Published:Updated:

வருடம் 100 சினிமா தயாரிக்க நிதி!

அடடே ராமதாஸ்!

வருடம் 100 சினிமா தயாரிக்க நிதி!

அடடே ராமதாஸ்!

Published:Updated:
##~##

'இனி எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்த ராமதாஸ், 'திராவிட மாயை’ என்ற தலைப்பில் தமிழகம் முழுக்க கருத்தரங்கம் நடத்தி வருகிறார். ஜூன் 21-ம் தேதி கரூரில் ஹோட்டல் அரங்கு ஒன்றில் நடந்த கருத்தரங்கில் ஏகத்துக்கும் அனல் பறந்தது. 

முதலில் மைக் பிடித்தார் பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கர். ''மற்ற மாநிலத்தவன் எங்கள் தமிழ் மண்ணில் வாழ்வதை வேண்டுமானால் ஏற்றுக்கொள்வோம். ஆனால், ஆள்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கருணாநிதி போன்ற தெலுங்கர்கள்(?) ஆண்டதும், எங்கிருந்தோ வந்த எம்.ஜி.ஆர்., எப்படியோ வந்த ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தை ஆண்டதும் போதும். தமிழ் மொழிக்கும் சமூக சமத்துவத்துக்கும் அயராது பாடுபடும் தியாகச் செம்மல் பச்சைத் தமிழன் எங்கள் அய்யாதான் தமிழகத்தை ஆள வேண்டும்'' என்று ஆரம்பித்து வைத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருடம் 100 சினிமா தயாரிக்க நிதி!

தமிழர் வரலாற்று ஆய்வு மையத் தலைவரான செல்வா, ''திராவிட ஆட்சியில் முழுமையாகத் தமிழும்  பேசாமல், ஆங்கிலமும் பேசாமல் தமிழர்கள் குறைகுடமாகக் கூத்தாடியது தான் மிச்சம். பெரியார் என்னும் தெலுங்கரை(!) நல்ல கிளர்ச்சியாளராக வேணும்னா ஏத்துக்கலாம். ஆனா, தமிழினத் தலைவராக ஏத்துக்க முடியாது. திராவிடம் என்பதே ஏமாத்து வேலை. கருணாநிதி, கி.வீரமணி, கொளத்தூர் மணி, விடுதலை ராசேந்திரன் போன்ற தமிழ் இனத்துரோகிகள் எல்லாம் பெரியார் பெயரைச் சொல்லி அவர் பின்னாடி ஒளிஞ்சு தமிழர்களை வஞ்சிக்கிறாங்க'' என்று ஒட்டு மொத்தமாகத் தாக்கி, அனல் கக்கினார்.

மக்கள் மாநாடு கட்சித் தலைவர் சக்திவேல், ''1918-ல் மகாத்மா காந்தி நிர்மாண் இயக்கத்தில் சேர்ந்து, ஈரோட்டில் தன் சொந்த செலவில் இந்திப் பயிற்சிப் பள்ளியை நடத்தியவர் பெரியார். அதன்பிறகு, சென்னையில் நடந்த இந்தி மாநாட்டுக்கு பலரை அழைத்துச் சென்றார். இதை எல்லாம் செய்துவிட்டு  'தமிழ்நாடு தமிழருக்கே’னு சொல்லிட்டா மட்டும், இவர் இந்தியை எதிர்த்தாருன்னு

வருடம் 100 சினிமா தயாரிக்க நிதி!

சொல்லிட முடியுமா? 1937-ம் ஆண்டிலேயே இந்தியை எதிர்த்து 'செந்தமிழ் மாநாடு’ நடத்திய ஈழத்து சிவானந்த அடிகள், நாவலூர் சோமசுந்தர பாரதி போன்றோரை எல்லாம் வரலாற்றில் புறம் தள்ளிவிட்டு, தான் மட்டுமே இந்தி எதிர்ப்புப் போராட்டம் முழுக்க நடத்தியதாக கருணாநிதி போன்றவர்கள் புளுகுகிறார்கள். திராவிடம் என்பதே ஒரு சமஸ்கிருதச் சொல்தான். திராவிடத்தின் பெயரால் தெலுங்கரும் மலையாளியும் கன்னடனும்தான் நம்மை ஆள்கிறான். இவர்கள்தான் நம் முதல் எதிரிகள்'' என்றார் கொதிப்பாக.

இயக்குநர் வீ.சேகர் பேசியபோது, ''ஒவ்வொரு மனிதனுக்கும் அரசியல் தேவை. அதனால்தான் சினிமாக்காரனான நான் அரசியல் மேடைக்கு வந்திருக்கிறேன். தமிழர்கள் கையில் அரசியல் இருந்தால்தான், சினிமாகூட நமக்கானதாக இருக்கும். தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளணும்னு சொன்னாக்கூட, 'சத்தமாப் பேசாதீங்க தம்பீ!’னு சொல்றாங்க. சூழ்ச்சி அரசியல், தமிழனைப் பயந்தாங்கொள்ளி ஆக்கிடுச்சு. அதன் சூத்திரதாரி பெரியார். அவரை யாராவது 50 வருஷமா விமர்சனம் செய்ய முடிஞ்சதா? அவர் சிந்தனாவாதிதான். ஆனால் அது தமிழர்களுக்குப் பயன் பட்டதா? சாதிகள் ஒழிஞ்சதா? அவர் மாதிரியானவங்க பேச்சைக் கேட்டு 'திராவிட மாயை’யில் நாம அடிமையானது தான் மிச்சம். திராவிடக் கழகங்கள்தான் தமிழனை அரசியல்ல பின்னுக்கு தள்ளுச்சு. ஆரியம் பேசுறது பார்ப்பனியத்தை அழிக்கக் கூடியது. ஆனால், திராவிடம் நம்மையே அழிக்கக் கூடியது.

திராவிடத்தால் தமிழ் தேசமே கோளா றாகிக் கிடக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலையைக் கண்டித்து திரைப்பட இயக்குநர் சங்கம் சார்பில் ராமேஸ்வரத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போனோம். நாங்க கூப்பிட்ட போது தயாரிப்பாளர் சங்கம், திரைப்படத் தொழிலாளர் சங்கம் எல்லாம் வந்துச்சு. ஆனா நடிகர் சங்கம் மட்டும் வரலை. கேட்டதுக்கு, 'எங்களுக்குப் பாதுகாப்பு' இல்லைங்குறான்! தமிழ் உணர்வுகள் இல்லாத வேற்று மொழிக்காரர்கள் திரைப்படத் துறையில் இருப்பதே இதற்குக் காரணம். இதுவே, கர்நாடகத்துல திரைப்பட நடிகர் சங்கம் ஒரு முக்கியமான போராட்டத்தில் கலந்துக்க மறுத்தா, அடுத்த நாள் அந்த சங்கக் கட்டடம் இருக்குமா? தமிழ்த் திரையுலகில் 90 சதவிகித நடிகர்கள் தமிழ் அல்லாத மொழிக்காரர்களே! இதுவும் திராவிட மாயையால் வந்த வினை'' என்று டேஞ்சர் கொடி ஏற்றிப் படபடத்தார்.

நிறைவாகப் பேசிய ராமதாஸ், ''என்னைத் தவிர தமிழினத்துக்காகப் பாடுபட்டவன் எவனும் கிடையாது! இதைக் கோபமாகத்தான் சொல்கிறேன். நான் சினிமாக்காரர்களுக்கு எதிரிங்கிறாங்க. அப்படி இல்லைன்னு காட்டத்தான் தமிழ் உணர்வுள்ள இயக்குநர் சேகரை இந்தக் கருத்தரங்கத்துக்கு பேச அழைத்து வந்தேன். நல்ல சினிமா எடுத்தால், அதை நாங்க தயங்காமல் ஆதரிப்போம். நான் ஆட்சியில இருந்தா வருடத்துக்கு 100 நல்ல சினிமா தயாரிக்க நிதி தருவேன்!

மூணு மாசத்துக்கு முன்னால 46 தமிழ்ச் சாதியி னரை ஒன்றாகச் சேர்க்கும் முயற்சியில், அவர்களை அழைத்துக் கூட்டம் நடத்தினோ£ம். அது எந்த ஊடகத்திலும் வரல. ஆனா, வன்னியர் சங்க மாநாடு நடத்தினா மட்டும் அதைப் போட்டு எங்க மேல சாதிச் சாயம் பூசுறாங்க. விரைவில் எல்லா தமிழ்ச் சாதியையும் ஒன்று சேர்த்து திராவிடப் புரட்டுக்கு எதிரா புரட்சி செய்யப் போறேன்.

சாதி ஒழிந்தால்தான் தமிழ்த் தேசியம் மலரும்னு திராவிடக்கட்சிகள் சொல்றாங்க. இவ்வளவு வருஷம் ஆட்சி செஞ்சீங்கதானே... எந்த ஊர்ல சாதி ஒழிஞ்சது? எந்தத் தெருவுலதான் சாதி ஒழிஞ்சது? ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளை அவங்களே சொல்லட்டும். அவங்க பெயரைச் சொல்லிட்டு நீங்க ஏன் அரசியல் பண்றீங்க?'' என்று கடுகாய் வெடித்தார்.

'திராவிட மாயை’யும் பெரியார் தொடர்பான இதுபோன்ற விமர்சனங்களும் இன்னும் என்னென்ன எதிர்வினைகளை உண்டாக்கப் போகிறதோ?

- ஞா.அண்ணாமலை ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism