Published:Updated:

ராமதாஸுக்கான பிடி இறுகுகிறது!

தன்ராஜை சிக்க வைத்த செல்போன்?

பிரீமியம் ஸ்டோரி
##~##

பா.ம.க. காலைச்சுற்றிய சி.பி.ஐ. பாம்பு கடிக்காமல் விடாது போல!

 முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் முருகானந்தம் கொலை வழக்கில், டாக்டர் ராமதாஸின் உறவினர்களைக் கைது செய்து அடுத்த அதிரடியை அரங்கேற்றி இருக்கிறது சி.பி.ஐ.

ராமதாஸின் அக்கா மருமகனும் முன்னாள் எம்.பி-யுமான தன்ராஜ், வானூர் ஒன்றிய பா.ம.க. முன்னாள் செயலாளரும் ராமதாஸ் மனைவி சரஸ்வதியின் அக்கா மகனுமான சிவக்குமார் இருவரையும் கடந்த 20-ம் தேதி சி.பி.ஐ. டீம் கைது செய்ய, பா.ம.க. வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சி.

கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலில்

ராமதாஸுக்கான பிடி இறுகுகிறது!

அவரது உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கு தொடர்பான விவரங்களை ஜூ.வி-யில் தொடர்ந்து எழுதி வருகிறோம்.

சம்பவம் நடந்தபோது, ஆளும் கட்சியான தி.மு.க-வில் பா.ம.க. அங்கம் வகித்ததால், விசாரணை சரிவர நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை அ.தி.மு.க. தரப்பு வைத்தது. அந்தச் சமயத்தில் முக்கியக் குற்ற​வாளியாகக் கருதப்பட்ட ரகு என்பவரும் மர்மமான முறையில் இறந்துபோனார். 'வேட்டைக்குச் சென்ற ரகு, துப்பாக்கியைத் தவறுதலாகப் பிடித்து சுட்டு இறந்துபோனார்’ என்று சொல்லப்பட்டது. 'இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. நடத்த வேண்டும்’ என்று சி.வி.சண்முகம், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததன் விளை​வாக, சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ. கைக்கு வழக்கு மாறியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.

இந்தநிலையில், திண்டிவனம் வந்த சி.பி.ஐ., கூலிப்படையைச் சேர்ந்த எட்டு பேரைக் கைது செய்தது. அடுத்து, ராமதாஸின் தம்பி சீனுவாசனும், பா.ம.க. மாநிலத் துணைத்தலைவர் கருணாநிதியும் கைது ​செய்யப்பட்டனர். அதன்பிறகு, மார்ச் 2-ம் தேதி ராமதாஸின் உதவியாளர் நட ராஜனிடமும், பேரன் பிரதீபனிடம் விசாரித்த சி.பி.ஐ. டீம், மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ராமதாஸிடமும் விசாரணை நடத்தியதாகச் சொல்லப்பட்டது. மார்ச் 19-ம் தேதி குற்றவாளிகள் பயன்படுத்திய காரையும் உறுதி செய்தனர். .

ராமதாஸுக்கான பிடி இறுகுகிறது!

சி.பி.ஐ-யின் அடுத்த பாய்ச்சல் ராமதாஸ் மீதுதான் என்று அரசியல் அரங்கில் பலரும் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், தங்களது இடைக்கால அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தது சி.பி.ஐ. 'இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல்செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டும்’ என்று  கேட்டு அமைதியாகி விட்டது சி.பி.ஐ. டீம். பா.ம.க. தரப்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

அதன்பிறகு, இரண்டு மாதங்களாக வழக்கு தொடர்பாக எந்தப் பரபரப்பும் இல்லை. இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்​பட்டிருந்த இளஞ்செழியன், தனது குடும்பத்துக்கு ஒரு கடிதமும் சி.பி.ஐ. டீமுக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதன் முழு விவரங்களை 13.6.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் சொல்லி இருந்தோம்.

அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் தன்ராஜும் சிவக்குமாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் புகாரின் மையப் புள்ளிகளான சி.வி.சண்முகம் வட்டாரத்தில் சில தகவல்கள் சொல்லப்​படுகிறது. ''தன்ராஜ் கைது செய்யப்படுவார் என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான். ஏனென்றால், முருகானந்தம் கொலை நடக்கும் முன்பே, 'முன்னாள் எம்.பி. தன்ராஜால் எனது உயிருக்கு ஆபத்து’ என்று எங்கள் அமைச்சர் (சி.வி.சண்முகம்) போலீஸில் புகார் செய்திருந்தார். ஆனால், போலீஸார் அதைக் கண்டுகொள்ளவில்லை. குற்றவாளி தொடர்ந்து தப்பிக்க முடியாது என்பது இன்று நிரூபணமாகி இருக்கிறது. சி.பி.ஐ. டீம் இறுதி அறிக்கைத் தாக்கல் செய்வதற்குள் எங்கள் கட்சித் தொண்டர் முருகானந்தம் கொலைக்குக் காரணமான அனைவரும் கண்டிப்பாக கைதாவார்கள்'' என்கிறார்கள்.

''இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்த சி.பி.ஐ.  அமைதியாக இருக்கவில்லை. முருகானந்தம் கொலை நடந்தபோது அந்த இடத்தில் இருந்ததாகக் கருதப்படும் பலரிடம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டுதான் இருந்​தது. ஆனால், உருப்படியான தடயம் எதுவும் கிடைக்காமல் குழம்பியது.

சம்பவம் நடந்த அன்று, அந்த ஏரியா டவரில் இருந்து சென்ற போன் கால் விவரங்கள், இறந்து போன ரகு மற்றும் இளஞ்செழியன் போன்றோர் தொடர்பு கொண்ட செல்போன் எண்கள் என அனைத்து எண்களையும் தேடி எடுத்தனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தித்தான் தன்ராஜையும் சிவக்குமாரையும் கைது செய்து இருக்கின்றனர்'' என்கிறது சி.பி.ஐ-க்கு நெருக்கமான வட்டாரம்.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தன்ராஜை அழைத்து வந்திருந்தபோது அவரிடம் பேசினோம். ''என்னைக் கைது செய்து விசாரிக்கிறதால போலீஸ் என்ன கண்டுபிடிச்சிடப் போறாங்கன்னு தெரியல. இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ்காரங்க அவங்க வேலை​யை விட்டுட்டு, தேவை இல்லாம பொய் கேஸ் போடுறாங்க'' என்றார் சலிப்பாக.

குற்றாலம் நோக்கி பயணத்தில் இருந்த ராமதாஸ், தன்ராஜ் கைது செய்தி அறிந்ததும் உடனடியாக தைலாபுரம் திரும்பி விட்டார். ராமதாஸ் மற்றும் அவரது மனைவியின் உறவினர்கள் பலரும் கைதாகி விட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தை சி.பி.ஐ. புயல் எப்போதும் தாக்கலாம் என்பதே இப்போதைய நிலவரம்!

- அற்புதராஜ்,  படங்கள்: பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு