Published:Updated:

கால வரிசையில் பாரதி பாடல்கள்

ஜூ.வி. நூலகம்

பிரீமியம் ஸ்டோரி

பதிப்பு: சீனி.விசுவநாதன், வெளியீடு:சீனி.விசுவநாதன்,

2 மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை-35. விலை

கால வரிசையில் பாரதி பாடல்கள்

650

##~##

தமிழின் கொடை பாரதி என்றால், பாரதி செய்த புண்ணியம் சீனி.விசுவநாதன். கோடிக்கணக்கில் சொத்து வைத்துவிட்டு செத்துப் போயிருந்தால்கூட, பாரதியின் படைப்புகள் இந்த அளவுக்கு மொத்தமாகவும் சுத்தமாகவும் பதிப்பிக்கப்பட்டு இருக்காது. எட்டயபுரத்தில் எழுந்து திருவல்லிக்கேணியில் முடிந்தது வரையிலான காலகட்டத்தில் பாரதி எழுதிய பாட்டு, கவிதை, கட்டுரை, கடிதம், விமர்சனம், இலக்கியம்... என அத்தனையையும் 12 தொகுதிகளாக, சுமார் 8,760 பக்கங்களுக்குத் தொகுத்து வெளியிட்டவர் சீனி.விசுவநாதன். அந்தக் களைப்பு தீருவதற்குள் பாரதி பாடல்களை மட்டும் தனியாய்ப் பிரித்து கால வரிசையில் கொண்டு வந்துள்ளார்.

பழம்பெறும் நூலகங்களின் அலமாரிகளில் இருந்து அப்படியே எடுத்து வந்து... அச்சடித்து வெளியிட்டு, 'பதிப்பாசிரியர்’ எனப் போட்டுக்கொள்ளும் இந்தக் காலத்தில் ஒரு பதிவு எப்படி இருக்க வேண்டும், பதிப்பாளனின் வேலை என்ன, எதை எல்லாம் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்கு வழிகாட்டி நூலாக

கால வரிசையில் பாரதி பாடல்கள்

இது இருக்கிறது. அந்த வகையில் பதிப்பாளர்கள் அனைவருக்குமான பாடப்புத்தகம் இது.

சுதேசிய மேடைகளில் பாரதியின் பிரவேசம் பகிரங்கமாக நிகழ்ந்தது, 1905 செப்டம்பர் 14-ம் தேதி. சென்னைக் கடற்கரையில் 'இந்து’ பத்திரிகை அதிபர் ஜி.சுப்பிரமணிய ஐயர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதி, தான் எழுதி எடுத்துச்சென்ற கவிதை ஒன்றை வாசித்திருக்கிறார். 'வங்க வாழ்த்துக் கவிகள்’ என்ற கவிதையை மறுநாள் வெளியான 'சுதேசமித்திரன்’ நாளிதழ் வெளியிடுகிறது. அச்சில் வெளியான முதல் பாட்டு 'தனிமையிரக்கம்’. இப்படி ஒவ்வொரு பாடலையும் எந்தத் தேதியில் எழுதப்பட்டது, எப்போது பிரசுரிக்கப்பட்டது என்ற வரலாற்றோடு சொல்கிறார் சீனி.விசுவநாதன். முதலில் எழுதப்பட்ட பாட்டை புத்தகமாக்கும்போது பாரதி செய்த திருத்தங்கள் என்ன என்பது படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

பாரதி பாடல்களில் தேசிய உணர்ச்சி மிகுந்து, அதனை பிரிட்டிஷ் அரசு தனக்கு எதிரான யுத்தமாக நினைத்தபோது, அந்தப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆட்சி மேலிடத்துக்கு அனுப்பியது. அரசு ஆவணக் காப்பகத்தில் இருந்து அந்தப் பிரதிகளை எடுத்து இந்தப் புத்தகத்தில் சேர்த்துள்ளார். பாரதி, தான் எழுதிய பாடல்களை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அன்னிபெசன்ட் அம்மையார் நடத்தி வந்த 'நியூ இந்தியா’ இதழுக்குக் கொடுத்துள்ளார். அந்தப் பாடல்கள் முதன்முதலாக வெளிச்சத்துக்கு வருகின்றன. பலருடைய கண்களுக்கு இதுவரை படாத கிடைக்காத பல படைப்புகள் இதில் உண்டு.

'தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை; தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ’ என்பது பாரதிதாசன் வரி. 100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வரிகள்... இன்றும் பொருத்தமானதாய் இருப்பதை அறியவே இந்தத் தொகுப்பு!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு