Published:Updated:

''கொலையைப் பார்த்த வாஞ்சியைக் கொல்லப் பார்க்கிறார்கள்!''

பதற்றத்தில் கிருஷ்ணகிரி

##~##

பெரியார் தி.க. பிரமுகர் பழனி, துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்​பட்ட சம்பவத்தையே கிருஷ்ணகிரி மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதற்குள், 'கொலையாளிகள் பழனியின் மகன் வாஞ்சிநாதனின் உயிருக்கும் குறி வைத்துள்ளனர்’ என்ற வதந்தி கிளம்பி ஏரியாவில் திகில் பரவிக் கிடக்கிறது கிருஷ்ணகிரி!

பெரியார் தி.க-வின் கிருஷ்ண​கிரி மாவட்ட அமைப்பாளர் பழனி கொலைச்சம்பவத்தில் எட்டுப் பேர் இதுவரை சரண்​அடைந்து உள்ளனர். மேலும் பலர் தலைமறைவாக உள்ளனர். முக்கியக் குற்றவாளி​யான ராமச்​சந்திரன் எம்.எல்.ஏ இன்னமும் கைது செய்யப்​படவில்லை. இந்த நிலையில்தான் அடுத்த திகில்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தர்மபுரி மாவட்ட பெரியார் திராவிடர் கழக அமைப்பாளர் வேடியப்பனிடம் பேசியபோது, ''நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரே சாட்சி, இறந்த தோழர் பழனியின் மகன் வாஞ்சிநாதன்தான். வேறு வகையிலான சாட்சியமாக இருந்தால் மிரட்டியோ, பணம் கொடுத்தோ, பிறழ் சாட்சியம் ஆக்க வாய்ப்பு உண்டு. ஆனால் பழனி வழக்கில் நேரடி சாட்சி அவரது மகனே என்பதால், பிறழ் சாட்சியத்துக்கு வாய்ப்பு இல்லை. எங்கள் தோழரின் உயிரைக் குடித்த மிருகங்களை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க எங்களிடம் இருக்கும் வலுவான ஆயுதம் அவரது மகன் வாஞ்சிநாதன்தான்.  

''கொலையைப் பார்த்த வாஞ்சியைக் கொல்லப் பார்க்கிறார்கள்!''

அதுவே தோழர் வாஞ்சிநாதன் உயிருக்கு ஆபத்தான சூழலை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்​தின்போதே பழனியைக் கொன்ற பிறகு, வெறி அடங்காமல் வாஞ்சிநாதனையும் விரட்டி இருக்கிறது அந்தக் கூட்டம். அப்போது, அவர் தப்பிவிட்டார். சட்டத்தின் பிடியில் இருந்து அந்தக் கூட்டத்தைத் தப்ப முடியாதபடி செய்யப்​போவது வாஞ்சிநாதன்தான் என்பதால், அவரது உயிருக்கும் கண்டிப்பாகக் குறி வைப்பார்கள். ஏற்கெனவே பழனியை இழந்து வாடும் அந்தக் குடும்பத்துக்கு மீண்டும் ஓர் இழப்பு எந்தச் சூழலிலும் ஏற்பட்டு விடக்கூடாது. எதிரிகள் அப்படி ஒரு காரியத்தைச் செய்ய முயன்றால், எங்களுக்கும் திருப்பி அடிக்கத் தெரியும். ஆனால், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க விரும்புகிறோம். வாஞ்சிநாதனுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான சூழ்நிலையைக் கருதி, போலீஸ் அவருடைய பாதுகாப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

''கொலையைப் பார்த்த வாஞ்சியைக் கொல்லப் பார்க்கிறார்கள்!''

வாஞ்சிநாதனிடம் பேசினோம்... ''எங்கப்பாவைக் கொன்னதை நேரில் பார்த்தவன் என்பதால் சொல்கிறேன். படுபாவிப் பசங்க... எதையும் செய்யத் தயங்க மாட்டாங்க...'' என்று மட்டும் சொன்னார்.

கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி-யான செந்தில்​குமார் கவனத்துக்கு இந்தத் தகவலைக் கொண்டு​சென்றோம். ''வாஞ்சிநாதன் இப்போது அவர்களது பூர்வீகமான சந்தூரில் தங்கி இருக்கிறார். அங்கே, தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. எனவே, அவர்களுக்கு வீண்பயம் தேவை இல்லை'' என்றார்.

