Published:Updated:

கொத்தடிமைப் பள்ளிகள்!

நாமக்கல் அதிர்ச்சி

கொத்தடிமைப் பள்ளிகள்!

நாமக்கல் அதிர்ச்சி

Published:Updated:
##~##

'ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்தவர்களே பிடித்தார்கள்’ - தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள், இதுதான் தலைப்புச் செய்தி. 'எங்கள் பள்ளியில் படித்தவர்களில் மருத்துவக் கல்லூரிக்குச் சென்றவர்கள் இத்தனை பேர்... ஐ.ஐ.டி-க்கு தேர்வானவர்கள் இத்தனை பேர்’ என்று நாமக்கல் ஏரியா பள்ளிகள் சார்பாக விளம்பரங்கள்! 

இதனால், 10-ம் வகுப்பு முடித்ததும் தங்கள் பிள்ளையை நாமக்கல் ஏரியா பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் பலருக்கும் ஆர்வம் ஏற்படுவது இயற்கையே! இதைச் சற்றே மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார், சென்னை ஐ.ஐ.டி-யில் இயந்திரவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் முரளி கண்ணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொத்தடிமைப் பள்ளிகள்!

''இன்று, விளம்பரங்களால்தான் உலகமே இயங்​குகிறது. இதில் கல்வியும் சிக்கிக்கொண்டது. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற பள்ளிகளில் 10-ம் வகுப்பில் 485 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணம் கிடையாது என்று விளம்பரப்படுத்துகிறார்கள். 450 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்களுக்கும் சில சலுகைகள் தருகிறார்கள். அதைவிட குறைவான மதிப்பெண்கள் மற்றும் பரிந்துரைகள் மூலம் வரும் மாணவர்களிடம் ஏகப்பட்ட நன்கொடையைக் கறப்பதும் நடக்கிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் வரையிலும் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு சுமார் இரண்டு லட்சம் வரையிலும் வாங்குகிறார்கள். வாங்கும் பணத்துக்கு ரசீது கிடை​யாது.

இதில் சில பள்ளிகளில், குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களை எல்லாம் தனியாக ஒரு வகுப்பில் போடுகிறார்கள்.

கொத்தடிமைப் பள்ளிகள்!

450 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும் மாணவர்கள்தான் முதல் மூன்று செக்ஷன்களில் இருப்பார்கள். அந்த மூன்று செக்ஷன்களுக்கு மட்டும் அனுபவம் மிக்க ஆசிரியர்களின் நேரடிக் கவனிப்பும் கண்காணிப்பும் இருக்கும். மற்ற மாண​வர்கள் படிக்கும் செக்ஷன்கள் பற்றியோ, அவர்கள் வாங்கும் மதிப்பெண் பற்றியோ வெளியில் வருவதில்லை

இப்போது இந்தப் பகுதியில் முளைத்திருக்கும் தனியார் பள்ளிகளுக்கும் 1984-ல் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் நிறையவே தோன்றியதற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தொழிற்கல்வி படிக்க இன்டர்வியூ முறை ஒழிக்கப்​பட்டு, நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகுதான், இந்த மதிப்பெண் மோகம் பெற்றோர்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.

இந்த நேரத்தில்தான், நாமக்கல் மாவட்டத்தில் வசதி, வாய்ப்பு படைத்தவர்களால் பல பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பள்ளிகளில் ஆசிரியர்​களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்​பட்டது. அர சாங்கத்தை விட, அதிகமாகச் சம்பளம் கொடுக்​கப் பட்டதால், சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூட, வேலையை ராஜினாமா செய்து விட்டு தனியார் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர். அனுபவம் மிக்க ஆசி ரியர்கள் பலர் ஒன்றுசேர்ந்து, பள்ளி தொடங்கியதும் கூட நாமக் கல்லில் நடந்து இருக்கிறது.

ஆனால், காலப்போக்கில் நாமக் கல் பள்ளிகளில் மாணவர்களைப் படிக்க வைக்க கையாளத் தொடங்கிய வழிமுறை ஆபத்தானது. நிறைய மதிப்பெண்கள் வாங்கியதாகப் பெருமைப்பட்டுக்கொள்ளும் எல்லா பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பிலேயே 10-ம் வகுப்புப் பாடத்தையும், 11-ம் வகுப்பில் 12-ம் வகுப்பு பாடத்தையும் நடத்து கிறார்கள். அதனால் ஒன்பதாம் வகுப்பிலும், ப்ளஸ் ஒன்னிலும் என்ன பாடம் இருக்கிறது என்பதே அந்த மாணவர்களுக்குத் தெரியாது. ஆக, அடிப்படை என்னவென்றே புரிந்து கொள்ளாமல் அதைவிட கடினமான பாடத்தை மனதில் ஏற்றிக் கொள்ளும் முறையை

இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

ப்ளஸ் டூ பாடத்தையாவது ஆழமாக, அகலமாக படிக்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் இல்லை. பெற்றோர் - ஆசிரியர் கழகம் வெளியிடும் நோட்ஸ், மாதிரி வினாத்தாள், பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் போன்றவற்றை மட்டுமே குறி வைத்துப் படிக்கிறார்கள். தினமும் டெஸ்ட் எழுதுகிறார்கள். இப்படி மிகக்குறுகிய வட்டத்தை வகுத்துக்கொண்டு,  அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல், மனப்பாடம் செய்தே பரீட்சை எழுதும் ஒருவனால் எப்படி எதிர்காலத்தில் பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் நடத்தும் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியும்..?

நாமக்கல் மட்டுமல்ல... வேறு பல மாவட்ட பள்ளிகளிலும் இதுபோன்றுதான் மாண வர்களை 'தயார்' செய்கிறார்கள். கேட், ஐ.ஏ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கொண்டே வருவதன் காரணமும் இதுதான்.

எனக்குத் தெரிந்த பையன் ஒருவன், 10-ம் வகுப்பில் 412 மதிப்பெண்கள் எடுத்தான். அவன் பெற்றோர் மூன்று லட்சம் வரை செலவு செய்து நாமக்கல்லில் அவனைப் படிக்க வைத்தனர். பள்ளித் தேர்வுகளில் தொடர்ந்து குறைவான மதிப்பெண்களையே அவன் வாங்கினான்.  பெற்றோர், உறவினர் எதிர்பார்ப்போ மிக அதிகமாக இருந்தது. ஆனால், அவனால் பிரகாசிக்க முடியவில்லை. அது, தாழ்வு மனப்பான்மையைக் கொடுத்தது. மனச் சிதைவுக்கு ஆளாக்கியது. பின்பு, அந்தப் பெற்றோர் மூன்று மாதம் விடுப்பு எடுத்து, அங்கேயே வாடகைக்கு வீடு பிடித்து தங்கி, அவனை அமைதிப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். 700 மதிப்பெண்களுடன் அவன் திரும்பி இருக்கிறான். இடிந்து போய்விட்ட அவனுக்கு, தன் வயது நண்பர்களுடன் பழகுவதற்கும் மனத்தடை இருந்தது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்குத் திரும்பி வருகிறான். எனக்குத் தெரிந்த ஓர் உதாரணம் அந்தப் பையன். இன்னும் தெரியாமல் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ..?'' என்று வருத்தப்பட்டார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவும் வேதனை யோடு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ''நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளும் குழந்தைகளின் பெற்றோரும் மார்க் ஜெனரேட் செய்யும் இயந்திரமாகத்தான் நினைக்கிறார்கள். அங்கே படிக்கும் எந்த குழந்தைக்கும் டெஸ்ட் புத்தகத்தைத் தாண்டி வெளியே நடக்கும் எதுவும் தெரியாது. அது மட்டும் இல்லாமல்... ரிலாக்ஸ் என்பதே இல்லாமல் படிப்பு, படிப்பு என்று திணிக் கிறார்கள். பிள்ளைகள் ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், விளையாட்டு வகுப்பு என்பது ஒவ்வொரு பள்ளியிலும் இருக்கிறது. ஆனால் இது போன்ற பல பள்ளிகளில் விளையாட்டு மைதானமே கிடையாது. இங்கே ராத்திரி 8 மணி வரைக்கும் குச்சியை வச்சிக்கிட்டு உருட்டி மிரட்டிப் படிக்க வைக்கிறார்கள். இவர்கள் மேற்படிப்புக்கு மிகுந்த சிரமப்படுவார்கள். அரசாங்கம் நினைத்​தால் மட்டும்தான் இந்தக் கொடு​மையைத் தடுத்து முறைப்படுத்த முடியும்'' என்கிறார்.

தமிழ்நாடு அசோசி​யேசன் ஆஃப் பிரைவேட் ஸ்கூல்ஸ் அமைப்பின் செயலாளர் டி.என்.சி. இளங்கோவனிடம் பேசினோம். ''தமிழ்நாடு முழுக்க இருக்கும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொருவரும் அவர்களின் தரத்துக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்கிறார்கள். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூலித்தால் கண்டிப்பாக எங்களுக்கு கட்டுப்படி ஆகாது. அதுபற்றி அரசுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறோம். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்றுதான் பெற்றோர் கள் ஆசைப்படுகின்றனர். அதனால் விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவற்றை இரண்டு வருடங்களுக்கு ஓரம்கட்டி வைத்து விட்டு படிப்பில் முழுக்கவனத்தைச் செலுத்த வைக்கிறோம். இரண்டு வருடம் கஷ்டப்பட்டு படித்து விட்டால் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லவா... இதில் என்ன தவறு இருக்கிறது?'' என்பது இவர் வாதம்.

'பில்டிங் ஸ்ட்ராங்கு... பேஸ்மென்ட் வீக்கு' என்பதாகக் குழந்தைகளைத் தயார் செய்வதால்தான், மேற்படிப்பின்போது அவர்கள் முற்றிலுமாக மனம் தளர்ந்து போகிறார்கள். இதை ஆசிரியர்களும் பெற்றோரும் உணரும்போதுதான், மகிழ்ச்சியான - முழுமையாக மனிதர்களை கல்வியால் உருவாக்க முடியும்!

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism