Published:Updated:

ஒரு கொலை... எப்படி விபத்து ஆகிறது?

அருப்புக்கோட்டை வாக்குமூலம் சொல்லும் அரசியல் படுகொலைகளின் ஆதியும் அந்தமும்!

##~##

ருப்புக்கோட்டை ம.தி.மு.க., பிரமுகர் முருகன் கொலை வழக்கு, ஒரு வழியாக இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸா​ருக்குக் கடந்த ஒன்றரை மாதங்களாக கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய அருப்புக்கோட்டை யூனியன் சேர்மன் யோக வாசுதேவன் சரண் அடைந்து​விட்டார். போலீஸ் காவலில் அவர் ஒப்பித்த உண்மைகள், சினிமாவை மிஞ்சும் பகீர் ரகம்! 

கடந்த தி.மு.க. ஆட்சியில் 2008-ம் ஆண்டு அருப்புக்​கோட்டை ம.தி.மு.க. பிரமுகர் முருகன்  கொலை செய்யப்பட்டார். அப்போதே யோக வாசு​தேவனுக்கும் அந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக புகார் கிளம்பியது. ஆனால் தி.மு.க-வின் முக்கியப் புள்ளி யோகனுக்கு ஆதரவாகக் களம் இறங்கியதால், போலீஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், கொலை வழக்கு ஆவணங்கள் அழிப்பு என்று பல அழிச்சாட்டியங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து ஜூ.வி-யில் பதிவு செய்து இருக்கிறோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முருகன் கொலை வழக்கு விசாரணை எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்தது. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் அருப்புக்கோட்டை யூனியன் சேர்மன் பதவியைப் பிடித்த யோக வாசுதேவன் திடீரென்று அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். சமீபத்தில் சட்டசபைக் கூட்டத் தொடரில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'அருப்புக்கோட்டை முருகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்’ என்று அறிவித்தார்.

ஒரு கொலை... எப்படி விபத்து ஆகிறது?

அதன் பிறகே சி.பி.சி.ஐ.டி. போலீஸார்யோக வாசுதேவனின் ரியல் எஸ்டேட் பிசினஸ் பார்ட்​னர் நொண்டி சீனிவாசனின் தம்பி அழகு ராமானு​ஜத்தைக் கைது செய்து வாக்குமூலம் பெற்றனர். அதை அடுத்து யோகனை போலீஸ் நெருங்கும் வேளையில், எப்படியோ எஸ்கேப் ஆனார். ஒன்றரை மாதங்கள் கழித்து கடந்த ஜூன் 24-ம் தேதி கமுதி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் சரண்டர் ஆனார். அதன் பிறகு போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்தபோது, யோக வாசுதேவன் கொடுத்திருக்கும் வாக்குமூலம் இதோ...

ஒரே ஊர்க்காரங்கதான்!

''ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்த எனக்கும் முருகனுக்கும் கமுதி அருகே உள்ள காவடிப்பட்டிதான் சொந்த ஊர். பிழைப்புக்காக அருப்புக்கோட்டையில் செட்டிலான நாங்கள், இங்கு தனித்தனியாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்தோம். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் நான் ஆத்திப்பட்டி பஞ்சாயத்​துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டேன். என்னை எதிர்த்து புல்லட் அழகர்சாமி நின்றார். ம.தி.மு.க-வைச் சேர்ந்த முருகன் அவருக்குத் தேர்தல் வேலை செய்தார். அதனால் ரொம்பவும் கஷ்டப்​பட்டுத்தான் ஜெயித்தேன். அது முதல் எங்களுக்குள் மனக்கசப்பு வந்தது.''

எதிரிக்கு எதிரி நண்பன்!

''அருப்புக்கோட்டை ரியல் எஸ்டேட் பிசினஸில் நான், நொண்டி சீனிவாசன், முருகன் ஆகியோர் கொடி கட்டிப் பறந்தோம். மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு, அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனி எதிரே உள்ள 10 ஏக்கர் நிலத்தை நொண்டி சீனி விலை பேசினார். ஆனால், முருகன் அந்த இடத்தை அதிக ரேட் கொடுத்து வாங்கினார். அதுபோல் மகாசித்தர் நகரில் ராமமூர்த்தி என்பவரின் நிலத்தை முருகன் விலைபேசியதும், நொண்டி சீனி கூடுதல் விலைக்கு வாங்கினார். இதனால் நொண்டி சீனிக்கும், முருகனுக்கும் போட்​டி​யும் பகையும் வளர்ந்தது. ஆத்திப்பட்டி சுப்பு​ராஜூக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தை நான் விலை பேசினேன். அப்போது முருகன் ஏக்கருக்கு 10 ஆயிரம் அதிகமாகக் கொடுக்கிறேன்னு சொல்லி அந்த பிசினஸைக் கெடுத்தார். இப்படி முருகனால் பாதிக்கப்பட்ட நொண்டி சீனியும் நானும் நண்பர்கள் ஆனோம்.''

கோயில் முதல் மரியாதை!

''ஆத்திப்பட்டியில் 2007-ல் நடந்த மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்குப் போயிருந்தேன். முருகனும் வந்திருந்தார். கோயிலில் அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை கிடைத்தது. ஆனால், பஞ்சாயத்துத் தலைவரான என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. அது எனக்கு ரொம்ப அசிங்கமாப்போச்சு. முருகனுக்கு ஊரில் செல்வாக்கு கூடியிருப்பதைக் கண்டு கடுப்பானேன்.''

தோட்டத்தில் கொலை சதி!

''அருப்புக்கோட்டை மகாசித்தர் நகரில் உள்ள நொண்டி சீனியின் தோட்டத்தில் பேசிக்கொண்டு இருந்தோம். 'முருகன் புரோக்கர்களுக்கு அதிகக் கமிஷன் கொடுத்து பிளாட்டுகளை விற்கிறான். இப்படியே போனால், பிசினஸ் போய்விடும். முருகன் உயிரோடு இருந்தால்... தொழிலும் போயிடும், அரசியலும் போயிடும். அதனால் முருகன் கதையை சீக்கிரம் முடித்துவிடுவோம்’ என்று நொண்டி சீனி சொன்னான். அருகே இருந்த நொண்டி சீனியின் தம்பி அழகு ராமானுஜம், 'அதுதான் சரி’ என்றான். பிறகு விரிவாகப் பேசுவோம் என்று கிளம்பினோம்.''

கூலிப் படை தயார்!

''மதுரைக்குத் தி.மு.க. மீட்டிங் சம்பந்தமாகப் போகும்போது வில்லாபுரத்தைச் சேர்ந்த பாட்சா பாண்டியுடன் பழக்கம் ஏற்பட்டது. முருகன் விவகாரத்தைச் சொல்லி, தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சொன்னேன். செய்துவிடலாம் என்று பாட்சா பாண்டி சொன்னான். உடனே நான் நொண்டி சீனியிடம், 'முருகனைப் போட்டுத்தள்ள ஆட்களை ரெடி பண்ணிட்டேன், அதுக்கு ஒரு லட்சம் ரூபாய் வேணும்’னு சொல்லவும் பணம் கொடுத்தார். நானும் ஒரு லட்சம் போட்டு இரண்டு லட்சம் வைத்திருந்தேன்.  

அடுத்து ஒரு நாள் ஆத்திபட்டி பஞ்சாயத்து ஆபிஸுக்கு பாட்சா பாண்டி வந்தான். ஒரு லட்சம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்தேன்.'' (இந்த பாட்சா பாண்டியை 2009-ம் ஆண்டு கொலை செய்து, விபத்தாக செட்டப் செய்த வழக்கில்தான் மதுரை எஸ்ஸார் கோபி கைது செய்யப்பட்டு ஜாமீன் வாங்கி இருக்கிறார்.)

தேதியும் குறிச்சாச்சு, இடமும் ரெடி!

''2008-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி ராத்திரி முருகனைப் போட்டுத்தள்ள நாள் குறிச்சோம். அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் இ.பி. குவார்ட்டஸ் பக்கத்தில்தான் இடம் தேர்வு செய்தோம். அன்று மாலை மணிக்கு பாட்சா பாண்டியும் அவன் ஆட்களும் நொண்டி சீனி ஆபிஸுக்கு வந்து ரெடியா இருந்தாங்க. நாங்கள் ஊரில் இருந்தால் சந்தேகம் வரும் என்பதால் நான் தொழில் ரீதியாக மதுரை செல்லவும், நொண்டி சீனி ரியல் எஸ்டேட் விஷயமாக சென்னை செல்லவும் தயாரானோம்.

என் தம்பி பாண்டுரங்கனையும், நொண்டி சீனி தம்பி அழகு ராமானுஜத்தையும் கூப்பிட்டு, 'முருகனைக் கொலை செய்ய ஆட்கள் வந்தாச்சு. உங்களுக்கு முன்னாடி அவங்க சம்பவ இடத்தில் தயாரா நிற்பாங்க. நீங்க ரெண்டு பேரும் இ.பி. குவார்ட்டர்ஸ் அருகே நின்னு அந்த வழியா வர்ற முருகனை வழி மறிச்சுப் பேச்சுக் கொடுங்க. கூலிப் படை ஆளுங்க முருகனை அடையாளம் பார்த்துக்குவாங்க. அவங்க கிட்டே வந்ததும், நீங்க அந்த இடத்தில் இருந்து கிளம்பிருங்க’னு சொன்னேன்.''

ஒரு கொலை விபத்தானது!

''பாட்சா பாண்டியும் அவரது கூட்டாளிகளான பிரபு, கார்த்தி ஆகிய மூவரும் நொண்டி சீனியோட டாடா சுமோ காரில் போய் சம்பவ இடத்தில் தயாராக இருந்தாங்க. அவங்களிடம், 'டாடா சுமோ கார் நம்பரைக் குறிச்சிட்டாங்கன்னா சிக்கல். அதனால நீங்க செம்பட்டி, புலியூரான் வழியாக மதுரை - தூத்துக்குடி பைபாஸ் ரோட்டில் பஸ் அல்லது லாரியைப் பிடிச்சு மதுரைக்குப் போயிருங்க’னு சொல்லியிருந்தேன். ராத்திரி 9 மணிக்கு முருகன் டூ வீலரில் வந்தான். என் தம்பி பாண்டுரங்கனும், அழகு ராமானுஜமும், 'என்ன முருகா எப்படி இருக்கே?’னு பேச்சு கொடுத்து அடையாளம் காட்டிட்டுப் போகவும்... பக்கத்தில் நின்ற பாட்சா பாண்டியும் அவனோட ஆட்களும் முருகனைக் கொலை செஞ்சு, அதை ஒரு விபத்து போல் செட்டப் செஞ்சுட்டு எஸ்கேப் ஆயிட்டாங்க..

கொலை சம்பவம் நடக்கும்போது எங்களோட பிளான் படி, நான் தொழில் ரீதியா மதுரைக்குப் போயிட்டு காரில் காரியாபட்டி அவுட்டோரில் வந்துட்டு இருந்தேன். அப்போ ஒரு வக்கீல் போன் செஞ்சு முருகன் இ.பி. குவார்ட்டர்ஸ் பக்கத்தில் விபத்தில் சிக்கிவிட்டதாகச் சொன்னார். நான், 'எனக்குத் தெரியாதே. நான் மதுரையில் இருந்து வந்துட்டு இருக்கேன்’னு  சொன்னேன். உடனே விருதுநகரில் இருந்து சென்னைக்கு ரயிலில் போய்க்கொண்டு இருந்த நொண்டி சீனியிடம் சொன்னேன். உடனே அவர் 'கொடை ரோட்டில் இறங்கி வருகிறேன். முருகன் ஈமச்சடங்கில் நாம் கலந்துகொண்டால்தான், யாருக்கும் சந்தேகம் வராது’ என்று சொன்னார்.''

ஆட்டத்தைக் கலைக்கப் பார்த்தாங்க!

''முருகன் உடலை செக் பண்ணுன டாக்டருங்க, 'இது விபத்து இல்லை... கொலை’னு சொல்லிட்டாங்க. அது வரை விபத்துன்னு சொல்லிட்டு இருந்த ஊர்க்காரங்க கொலைன்னு பேச ஆரம்பிச்சாங்க. மறுநாள் போஸ்ட்மார்ட்டம் முடிச்சு முருகன் உடலை ஜெயராம் நகருக்குக் கொண்டுபோனாங்க. அப்ப ம.தி.மு.க-காரங்களும், அவனோட சொந்தக்காரங்களும், 'கொலையாளிகளைக் கைது செஞ்ச பின்னாடிதான் பாடியை எடுப்போம்’னு சொல்லி மறியல் செஞ்சாங்க. எங்களுக்குப் பிரச்னை வந்துடுமோன்னு பயந்து, எனக்கு ஆதரவான ஆட்களைவெச்சு, 'முருகன் அம்மாவே பிணத்தை எடுக்கச் சொல்லிட்டாங்க’னு சுடுகாட்டில் இறுதிக் காரியங்களுக்கு ஏற்பாடு செஞ்சு முடிச்சேன்.''

கைதுக்குப் பயந்து கட்சி தாவினேன்!

''உள்ளாட்சித் தேர்தலில் ஆத்திப்பட்டி கவுன்சிலருக்​குப் போட்டியிட்டு ஜெயிச்சேன். தி.மு.க. சார்பாக அருப்புக்கோட்டை யூனியன் சேர்மன் பதவிக்குப் போட்டியிட்டு கவுன்சிலர்களுக்குப் பணம் கொடுத்து, தில்லுமுல்லு செஞ்சு சேர்மன் ஆனேன். சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முருகன் கொலை தொடர்பாக என்னைக் கைது செய்ய இருப்பதாகக் கேள்விப்பட்டேன். உடனே விருதுநகர் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், செய்தித் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி மூலம் பிப்ரவரி 12-ம் தேதி அ.தி.மு.க-வில் சேர்ந்தேன். 30 ஆண்டுகள் தி.மு.க-வில் இருந்த நான் இந்த கேஸுக்​காகத்தான் அ.தி.மு.க-வுக்கு மாறினேன். பாட்சா பாண்டியை எஸ்ஸார் கோபி குரூப் கொலை செய்ததும், என்னை போலீஸ் கைது செய்ய வாய்ப்பு இல்லைன்னு நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் பாட்சா பாண்டியோட ஆட்கள் பிரபு, கார்த்தியைக் கைது செய்ததும், அவங்க உண்மையைச் சொல்லிட்டாங்க!'' என்று சொல்லி இருக்கிறார் யோகா வாசுதேவன்!

இந்த வாக்குமூலம் காரணமாக முருகன் கொலை வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தப்புவதற்கு உதவி செய்த தி.மு.க. முக்கியப் புள்ளி யார், போலீஸ் அதிகாரிகளை டிரான்ஸ்ஃபர் செய்ய உதவியது யார், கொலை வழக்கு ஆவணங்களை யார் அழித்தது என்பனபோன்ற பல கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை!

- எம்.கார்த்தி, படம்: ஆர்.எம்.முத்துராஜ்