Published:Updated:

'அப்பாவியைச் சுட்டுவிட்டு திருட்டுப் பட்டம்!'

கூடுவாஞ்சேரியில் நடந்தது நாடகமா?

'அப்பாவியைச் சுட்டுவிட்டு திருட்டுப் பட்டம்!'

கூடுவாஞ்சேரியில் நடந்தது நாடகமா?

Published:Updated:
##~##

'கூடுவாஞ்சேரி பகுதியில் வாகன சோதனையில் இருந்த இன்ஸ்பெக்டர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி செய்த ரவுடிகள் மீது போலீஸ் துப்பாக்கிசூடு’ - என்று நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளி யானது. ஆனால், 'தான் செய்த தவறை மறைப்பதற்காக, காவல்துறை இப்படி ஒரு நாடகம் நடத்தி உள்ளது’ என்று சிலர் சொல்ல ஆரம்பிக்கவே, அதிர்ந்து நிற்கிறது மீடியா வட்டாரம். 

குண்டு பாய்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ரஞ்சித்குமார். அவரைச்  சந்தித்தோம். வலியுடன் பேசினார். ''எல்லாமே போச்சு சார். என்னைச் சுட்டது மட்டும் இல்லாம, பொய் கேஸ் வேற போட்டுட்டாங்க. பேப்பர்ல எல்லாம் எம் பேரு, படம் வந்துடுச்சு. என் வாழ்க்கையை சீரழிச்சுட்டாங்க'' என்று கதறியவரால், மேற் கொண்டு பேசமுடியவில்லை. அதனால், அவரது தந்தை கணேசனிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அப்பாவியைச் சுட்டுவிட்டு திருட்டுப் பட்டம்!'

''நாங்க தி.நகர்ல குடிஇருக்கோம். ரஞ்சித் கேட்டரிங் கல்லூரியில் படிக்கிறான். உடல்நிலை சரியில்லாத பாட்டியைப் பார்க்க, 29-ம் தேதி கூடுவாஞ்சேரி போனான். அவனோட நண்பர்கள் மணிகண்டன், சுரேஷ், ரியாஸும் அவன்கூட காரில் போயிருக்காங்க. உறவுக்காரப் பையன் கார்த்திக்தான் காரை ஓட்டி இருக்கான். பாட்டியைப் பார்த்துட்டு ராத்திரி 12 மணிக்கு மேல கிளம்பி இருக்காங்க. வண்டலூர் பக்கம் வரும்போது, வாகன சோதனை நடத்திக்கிட்டு இருந்த இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரரும் மடக்கி இருக்காங்க. கார்த்திக் வண்டியை விட்டு இறங்கி இருக்கான். அந்தநேரத்துல இன்ஸ்பெக்டர், தன்னுடைய கையில் இருந்த துப்பாக்கியை லோடு செஞ்சிருக்கார். அப்போ, துப்பாக்கி வெடிச்சி தோட்டா கார் கதவைத் துளைச்சுக்கிட்டு முன் ஸீட்டுல உட்கார்ந்திருந்த ரஞ்சித் தொடையில பாய்ஞ்சுடுச்சு. உடனே, அதே காரில் ரஞ்சித்தை அழைச்சுட்டு வந்து, ஆஸ்பத்திரியில் சேர்த்தாங்க. ரஞ்சித்கூட வந்த நண்பர்கள் எனக்கு போனில் தகவல் சொல்ல, ராத்திரியோட ராத்திரியா வந்து சேர்ந்துட்டோம்.

'அப்பாவியைச் சுட்டுவிட்டு திருட்டுப் பட்டம்!'

ஆஸ்பத்திரியில் இருந்த செங்கல்பட்டு டி.எஸ்.பி. தணிகைவேல், 'இது தெரியாம நடந்துடுச்சு. இதைப் பெரிசுபடுத்த வேணாம். மருத்துவச் செலவை நான் பார்த்துக்கிறேன். யாரு வந்து கேட்டாலும், எதுவும் சொல்ல வேணாம். உங்க பையனை நல்லபடியா குணப்படுத்தி தர்றேன்’னு ஆறுதல் சொன்னார். காலையில் வந்த  எஸ்.பி. மனோகரனும்,  ''உங்க பிள்ளை மேல தப்பு எதுவும் இல்லை. துப்பாக்கியால் சுட்டவரை வேணும்னா உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்க சொல்றேன்’னார். ஆனா, அன்னைக்கு சாயந்திரம் நாங்க கேள்விப்பட்ட தகவல் அதிர்ச்சியா இருந்துச்சு. 'உன் பையன் திருடப்போனப்ப போலீஸ் பிடிச்சிடுச்சாமே... டி.வி-யில எல்லாம் நியூஸ் போடுறாங்க’ன்னு தெரிஞ்சவங்க போன் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. .

என் பையன் தப்பு செஞ்சிருந்தா ஏன் சார் தனியார் ஆஸ்பத்திரியில சேர்க்கணும், சிகிச்சைக்கு ஏன் பணம் கட்டணும்? அவங்க தப்பை மறைக்க இப்படி தப்பா செய்தி கொடுத்து என் பையனோட வாழ்க்கையை சீரழிச்சுட்டாங்களே...'' என்று கதறினார்.

'அப்பாவியைச் சுட்டுவிட்டு திருட்டுப் பட்டம்!'

ரஞ்சித்குமாரை சுட்ட கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாசலத்திடம் பேசினோம். ''சம்பவ தினத்தன்று, நாங்கள் சோதனை செய்துகொண்டு இருந்ததைப் பார்த்ததும், ரஞ்சித்குமார் வந்த கார் 150 மீட்டர் தூரத்திலேயே நின்றது. காரில் இருந்தவர்களை இறங்கச் சொன்னோம். ஆனால், காரை கிளப்ப முயற்சித்தனர். என்னுடன் ஒருவர் மட்டும்தான் இருந்தார். அவர்களிடம் இருக்கும் பெரிய ஆயுதம் (!) அந்தக் கார்தான். அவர்கள் எங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. அதனால், காரின் டயரை நோக்கி சுட்டேன். அப்போது கார் நகர்ந்ததால், கார் கதவில் குண்டு பட்டு உள்ளே அமர்ந்திருந்த ரஞ்சித்குமார் தொடையில் பாய்ந்து விட்டது. அவரைக் காப்பாற்றும் நோக்கில், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அவர் மீது எந்த வழக்கும் இல்லை. கார் டிரைவர் கார்த்திக் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது ஒரு வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கு உள்ளது'' என்றார்.

செங்கல்பட்டு டி.எஸ்.பி. தணிகைவேல், ''தாறு மாறாக வண்டி ஓட்டிய கார்த்திக் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்றவர்களை விசாரித்து வருகிறோம். அவர்கள் எதற்காக அங்கே வந்தார்கள் என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியும்'' என்றார் சுருக்கமாக.

''தவறுதலாக ஒருவரைச் சுட்டுவிட்டு, குற்றத்துக்கான காரணம் தேடும் வண்ணம் வழக்குகளைப் போட முயற்சிக்கிறது காவல் துறை'' என்பது ரஞ்சித்குமாரின் நண்பர்கள் வைக்கும் குற்றச்சாட்டு.

ஓர் இளைஞனின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்கும் விதமாகக் கேலிக்கூத்து போல நடந்து இருக்கிறது நம் போலீஸ் நடத்தும் வாகனச்சோதனை!

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism