Published:Updated:

நான் மினிஸ்டர் ஆகப்போறேன்!

மீண்டும் கைதான தளபதி

பிரீமியம் ஸ்டோரி
##~##

வீரபாண்டியார், மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் புனையப்படுவதாகக் கொந்தளிக்கும் கருணாநிதி, அதற்காகவே அவசர செயற்குழுவைக் கூட்டுகிறார். ஆனால், மதுரை தளபதிக்கு ஜாமீன் மனு போடக்கூட சீனியர் தி.மு.க. வக்கீல்கள் யாரும் தயாராக இல்லை. அந்த அளவுக்கு அழகிரி பட்டணத்தில் கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது! 

வேலுச்சாமியைத் தூக்கிவிட்டு 'பொட்டு’ சுரேஷ் சிபாரிசில், தளபதியை மாவட்டச் செயலாளர் ஆக்கியது அழகிரிதான். ஆனால், அழகிரி ஊரில் இல்லாத நேரத்தில் ஸ்டாலினை மதுரைக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தியதால் பொல்லாப்பைக் கட்டிக்கொண்டார் தளபதி. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, அழகிரி வட்டாரம் தளபதியை ஓரங்கட்ட, நெருக்கடிகளைத் தாங்க முடியாமல் மாவட்டச் செயலாளர் பதவியை ராஜி​னாமா செய்தார். ஸ்டாலின் கொடுத்த பிர​ஷர் காரணமாக, அவரது ராஜினாமாவை

நான் மினிஸ்டர் ஆகப்போறேன்!

ஏற்காமல் தள்ளி​வைத்தது தலைமை. அதன்பிறகு, தன்னை ஸ்டாலின் விசுவாசியாக வெளிப்படையாகவே  காட்டிக் கொள்ள ஆரம்பித்தார். இதனால், அவர் ஏற்பாடு செய்த, கருணாநிதி பிறந்தநாள் விழா ஆலோ சனைக் கூட்டத்தை முழுமையாகப் புறக்​கணித்த அழகிரி விசுவாசிகள், அ.தி.மு.க. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திலும் தனிஆவர்த்தனம் செய்தனர்.

இந்த நிலையில்தான், ஏற்கெனவே கொடுக்கப்​பட்ட ஒரு நிலஅபகரிப்புப் புகாரை தூசு தட்டி எடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன், தளபதியைக் கைது செய்தது போலீஸ். வழக்கமாக தி.மு.க-வினருக்கு எதிராக வழக்குகளில் அழகிரியின் அதிதீவிர விசுவாசியான மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மோகன்குமார், வீர.கதிரவன், பிரேம்ராஜ் அம்புரோஜ், டேனியல் மனோகரன், சாமுவேல் உள்ளிட்ட சீனியர்கள் ஆஜர் ஆவார்கள். ஆனால், தளபதி வழக்கில் சீனியர்கள் யாருமே எட்டிப்பார்க்கவில்லை. அன்புநிதி, கருணாநிதி, முத்து வெங்கடேசன் உள்ளிட்ட ஜூனியர்கள் மட்டுமே வந்தனர். மேலும், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத, ஜி.கே. என்ற கோபாலகிருஷ்ண லட்சுமிபதி ராஜா என்ற சீனியர்வக்கீல் பெயரில்​தான் தளபதிக்கு ஜாமீன் மனுவே தாக்கல் ஆனது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய தளபதி தரப்பு ஆட்கள், ''தளபதி மிகமிகச் சாதாரணமான ஆள். அவரை துரத்தித் துரத்திக் கைது பண்றாங்கன்னா, பின்னணியில் இருக்கும் தி.மு.க-காரங்கதான் காரணம். தி.மு.க. பகுதிச்செயலாளர் ஒருவர் மீது கோர்ட் உத்தரவுப்படி நிலஅபகரிப்புப் புகார் பதிவு செய்த பிறகும் கைது நடவடிக்கை இல்லாமல் மௌனம் காக்கிறது போலீஸ். ஆனால், ஆறு முறைக்கு மேல் விசாரித்து ஒதுக்கப்பட்ட ஒரு புகாரைத் தேடி எடுத்து, தளபதியை இரண்டு முறை கைது செய்கிறார்கள். இதில்தான் உள்குத்து இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். தளபதி கைதான விவரம் தெரிந்து அவரைப் பார்க்க கிளம்பிய தி.மு.க-வினரையும் வக்கீல்களையும், 'அண்ணன் கோபிப்பார்’னு சொல்லித் தடுத்திருக்காங்க. தளபதியை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப் போவதாக தி.மு.க. தரப்பு பத்திரிகையில் செய்தி வரவைக்கிறார்கள். பொய் வழக்கில் இருந்து தி.மு.க-வினரைக் காப்பாற்றத் தலைவர் துடிக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தினர் அதற்கு நேர்மாறாய் இருக்கிறார்கள்...'' என நொந்து கொண்டனர்.

