கு ஆரம்பத்துல ரொம்பத் தயக்கமா இருந்துச்சு. என் ஃபிரண்ட்தான் ட்ரெய்னிங் குடுத்தா. அவ ரொம்ப நல்லாப் பேசுவா. இப்போ அவளையே மிஞ்சுற அளவுக்கு நான் பேசப் பழகிட்டேன். இப்போ இது எனக்கு ஒரு போதை மாதிரி ஆயிடுச்சு'' என்று அப்பாவியாகச் சொல்கிறார்.

ஆபாசப் பேச்சு கேட்க வா!

நட்பு வட்ட எண்களில் தொடர்பு கொண்டு இன்னும் நிறையப் பெண்களிடம் பேசினோம். அதில், பலர் பேசியதை அச்சில் ஏற்றவே முடியாது. அந்த அளவுக்கு படுக்கையறைப் பேச்சு. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள்தான் அதிக அளவில் இந்த நட்பு வட்டத்துக்குள் வருகிறார்கள்.

இதுபோன்ற ஆபாசப் பேச்சு வியாபாரத்துக்குத் தடை விதிக்க முடியாதா? சென்னை சைபர் கிரைம் கூடுதல் உதவி கமிஷனர் சுதாகரைச் சந்தித்தோம். ''வேல்யூ ஆடட் சர்வீஸ் என்ற பெயரில் செல்போன் நிறுவனங்கள் இதுபோன்ற பல சேவைகளைச் செய்துவருகின்றன. ஆனால், இந்த சேவை அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால், உடனே நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்'' என்றார்.

சட்டப்படி இதைத் தடுக்க என்ன வழி? பதில் சொல்கிறார் வழக்கறிஞர் சுந்தர்ராஜன்.  ''இந்த சேவை குறித்து பலர் எங்களிடம் முறையிட்டு உள்ளனர். நிச்சயமாக இது தடை செய்யப்பட வேண்டிய சேவை. ஆனால், செல்போன் நிறுவனங்கள் எந்த மாதிரியான சேவைகள் எல்லாம் வழங்கலாம் என்று 'டிராய்’ விதிமுறை எதுவும் வகுக்கவில்லை. அதனால், இந்த சேவையில் பணத்தைத் தொலைத்தவர்கள் டிராய் மற்றும் போலீஸில் புகார் செய்ய வேண்டும். இதுபோலத்தான், மார்க்கெட்டிங் எஸ்.எம்.எஸ். சேவையும் இருந்தது. தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்த பிறகுதான், டிராய் தனது சாட்டையைச் சொடுக்கியது. ஒரு காலத்தில் வெளிநாட்டு தொலைபேசி எண்ணைக் கொடுத்து, 'செக்ஸ் கால்’ என்று நாளிதழ்களில் ஏராளமான விளம்பரங்கள் வரும். அதைப்போலத்தான், இந்த சேவையை செல்போன் நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. பாதிக்கப்பட்டவர்கள் டிராய்க்கு இ-மெயிலில் புகார் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.

கோடிகளில் கொழிக்கும் செல்போன் நிறுவனங் கள், சில கோடி ரூபாய் லாபத்துக்காக இப்படி இளைய தலைமுறையைச் சீரழிப்பது நியாயமா?

- தேவதத்தன்