இந்த நிலையில், எதிர்த்தரப்பான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்தவர்கள் இப்​போதுதான் பேச ஆரம்பித்து உள்ளார்கள்.

''கொலையைப் பார்த்த வாஞ்சியைக் கொல்லப் பார்க்கிறார்கள்!''

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரான லெனின் நம்மிடம் பேசினார்.''எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரனுக்கு அவர்களது அப்பாவின் சொத்தான 70 ஏக்கர் நிலம் ஏற்கெனவே இருந்தது. அந்த நிலத்தில் விலை உயர்ந்த கிரானைட் கனிமம் இருந்தது. அதை எம்.எல்.ஏ-வின் அண்ணன் வரதராஜன் முறைப்படி அனுமதி வாங்கி வெட்டி எடுத்து விற்பனை செய்தார். மேலும் நிறைய இடங்களை அரசிடம்குத்தகைக்கு எடுத்து கல்குவாரிகளை நிர்வாகம் செய்தார். இதன்மூலம்தான் அவர்​களின் சொத்து மதிப்பு உயர்ந்தது.அதுபுரியாமல், தவறான வழிகளில் சம்பாதித்தாக எம்.எல்.ஏ. மீது அவதூறு பரப்புகிறார்கள்.

ஆதிக்க சக்திகள் பலரிடம் இருந்து ஏழைகளின் உரிமைகளை ராமச்​சந்திரனும், லகுமய்யாவும் பல்வேறு போராட்டங்கள் மூலம் மீட்டுத் தந்து இருக்​கிறார்கள். இப்படி மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கும் எங்கள் தோழர்கள் மீது கொலைப் பழி போடுவது வேதனை அளிக்கிறது.  

பெரியார் தி.க.வைச் சேர்ந்த பழனி நிறையவே பகையையும், எதிரிகளையும் சம்பாதித்து வைத் திருக்கிறார். அவருடைய சொந்த ஊரான சந்தூரில் மிரட்டிப் பணம் பறிக்கும் வேலையை செய்துவந்ததால், ஊர்க்காரர்களே அவரைத் துரத்தி விட்டார்கள். தோழர் ராமச்சந்திரனிடமும் சில மாதங்களுக்கு முன் பெரும்தொகை கேட்டு பழனி மிரட்டி இருக்கிறார். பழனியின் அராஜகச் செயலால் பாதிக்கப்பட்ட அவருடைய எதிரிகளில் வேறு யாரோ ஒருவர்தான் இந்தக் காரியத்தைச் செய்து இருக்கக்​கூடும். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மற்றும் அவரைச் சார்ந்தவர்களை குற்றவாளிகளாகச் சித்திரிப்பது தவறான போக்கு. சட்டத்தின் உதவியோடு எங்கள் தோழர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்போம்.'' என்றவரிடம் வாஞ்சிநாதனுக்கு ஏற்பட்டுள்ள உயிர்பயம் குறித்துக் கேட்டோம். ''பழனியின் மகன் எங்கள் தோழர்களால் தாக்கப் படலாம் என்ற தகவலே வேடிக்கையாக இருக்கிறது. மாறாக, அவர்கள் நடத்திய இரங்கல் கூட்டத்தில் ராமச்சந்திரன், வரதராஜன், லகுமய்யா ஆகியோரின் போட்டோவுக்கு மாலை போட்டு, 'ஒரு மாதத்தில் எம்.எல்.ஏ. குடும்பத்தில் இதேபோல் உயிர்ப்பலி எடுக்கப்படும்’ என்று சூளுரை செய்ததாக தகவல் கிடைத்து இருக்கிறது. செய்யாத தவறுக்கு எங்கள் தோழர்கள் பழி சுமப்பதோடு, உயிருக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலையும் இருக்கிறது. இதுதான் உண்மை'' என்றார்.

இரண்டு அரசியல் அமைப்புகள் நேருக்கு நேராக நின்று மோதும் நிலைமை. இரண்டு அமைப்பின் தலைவர்களும் பேசி குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தும் காரியத்தை முதலில் பார்க்க வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இப்போது ஏற்பட்டு இருப்பது மிகப்பெரிய களங்கம். அது விரைவில் துடைக்கப்படுகிறதா என்று காத்திருப்போம்!

- எஸ்.ராஜாசெல்லம்

படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்