அழகிரி தரப்பினரோ, ''தளபதியைப் பார்க்​கப் போக வேணாம்னு யாரும் தடுக்கலை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்களுக்கு போனில் தகவல் தெரிவிக்காமல் முதலில் ஒதுக்க ஆரம்பித்தவர் இதே தளபதிதான். ஆனா, இப்போ போலீஸ் தன்னைக் கைது பண்றாங்​கன்னதும் போன் செய்து கூப்பி​டுறார். யாரு போவாங்க? மதுரை அரசியல் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும். இங்கே அழகிரி அண்ணன்தான் எல்லாமே. இத்தனை நாளும் அவர் பேரைச்சொல்லி சாப்பிட்டுக்கிட்டு இருந்த தளபதி, நன்றி மறந்து திடீர்னு அந்தப்பக்கம் தாவிட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணனோட விசுவாசியான அவைத் தலைவர் இசக்கி முத்துவை மறுபடியும் கட்சியில சேத்துக்கிறதா தலைமையில் இருந்து அழைச்சாங்க. ஆனா, 'தளபதியை வெளியேத்தாத வரைக்கும் நீங்க போக வேண்டாம்’னு இசக்கிமுத்துவை ஆஃப் பண்​ணிட்டார் அண்ணன். செயற்குழுவுக்கும் அண்ணன் போவாரா மாட்டாரான்னு அப்புறமா சொல்றோம். ஸ்டாலினை இங்கே அழைத்து வந்து கூட்டம் நடத்தியதில் இளைஞர் அணிச்செயலாளர் ஜெயராமும் முக்கியமான ஆள்தான். அதுக்காக அவரை நாங்க ஒதுக் கலையே. அவரோட வீட்டு விசேஷத்துக்கு எல்லாரும் போயிட்டுத்தானே வந்தோம். புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி நீக்குபோக்கா நடந்துக்கலையா...அதுமாதிரி தளபதிக்கு நடந்துக்கத் தெரியலை. அதற்கான பலனைத்தான் இப்ப அனுபவிக்கிறார். போதாக்குறைக்கு, ஜாமீன்ல வந்தும், 'நீங்க வராட்டி நான் ஜெயில்லயே இருந்துருவேன்னு பாத்தீங்களா... வெளியே வந்துட்டோம்ல’னு பேசிஇருக்கார்'' என்று அலுத்துக் கொண்டனர்.

மீண்டும் நாம் தளபதி தரப்பைத் தொடர்பு​கொண்டோம். '' ஆலோசனைக் கூட்டம், போராட்​டங்கள் அனைத்துக்கும் பொறுப்​பாளர்கள் அத்தனை பேருக்கும் முறையாக போனில் தகவல் கொடுத்திருக்கிறார் தளபதி. கட்சி ஆபீஸில் இருக்கிற பிச்சையைக் கேட்டாலே, இந்த உண்மை தெரியும். கட்சிக்குள் நெருக்கடி கொடுத்தும் பொய் வழக்குகளைப் போடவைத்தும் தளபதியின் உறுதியைக் குலைத்தால், அ.தி.மு.க-வுக்குப் போய் விடுவார் என்று சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால், மன உறுதியோடு இருக்கும் தளபதி, 'எனக்காக தலைவரே அறிக்கை விட்டுருக்கார். அடுத்த முறை நான் மினிஸ்டர் ஆகிருவேன்’னு உற்சாகமா இருக்கார்'' என்கிறார்கள்.

  மதுரை தி.மு.க-வுக்கு மட்டும் தனியாக சட்ட திட்டம் எழுத வேண்டும் போலிருக்கிறது!

  - குள.சண்முகசுந்தரம்

  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு