பிரீமியம் ஸ்டோரி
##~##

டந்த 11-ம் தேதி, 'நித்தியைப் பிடி... ஆசிர​மத்துக்கு சீல் வை’ என்று அதிரடியாக வெடித்த கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா, அந்த உத்தரவை 19-ம் தேதி திரும்பப் பெற்றுக்கொண்டார். இதை, பிடதி ஆசிரமவாசிகள் ஆரத்தழுவிக் கொண்டாடுவதைக் காண, இரண்டு கண்கள் போதாது என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

 திசை மாறிய அரசு!

சதானந்த கவுடா திடீரென பல்டி அடித்த காரணத்தைக் கேட்டோம். ''ரஞ்சிதா உடனான சி.டி. விவகாரத்தில் நித்தியானந்தாவை எல்லோரும் கடுமையாக எதிர்த்தபோது, முந்திரிக்கொட்டை போன்று முன்னே நின்று ஆதரித்​தவர் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்கால். மேலும், அவர் நித்தியின் மேடைகளில் ஏறி புகழ் பாடவும் செய்தார். அதனால், அப்போதே நித்தி - அசோக் சிங்கால் உறவு 'பலமாக’ இருந்தது. 'கர்நாடக அரசின் சமீபத்திய அதிரடி முடிவுகளுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ்-தான் இருக்கிறது. என்னை க‌ர்நாடகத்தை விட்டே துரத்த வேண்டும் என நினைக்கிறார்கள்’ என்று ஜாமீனில் வெளியே வந்த நித்தி, அசோக் சிங்காலிடம் புலம்பினாராம். அதைத்தொடர்ந்து, சதானந்த கவுடாவைத் தொடர்பு கொண்ட அசோக் சிங்கால், 'சட்டப்படி நடக்க வேண்டியது நடக்கட்டும். ஆனால், அரசுத் தரப்பில் முன்பு எடியூரப்பா அமைதியாக இருந்தது போலவே நீங்களும் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பிடதியில் இந்து மதம் தழைக்கும்’ என்று 'அன்புடன்’ கேட்டுக்கொண்டாராம். அதை அடுத்தே, ஆசிரமத்தை சீல் வைக்கும் முடிவைத் திரும்பப்‌ பெற்றுக்கொண்டார் சதானந்த கவுடா'' என்று கர்நாடக அரசியல் புள்ளிகள் சொல்கிறார்கள்.

நித்தி எஸ்கேப்?

சிக்கலாகும் வழக்கு!

கடந்த 2010-ல் ஒளிபரப்பான நித்தி - ரஞ்சிதா படுக்கையறைக் காட்சி தொடர்பான வழக்கைப் பதிவுசெய்து விசாரித்து வருகிறது, கர்நாடக சி.ஐ.டி. போலீஸ். 2,200 பக்கக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் வழக்கில் சொல்லிக்​கொள்ளும்படி முன்னேற்றம் இல்லை.

இத்தனை நாட்களும் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடந்த வழக்கு இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் சார்பாக விசாரணை அதிகாரியான ராஜப்பா, ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி புஷ்பவதி முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், 'படுக்கையறைக் காட்சி வீடியோவில் உள்ள குரலையும், நித்தியானந்தாவின் குரலையும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்காக ரஞ்சிதா உள்ளிட்ட எட்டு சீடர்களின் குரலையும் பதிவு செய்ய வேண்டும். மேலும், பாலுறவில் ஈடுபட்டாரா என்பதை அறிந்துகொள்வதற்காக நித்தியானந்தாவை முழுஉடல் பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் ரத்த மாதிரி பரிசோதனையும் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணைக்​காக சி.ஐ.டி. போலீஸில் ஆஜராகுமாறு எட்டு முறை சம்மன் அனுப்பியும், நித்தியானந்தா ஆஜர் ஆகவில்லை. எனவே, அவரை சி.ஐ.டி. போலீஸில் ஆஜராகுமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பவதி, ''சி.ஐ.டி. போலீஸார் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும், நித்தியானந்தா ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரைக் கைது செய்யும் அதிகாரத்தை சி.ஐ.டி. போலீஸாருக்கு வழங்குகிறேன்'' என்று உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பைக் கேட்ட நித்தி அலறி விட்டாராம். ஆக, சி.ஐ.டி. போலீஸ் இனி நித்தியை விடாமல் விரட்டும்.

விரைகிறார் விநய் பரத்வாஜ்!

நித்தி - ரஞ்சிதா சி.டி. விவகாரத்திலும், ஆர்த்தி ராவ் பாலியல் புகாரிலும் உச்சரிக்கப்படும்  முக்கியமான சாட்சியின் பெயர், விநய் பரத்வாஜ். கர்நாடகத்தைச் சேர்ந்த விநய் பரத்வாஜ், இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த 2006-ம் ஆண்டு நித்தியின் சீடராக மாறியவர். அமெரிக்காவில் இருக்கும் நித்தியின் ஆசிரமத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. ஆர்த்தி ராவ் தயாரித்த, நித்தி - ரஞ்சிதா வீடியோவை லெனின் கருப்பன் ஆகியோரோடு 'பிரிவ்யூ’ பார்த்தவர்களில் இவரும் ஒருவர். 'நித்திக்கு பெண்களோடு மட்டுமல்ல... ஆண்களோடும் தொடர்பு இருக்கிறது’ என்று புதிய பூதத்தைக் கிளப்பியவர். 'நித்தியால் என் உயிருக்கு ஆபத்து’ என்று அமெரிக்கா போனவரை, இந்தியாவுக்கு வரவழைத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறது சி.ஐ.டி. போலீஸ். அவர் வருவதாக உறுதி அளித்து இருக்கிறாராம். விநய் பரத்வாஜ் வந்தவுடன், நித்தி விவகாரம் வேகம் எடுக்கும் என்பதால் அவர் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள், சி.ஐ..டி போஸீஸார்.

பாரீஸ் செல்லும் நித்தி!

பிடதியில் சிக்கல். மதுரையிலும் நிம்மதி இல்லை. அதனால், வெளிநாடுகளுக்கு டூர் கிளம்பலாம் என்று திடீர் முடிவெடுத்து இருக்கிறார் நித்தி. அதனால், அவசர அவசரமாக பாரீஸ் மற்றும் ஸ்பெயின் செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்து இருக்கிறார். ஏனென்றால் பழைய வழக்கும், புதிய வழக்கும் வேகம் எடுப்பதற்குள் எஸ்கேப் ஆகிவிட வேண்டும் அல்லது மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டி இருக்கும் என்று பயப்படுகிறார். இந்த விஷயத்தை அறிந்துகொண்ட கர்நாடக போலீஸ், நித்தியின் பாஸ்போர்ட்டை முடக்கும் முடிவில் இருக்கிறது. ஆனால், 'விரைவில் சுவாமி நித்தியானந்தா வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். இரண்டு வருடங்களுக்குப் பிறகே இந்தியாவுக்கு வருவார். அவர் இங்கிருந்து செல்வதை யாராலும் தடுக்க முடியாது’ என்று நித்தியின் சீடர்கள் அழுத்தமாகவே சொல்கிறார்கள்.

அதையும்தான் பார்க்கலாம்!

- இரா.வினோத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு