Published:Updated:

நேர்மைக்குப் பரிசு கட்டாயக் காத்திருப்பு!

வீழ்த்தப்பட்ட விருதுநகர் கலெக்டர்!

நேர்மைக்குப் பரிசு கட்டாயக் காத்திருப்பு!

வீழ்த்தப்பட்ட விருதுநகர் கலெக்டர்!

Published:Updated:
##~##

'சத்துணவுச் சண்டை!’ - இது, கடந்த இதழ் கழுகார் பகுதிக்கு நாம் கொடுத்திருந்த தலைப்பு. சத்துணவு அமைப்பாளர்கள் நியமனத்தில் ஆளும் கட்சிப் புள்ளிகளுக்கும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் பாலாஜிக்கும் ஏற்பட்ட மோதலை கழுகார் விலாவாரியாகச் சொல்லி இருந்தார். 

'யார் எந்தப் பரிந்துரை செய்தாலும் தகுதியின் அடிப் படையில்தான் சத்துணவு அமைப்பாளர் நியமனம் நடக்கும்’ என்று, தான் நினைத்ததை சாதித்தும் விட்டார் கலெக்டர் என்ற கழுகார், 'அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் இப்படி நடக்க ஆரம்பித்தாலே, நாடு சுபிட்சம் அடையும்’ என்று நம்பிக்கை தெரிவித்து இருந்தார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாடு அவ்வளவு சீக்கிரத்தில் திருந்தி விடுமா, திருந்து​வதற்குத்தான் விட்டு விடுவார்களா நம்முடைய அதிகாரிகளும் ஆட்சியாளர்களும். நம்முடைய இதழ் வெளியான கடந்த சனிக்​கிழமை அன்று, 'பாலாஜியின் பத​விக்கு வேட்டுவைக்கப்​பட்டு​விட் டது. அவ​ருக்கு எந்தப் பதவி​யும் ஒதுக்கப்​படாமல் கட்டாயக் காத்திருப்பில் வைக் கப்பட்டு உள்ளார்.

நேர்மைக்குப் பரிசு கட்டாயக் காத்திருப்பு!

ஐ.ஏ.எஸ். தேர்​வில் தேர்ச்சி பெற்றதும் பாலாஜி முதன்​முதலில் சேரன்மகாதேவி உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். மணல்கடத்தல் கும்பல் மீது எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக அப் போதே பரபரப்பாகப் பேசப்பட்டார். பின்னர் தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையில் துணை கமிஷனராகப் பணியாற்றினார். அ.தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், விருதுநகர் மாவட்ட

நேர்மைக்குப் பரிசு கட்டாயக் காத்திருப்பு!

கலெக்டராக நியமிக்கப்பட்டார். வந்த நாளில் இருந்தே ஊழல் மற்றும் முறைகேடுகளில் புரையோடிக்கிடந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். ஒருகட்டத்தில், கலெக்டர் பாலாஜியின் அதிரடிகளை எதிர்த்து அரசு ஊழியர் சங்கம் போராட்டங்கள் நடத்தியது. பின்னர் மக்கள் கோபத்துக்குப் பயந்து மனம் மாறி, பாலாஜிக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தொடங்கினர்.

• விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி போன்ற பகுதிகளில் அதிரடியாக 144 தடை உத்தரவு பிறப்​பிக்கப்​பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாவட்டத்தில் காலியாக இருந்த பல பணி இடங்களுக்கு முறையாகத் தேர்வு நடத்தி, ஆட்களை நியமனம் செய்தார்.

• வருவாய்த் துறை மற்றும் ஊரகத் துறை வளர்ச்சிப் பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் பாலாஜியின் பேச்சில் அனல் பறக்கும். 'லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப் பதற்குச் சமம்’ என்று சொல்லி ஒழுங்கீனமாகச் செயல்படும் அதிகாரிகளை மீட்டிங்கில் வறுத்து எடுத்துவிடுவார்.  

• மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் ஒருவர், கலெக்டர் பெயரைச் சொல்லி கான்ட்ராக்ட் ஆசாமிகளிடம் பணம் பறித்து வந்தார். கலெக்டர் பங்க​ளாவுக்கு ஜெனரேட்டர் வாங்க வேண்டும் என்று வசூல் வேட்டையில் இறங்கினார். தகவல் தெரிந்ததும், அவரைக்  கண்டித்து, மெடிக்கல் லீவில் போகச் சொன்ன கையோடு, அவரது அறையைப் பூட்டி விட்டார் கலெக்டர்.

• ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம், நன்கொடை வசூல் குறித்துப் புகார் வந்தது. உடனே, அந்தப் பள்ளியின் வங்கிக் கணக்கை முடக்கி வைத்து, கூடுதல் கட்டணத்தை பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டார். ஆனால், பள்ளி நிர்வாகம் மசியவில்லை. அதனால், பள்ளி முதல்வர் மற்றும் பள்ளித் தாளாளர் உட்பட ஆறு பேர் மீது மோசடி வழக்குப் பதிவானது. தமிழகத்தில் இப்படி ஒரு வழக்குப்பதிவு நடந்திருப்பது இங்கு மட்டும்தான்.

• பசுமை வீடுகள் கட்டும் திட்டம், இந்திரா காந்தி நினைவுக் குடியிருப்பு திட்டங்களில், பயனாளிகளைத் தேர்வு செய்​வதில் தொடங்கி கமிஷன் வாங்குவது வரை பல முறைகேடுகள் நடந்தன. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களின் 'செக் பவர்’ பறிக்கப்பட்டது.

• ராஜபாளையம் அருகே கன்சாபுரத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். ஆனால், மின் தடை காரணமாக பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. 'ஒரு மாதத்துக்கு சீரான மின்சப்ளை இல்லை என்றால், பயிர்கள் வீணாகிவிடும்’ என்று கோரிக்கை வைத்தனர். உடனே, கன்சாபுரம் பகுதியில் மட்டும் கூடுதல் நேரம் மின்சாரம் வழங்குவதற்கு மின் வாரியத் தலைவரிடம் சிறப்பு அனுமதி பெற்றுத்தந்தார். இதில் சிக்கல் ஏற்படுத்த முயன்ற தென்மண்டல மின் பகிர்மான உயர் அதிகாரி மற்றும் விருதுநகர் மாவட்ட மின்வாரிய உயர் அதிகாரியையும், தனக்கு உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் பவரைப் பயன்படுத்தி வழிக்குக் கொண்டு வந்தார்.

இதுபோல, ஏகப்பட்ட அதிரடி​களை நடத்திய பாலாஜியைக் கண்டு ஆளும் கட்சியினர் அதிர்ந்து நின்ற நேரத்தில்தான், சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்த நியமனத்துக்கு என சில விதிமுறைகள் இருந்தாலும், ஆளும் கட்சிக்காரர்கள் சுட்டிக்காட்டும் நபர்களுக்குத்தான் வேலை கிடைக்கும் என்பது நடைமுறை. அதனால் ஆளும் கட்சியினர்,  ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வசூல் வேட்டையில் இறங்கினர்.

இது, பாலாஜி காதுக்குப் போனதுமே, விருதுநகர் மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் கடிதம் எழுதினார். அதில், 'சத்து​ணவுப் பணியாளர்கள் நியமனம் முறையாக நடத்தப்பட்டு, தகுதி​யானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்​படுவார்கள். ஏழைகள் தேர்வு செய்யப்பட்டால்தான், ஒழுங்காக வேலை பார்ப்பார்கள். குழந்தைகளுக்கும் சத்தான உணவு கிடைக்கும். எனவே, இந்த நியமனத்தில் நீங்கள் அரசுக்கு முழுஆதரவு அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.

அதோடு நிற்காமல், சத்துணவுப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டு, இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், 'யாராவது அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் சிபாரிசோடு வந்தால், மூன்று ஆண்டு காலம் எந்த அரசுப்பணிக்கும் செல்ல முடியாதபடி அவர்கள் பெயர் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு 10-ம் வகுப்பும், சமையலருக்கு எட்டாம் வகுப்புத் தேர்ச்சியும், சமையல் உதவியாள ருக்கு 5-ம் வகுப்பும் கல்வித்தகுதி ஆகும். ஆனால், இந்த வேலையில் சேருவதற்கு டிகிரி படித்தவர்களும் விண்ணப் பித்தனர். அதனால் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய முதலில் மூன்று பேர் அடங்கிய 41 குழுக்கள் அமைக்கப்பட்டன. 'விண்ணப்பதாரர் உண்மையிலே ஏழையா அல்லது நடிக்கிறாரா? கணவர் எங்கே வேலை செய்கிறார்? குடும்பத்தின் மொத்த சம்பளம் எவ்வளவு? சொந்த வீட்டில் வசிக்கிறாரா? என்று பல கேள்விகளுக்கு விடை தெரியவேண்டும் என்று உத்தரவு போட்டார். அதன் அடிப்படையில்தான் இன்டர்வியூக்கு வரும் பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.  

வயதுக்கு 12 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 3, வேலை வாய்ப்பு சீனியாரிட்டிக்கு 19, விதவை, கணவனால் கைவிடப்பட்ட நிலையில் இருப்பவர்​களுக்கு 20, வறுமை நிலைக்கு 15, குடும்ப நிலைக்கு 10, நேர்முகத் தேர்வு செயல்பாட்டுக்கு 6 என்று மொத்தம் 85 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. அதன்படி ஜூன் 23 முதல் 26 வரை இன்டர்வியூ நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தகவல் தெரிந்ததும், தாங்கள் கொடுக்கும் லிஸ்ட்டும் இடம் பெறவேண்டும் என்று ஆளும் கட்சியினர் கடும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல், ஜூன்  27 அன்று காலை 7 மணிக்கு அலுவலகம் வந்த பாலாஜி, மெரிட் அடிப்படையில் தேர்வான 1,006 பேருக்கும் ஒரே நேரத்தில் கையெழுத்துப் போடத் தொடங்கினார். அத்தனை கடிதங்களையும் ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பிவிட்டுத்தான் கிளம்பினார்.

கலெக்டர் கையெழுத்துப் போட்டுக்கொண்டு இருந்த நேரத்​தில், அந்தத் தகவல் அறிந்து தலைமைச் செயலகத்தில் இருந்து முக்கிய அதிகாரி போன் செய்தாராம். சத்துணவு நியமனம் தொடர்பான விஷயம் என்பதைப் புரிந்து கொண்டதால் பாலாஜி போனை எடுக்கவில்லை என்கிறார்கள். செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோதும் பேசவில்லை. முழுமையாக கையெழுத்துப் போட்டு, கடிதங்களை அனுப்பிய பிறகுதான் தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிக்கு  போன் செய்தாராம் பாலாஜி. அப்போது எதிர்முனையில் போன் எடுக்கப்படவில்லை.  அந்தக் கோபத்தில்தான், டிரான்ஸ்ஃபர் உத்தரவு உடனே தயாரானது என்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசும் உயர் அதிகாரிகள், ''ஆளும் கட்சி அமைச்சர் முதல் அரசுத் துறை செயலாளர் வரை பலரும், 'ஆளும் கட்சி லிஸ்ட்டில் இருந்தும் சிலருக்கு நியமனம் போட வேண்டும்’ என்று கேட்​டார்கள். ஆனால், 'அரசுக்கு கெட்டபெயர் வந்துவிடும்’ என்று எல்லாரையும் நிராகரித்து​விட்டார் கலெக்டர். ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, பாலாஜியின் வீட்டுக்கே சென்று சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். பாலாஜி அதைக் கையில்கூட வாங்கவில்லை. பாலாஜியை வேறு இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருந்தாலும் பரவாயில்லை. கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கின்றனர். மீண்டும் போஸ்டிங் வாங்குவதற்கு அவர் பெரும்பாடு பட வேண்டும். நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி பழிவாங்கப்பட்டு இருக்கிறார். அதனால் நேர்மையான அதிகாரிகள் இனி, ஆளும் கட்சிக்காரர்களைக் கண்டு பயப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது'' என்று வருத்தப்பட்டனர்.

எந்த ஒரு காரியத்துக்காக கலெக்டர் பாலாஜி முழு மூச்சுடன் செயல்பட்டாரோ, அது நிறைவேறவில்லை என்பதுதான் வேதனை. ஆம், சத்துணவு அமைப்பாளர்களால் வேலைக்குச் சேர முடியவில்லை. 'இவர்கள் தரும் நியமன உத்தரவு களை வாங்க வேண்டாம்’ என்று, மேலிடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போயிருக்கிறதாம். 'சென்னை கவுன்சிலர்களிடம் சீறிய முதலமைச்​சருக்கு, விருதுநகரில் மட்டும் அல்ல.. மாநிலம் முழுவதுமே சத்துணவு அமைப்பாளர் நியமனத்தில் நடக்கும் நெறிமுறை மீறல் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. 'வாய்மையே வெல்லும்’ என்பது விளம்பரத்துக்கு மட்டும்தானா?

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism