Published:Updated:

சயனப் பெருமாளுக்கு ஆபத்து!

தொல்லையில் மல்லை

சயனப் பெருமாளுக்கு ஆபத்து!

தொல்லையில் மல்லை

Published:Updated:
##~##

'மாமல்லபுரம் பேருந்து நிலையத்​துக்கு அருகில் இருக்கும் ஸ்தல சயனப் பெருமாள் கோயிலை, மத்தியத் தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்​கொள்கிறது. இந்த அறிவிப்புக்கு ஆட்​சேபம் தெரிவிப்பவர்கள் 60 நாட்​களுக்குள் மனு கொடுக்கலாம்’ என்று வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, கொதித்துக் கிடக்கிறது மல்லை. 

இந்த விவகாரம் குறித்துப் பேசும் ஸ்தல சயனப் பெருமாள் கோயில் அர்ச்சகர் அனந்த சயனம், ''இந்தக் கோயிலின் இடிந்த கோபுரத்தை அஸ்தி​வாரத்தில் இருந்து புதிதாகக் கட்டி எழுப்பி கடந்த 1998-ம் ஆண்டு கும்​பாபி​​ஷேகம் செய்து இருக்கிறோம். கணபதி ஸ்தபதி மேற்பார்வையில் மண்​டபத்தின் சில பகுதிகளும் அப்போது சீரமைக்​கப்​பட்டன. இப்படி நிறையவே மாற்றங்கள் செய்து இருப்பதால், இந்தக் கோ​யிலை பழைமையானது என்று சொல்ல முடியாது.

சயனப் பெருமாளுக்கு ஆபத்து!

தொல்பொருள் துறையினர் கட்டுப் பாட்டில் போனால், திருவிழாக்களையும் பூஜைகளையும் தடுக்க மாட்டோம் என்று ஆரம்பத்தில் சொல்வார்கள். ஆனால், இரவு நேரங்​களில் பக்தர்கள் கோயிலுக்கு வர

சயனப் பெருமாளுக்கு ஆபத்து!

முடியாது. சுற்றுவட்டாரத்தில் இருந்து வரும் கிராம மக்கள் கோயிலில் தங்கி, காலையில் கடலில் குளித்துவிட்டு வழிபடும் பழக்கத்துக்கு இடையூறு வரும். பிரம்மோற்சவம், ஆழ்வார் உற்சவம், கருடசேவை, மாசிமகம் போன்ற விழாக் களின்போது, ஒரு வாரத்துக்கும் மேல், மக்கள் கோயிலில் தங்கி இருப்பார்கள். அவர்கள் இனி எங்கே தங்குவார்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.

மாமல்லபுரம் அனைத்து வியா​பாரிகள் சங்கப் பொருளாளர்திராவிடமணி, ''தொல்பொருள் துறையின் கட்டுப்​பாட்டில் இருக்கும் மாமல்லபுரத்தின் சில பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கும் கடை​களுக்கும் இப்போது புதிதாக மின்இணைப்புகூட கொடுப்பது இல்லை. கட்டடங்களைப் புதுப்பிக்கவும் முடியாது. யாராலும் சொத்தை அனுபவிக்க முடியா​மல், தங்கள் சந்ததியினருக்குச் சொத்தைக் காவல் காக்கும் உரிமையை மட்டுமே தர முடிகிறது. இந்தக் கோயிலும் தொல்பொருள் துறையின் கட்டுப்​பாட்டுக்குள் வந்தால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதான் கோயிலுக்குள் மக்கள் அனுமதிக்கப்​படுவார்கள். இதனால், இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து விடும். வியாபாரம் முடங்கி விடும். எங்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்?'' என்றார் ஆவேசமாக.

மாமல்லபுரம் நகர பி.ஜே.பி. தலைவர் ஸ்ரீதர், ''108 திவ்ய வைணவ ஸ்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று. இது தொடர்ந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் முறைப்படி பூஜைகள் செய்ய முடியும். தொல்பொருள் துறை வசம் சென்றால், கோயில் கடவுள் இருக்கும் இடமாக இருக்காது, பொருட்​காட்சியாக மாறிவிடும். அதனால், மத்திய அரசின் கீழ் இந்தக் கோயிலை எடுக்க அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.

ம.தி.மு.க. மாநிலத் துணைச் செயலர் மல்லை சத்யா, ''ஸ்தல சயன பெருமாள் கோயிலை மத்திய தொல்பொருள் துறையினர் கைப்பற்றும் முயற்சியை எதிர்த்துத் தொடர் போராட்டம் நடத்த இருக்கிறோம். சைவமும் வைணவமும் ஒன்று சேரக் காட்சி அளிக்கும் கடற்கரைக் கோயில் தொல்பொருள் துறை வசம் வந்த பிறகு, ஆந்தையும் வெளவாலும் பெருச்சாளிகளும்தான் குடி இருக்கின்றன. அந்த நிலை இந்தக் கோயிலுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. மாமல்லபுரத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டுவதற்கு மத்தியத் தொல்பொருள் துறை, கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் நிலா கமிட்டி, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம், மாமல்ல​புரம் பேரூராட்சி என நான்கு இடங்​களில் அனுமதி பெற வேண்டும். இந்த நான்கு அனுமதி​களையும் பெறுவது அத்தனை எளிது அல்ல. இந்த மண்ணில் வாழ்பவர்களை நாடோடிகளாக மாற்றும் முயற்சியைத்தான் தொல்பொருள் துறை செய்கிறது.

இந்தத் துறையின் கெடுபிடியால் ஏற்கெனவே கடுமையான பாதிப்பில் இருக்கிறது மாமல்லபுரம். ஊரின் மையப் பகுதியில் இருக்கும் ஸ்தல சயனப் பெருமாள் கோயிலையும் கையகப்படுத்திவிட்டால், மீதம் இருக்கும் மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறி​யாகி​​விடும். அதனால் மல்லையில் இனி ஒரு அடி மண்ணையும் மத்திய அரசாங்கம் எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்றார்.

தொல்பொருள் துறையின் சார்பில், ''ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் கொடுத்துள்ளோம். ஆட்​சே​பனை​களைப் பார்த்த பிறகே எந்த ஒரு முடிவும் எடுக்கப்படும்'' என்றார்கள்.

இப்போது, தொல்பொருள் துறைக்கு எதிராக மாமல்லபுரம் பேரூராட்சியில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மக்கள் குரலுக்கு மதிப்பு கொடுக்​குமா தொல்பொருள் துறை?

- பா.ஜெயவேல்