Published:Updated:

பறிபோகும் பல்கலைக்கழகம்?

பதறும் தமிழ் ஆர்வலர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''தமிழுக்கு ஏற்பட்ட சோதனை கள் வேறு எந்த மொழிக்காவது ஏற்பட்டு இருக்குமா என்று தெரியவில்லை. பெரும்பகுதி தமிழ் நிலத்தை கடல் விழுங்கியது. இப்போது தமிழ்ப் பல்கலைக் கழகத்துக்கு ஒதுக்கிய நிலத்தை தமிழக அரசே விழுங்கிக்கொண்டு இருக்கிறது'' என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்! 

தமிழுக்காகத் தனியே இருக்கும் ஒரே ஒரு பல்கலைக்கழகம் தஞ்சையில் இருக்கிறது. ஏராளமான நிலத்தை ஒதுக்கி தனது கனவுப் பல்கலைக்கழகமாக அதை அமைத்தார் அப்​போதைய முதல்அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆனால், அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் அது வளர்க்கப்படாமல் தேய ஆரம்பித்தது. இப்போது மொத்தமாக அழிந்துவிடுமோ என்று அச்சப்படும் சூழ்நிலையை எட்டி உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம், நீதிமன்றம் உட்பட ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகத்தை நிறுவுவதற்காகப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் இருந்து 61.42 ஏக்கர் நிலத்தை தமிழக அரசே எடுத்துக்கொண்டு விட்டதுதான் சோகம்!

பறிபோகும் பல்கலைக்கழகம்?

இதைஅறிந்த  கட்சிகள் பல இணைந்து, 'தமிழ்ப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி உள்ளன. ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூ​னிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை இணைந்து இதை உருவாக்கி உள்ளன.

பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பெ.மணியரசன், ''1981-ம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டை முன்னிட்டு, எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்கப்பட்டது தமிழ்ப் பல்கலைக்கழகம். இது உயர் ஆராய்ச்சி நிறுவனம் என்பதால், அமைதியான சூழலில் இருக்க வேண்டியது அவசியம். இங்கே அரசு ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகத்தைக் கொண்டு​வந்தால் அந்த அமைதியான சூழல் முதலில் பாதிக்கப்படும். ஒரு பல்கலைக்கழகத்துக்கு 1,000 ஏக்கர் எதற்கு என்று கேட்கிறார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்கள் 1,000 ஏக்கரில்தான் அமைந்துள்ளன. திட்டங்களை முழுமையாகவும் ஒழுங்காகவும் செயல்படுத்தினால் 1,000 ஏக்கர் பத்தாது. ஏற்கெனவே, மூலிகைப் பண்ணை இருந்த இடத்தை மத்திய அரசு நிறுவனமான தென்னகப் பண்பாட்டு மையத்துக்கு ஒதுக்கியது தமிழக அரசு. இதனால், 86.96 ஏக்கர் நிலம் முதலில் பறிபோனது. அதன்பிறகு, வீட்டு வசதி வாரியம் 100 ஏக்கரில் வீடு கட்டி விற்றது. இப்படியே போனால் பல்கலைக்கழகம் சிறு கல்லூரி வளாகமாகச் சுருங்கி விடும்.

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தஞ்சை தமிழ்ப் பல்​கலைக்​கழகம் இயற்கை மரணம் எய்தட்டும் என்று விட்டு விட்டது. பேச்சுமொழி அல்லாத சமஸ்​கிருதத்துக்கு 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால், தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் இருப் பதுகூட பொறுக்கவில்லையா?' என்று ஆவேசமாகக் கேட்கிறார்.

பறிபோகும் பல்கலைக்கழகம்?

''பல்கலைக்கழக வளாகத்துக்குள், தொன்மைக் கால மக்கள் குடியிருப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை அறிவித்து உள்ளது. அதன் காரணமாகவும் இந்தப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டியது ஆகிறது. தஞ்சை நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் பல்கலைக்கழகம் இருப்பதால், மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் இங்கே வந்தால், வந்துபோவது சிரமமாகி விடும். காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் அவ்வளவு தூரம் தள்ளிப்போனால், தஞ்சை நகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்' என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உத்திராபதி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலை​ஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் களப்​பிரன், ''கல்வித் துறையின் கீழ் இருந்த தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும்  காரணம். தமிழ் வளர்ச்சித் துறையில் நிதி குறைவாக ஒதுக்கப்படும். அதனாலேயே எந்தத் திட்டப் பணிகளும் நடக்காமல் இன்றைக்கு, 'உங்களுக்கு எதற்கு இவ்வளவு நிலம்?’ என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.

நிலம் பறிபோவது ஒரு பிரச்னை என்றால், பல்கலைக்கழகமே பறிபோய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. 25 துறைகள் இருந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர்கூட நியமிக்கப்படாததால், ஓவியத் துறையும் பழங்குடி மக்கள் ஆய்வு மையமும் மூடப்பட்டு விட்டன. 2013-ல் கட்டடக் கலைத் துறையில் இருக்கும் ஒரே ஒரு பேராசிரியரும் ஓய்வு பெற இருப்பதால், அதுவும் மூடப்படும் நிலையில் இருக்கிறது. ஓராசிரியர் பள்ளிகள்போல ஒரு பல்கலைக்கழகம் இயங்கு​வது வேதனையான விஷயம். ஊழியர்களின் வைப்பு நிதி, ஓய்வூதிய நிதியை நிர்வாகச் செலவுகளுக்குப் பயன்​படுத்​தப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறையில் இருந்து மீண்டும் கல்வித் துறைக்குப் பல்கலைக்கழகத்தை மாற்ற வேண்டும்' என்றார் களப்பிரன்.

பல்கலைக்கழகத் துணை​வேந்​தர் ம.திருமலையிடம் இதுபற்றிப் பேசினோம். ''பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டுக்​கொண்டு வர புதிய திட்டங்கள் பலவற்றை வகுத்துள்ளோம். நிகழ்த்துக் கலைத் துறைக்கான பள்ளி ஒன்றை நிறுவ அனுமதி கேட்டு இருக்கிறோம். மூலிகைப் பண்ணையை மீண்டும் அமைப் பதற்கான முயற்சியில் இருக்​கிறோம். 100 கோடி ரூபாய் நிதியை தமி​ழக அரசிடம் கேட்​டுள்ளோம். அந்த நிதி வரும் பட்சத்தில், அனைத்தும் பழைய நிலைமைக்கு வந்து சீராகி விடும்' என்று, நம்பிக்கையோடு பேசினார்.

எம்.ஜி.ஆர். அமைத்த பல்கலைக்கழகம் என்பதால், தி.மு.க. ஆட்சியில் இது உதாசீனம் செய்​யப்​​பட்டதாக குற்றச்சாட்டு உண்டு. அதே பழி தனக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உண்டு!

- கவின் மலர்

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு