Published:Updated:

செய்தித் துறை VS அறநிலையத் துறை!

அரசாங்க கல்யாணக் கலாட்டா!

##~##

மேளாக்களுக்குக் குறைவில்லாதது ஜெய லலிதா ஆட்சி. வரும் 18-ம் தேதி திருவேற்காட்டில் 1,006 ஜோடிகளுக்கு அரசாங்கமே திருமணம் நடத்தி வைப்பது மிகப் பெரிய கல்யாண மேளா. அதற்கான ஏற்பாடுகளை தினந்தோறும் ஜெயலலிதாவே ஆர்வத்தோடு கவனிப்பதில் இருந்து, அவரது அக்கறை அதிகமாகவே தெரிகிறது. 

ஒன்பது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், இதே திருவேற்காட்டில் 1,053 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் ஜெயலலிதா. அதற்கு முன் 2002 ஜூலை 14-ம் தேதி அன்றும் இங்கு 1,008 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி இருக்கிறார். 1991-96 ஆட்சியில் அ.தி.மு.க. சார்பில் சிதம்பரத்தில் 2,500 ஜோடிகளுக்கும் திருச்சியில் 5,004 ஜோடிகளுக்கும் இலவசத் திருமணம் செய்து வைத்தாலும், திருவேற்காட்டில் திருமணம் செய்து வைப்பதில்தான் ஜெயலலிதாவுக்கு அதிக மனநிறைவு. அப்போதெல்லாம் ஜெ-வுக்கு ராசி எண் 9 என்ற கணக்கில், கூட்டுத்தொகை ஒன்பது வரும்படி மணமக்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பார்கள். இப்போது, ஜெயலலிதாவின் ராசி எண் 7 ஆக மாறி இருப்பதால், இந்தமுறை 1,006 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் திருமணம் நடக்கும் தேதியின் கூட்டுத்தொகை 9.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
செய்தித் துறை VS அறநிலையத் துறை!

ஏற்கெனவே நடந்த திருமணங்களில், ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக பிரச்னை இருந்தது. அதனால், இந்த முறை 32 மாவட்டங்களில் இருந்தும் மணமக்களைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். அதிகபட்சமாக, தஞ்சாவூரில் இருந்து 77 ஜோடிகளும் சென்னையில் இருந்து 74

செய்தித் துறை VS அறநிலையத் துறை!

ஜோடிகளும் இந்த மேளாவில் திருமணம் செய்துகொள்கின்றனர். என்ன கணக்கோ... ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து ஒன்பது ஜோடிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இருப்பதிலேயே மிகக்குறைவு நீலகிரி மாவட்டம். அங்கு இருந்து இரண்டே ஜோடிகள்தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மணமகன் மற்றும் மணமகள் சார்பில் தலா நான்கு பேர் உடன் வர அனுமதி தரப்பட்டுள்ளதாம். ஐந்து ஜோடிகளுக்கு ஒரு பேருந்து என மணமக்களை அழைத்து வர மொத்தம் 200 பேருந்துகள் தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இவர்களுக்காக திருவேற்காட்டைச் சுற்றியுள்ள 19 மண்டபங்கள்  பதிவு செய்யப்பட்டு உள்ளன. திருமண விழாவுக்கு உணவு வழங்கும் பணியை, 'அறுசுவை அரசு’ நிறுவனத்தாரிடம் ஒப்படைத்து உள்ளனர். ''திருமண நாளில் மட்டுமல்ல... முந்தைய நாள் இரவில் இருந்தே சாப்பாடுக்கு ஏற்பாட்டைச் செய்யுங்கள்'' என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டாராம் முதல்வர்.  

ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 10 வீதம், ஒரே மாதிரி யாக 12 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உள்ளன. மொத்த நிகழ்ச்சியும் ஒரே நேரத்தில் முடிவடையும் வகையில், கச்சிதமாகத் திட்டமிட்டு இருக்கிறார்கள். காலை 9.30 மணிக்கு மேடைக்கு வரும் முதல்வர் ஜெயலலிதா, ஏழு ஜோடிகளுக்கு மட்டும் தாலியை எடுத்துக்கொடுக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்து கிளம்புகிறார்.

ஒவ்வொரு ஜோடிக்கும் நான்கு கிராமில் தங்கத்தாலி வழங்கப்படுகிறது. தாலிக்காக மட்டும் 1.12 கோடி ரூபாய் செலவு. 6 கிராமில் வெள்ளி மெட்டி வாங்கப்படுகிறது. மற்ற சீர்வரிசைப் பொருட்களுக்கு 97.04 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது. நாதெள்ள ஆஞ்ச நேய செட்டி நிறுவனத்தார் வடிவமைத்த தாலி வடிவம் முதல்வருக்கு ரொம்பவே பிடித்துப்போனதாம். சுமார் 5 கோடியில் திருமணத்தை நடத்த ஆரம்பத்தில் திட்டமிட்டாலும் ஏழு கோடி ரூபாய் வரை செலவு எகிறிவிட்டதாம். மொத்தச் செலவையும் அற நிலையத் துறையே ஏற்றுக்கொள்கிறது.

திருமணத்துக்கான இடத்தை வழக்கமாக கட்சிக்காரர்கள்தான் தேர்வு செய்வார்கள். இந்த முறை அறநிலையத் துறை செயலாளர் ராஜாராம் தலைமையில் அதிகாரிகளே இந்த இடத்தைத் தேர்வுசெய்து உள்ளனர்.

முதல்வர் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் கார்கள் செல்ல வசதியாக, மேடை வரை புதிதாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், திருவேற்காடு மக்களின் நீண்டகாலப் பிரச்னைக்கு விமோசனம் கிடைத்துள்ளது. இது ஒரு பக்கம் நடக்க, அதிகாரிகள் சிலர் செய்யும் அரசியலால் அரசின் பெயர் கெட்டுவிடும் என ஆதங்கப்படுகிறார்கள் அ.தி.மு.க. புள்ளிகள். ''நிகழ்ச்சியை நடத்தவேண்டிய பொறுப்பு, அறநிலையத் துறைக்குதான் உண்டு. ஆனால், செய்தித் துறை அதிகாரிகள் தேவையில்லாமல் இதில் மூக்கை நுழைத்து, எங்களின் வேலையைக் கெடுக்கிறார்கள். இந்தத் திருமணம் தொடர்பாக முதல்வரின் ஆய்வுக் கூட்டத்துக்கு அறநிலையத் துறையின் முக்கிய அதிகாரியைக் கூப்பிடாமல் தடுத்துவிட்டார்கள்'' என்கிறார்கள் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்போ, ''அறநிலையத் துறையில் கூடுதல் அந்தஸ்தில் இருக்கும் ஒரு அதிகாரி, மன்னார்குடி பெயரைச் சொல்லி ஆட்டம் போட்டவர். அதே கோதாவில் உயர் அதிகாரிகளை மதிப்பதில்லை; ஒத்துழைப்பும் கொடுப்பதில்லை. அதனால் தான், துறைச் செயலாளரே களம் இறங்கி வேலைகளை முடுக்கிவிடுகிறார்'' என்கி றார்கள். ''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நிகழ்ச்சியை நல்லபடியாக நடத்தி யார் நல்ல பெயர் வாங்குவது என்ற போட்டிதான்'' என மறுக்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

இந்தக் கல்யாண மேளாவிலுமா 'கை’ வைப்பது என்ற குரல்களும் பல தரப்பில் இருந்தும் கேட்கிறது. அப்படி ஒன்று நடந்தால், சும்மா இருப்பாரா அம்மா?

- இரா.தமிழ்க்கனல்

படம்: பொன்.காசிராஜன்