Published:Updated:

10 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஏலமா?

ஷாக் அடிக்கும் மின் வாரிய வேலை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'மின்சார வாரியத்தில் துணைப்பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் ஏகப்பட்ட ஊழல் நடைபெற்றுள்ளது. பணம் வாங்கிக்கொண்டுதான் அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டன’ - கடந்த வாரம், தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதம் ஒன்றில் இவ்வாறு குற்றம் சாட்டி இருந்தார். துணைப்பொறியாளர் தேர்வில் என்னதான் நடந்தது? 

மின்வாரியத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்களது பெயரை மறைத்து நம்மிடம் பேசினார்கள். ''தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக இருந்த 600 துணைப் பொறியாளர் பணியிடங்கள், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் விரைவில் நிரப்பப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர்

10 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஏலமா?

கடந்த மாதம் வெளியிட்டார். அதன்படி, நேர்முகத் தேர்வுக்கான கடிதங்கள் பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டன.

காலியாக இருந்த 600 காலிப் பணியிடங்களில், 450 பணியிடங்கள் எலெக்ட்ரிகல் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கும், 100 பணியிடங்கள் மெக்கானிக் கல் பிரிவில் பட்டம் பெற்றவர்களுக்கும், 50 பணியிடங்கள் சிவில் பிரிவில் பட்டம் பெற்றவர் களுக்கும் ஒதுக்கப்பட்டு நேர்முகத்தேர்வு நடை பெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 3,500 பேர் கலந்து கொண்டனர். ஏழு இடங்களில் நடைபெற்ற இந்தத் தேர்வில், முன்னாள் ஊழி யர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த விதி முறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. ஒவ்வொரு பணியிடத்துக்கும் 10 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது.

ஏனென்றால், தேர்வில் வெளிப்படைத்தன்மை எதுவும் இல்லை. நேர்முகத்தேர்வில் நாம் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளோம் என்று நமக்குத் தெரியாது. நம்மைவிட மற்றவர்கள் எவ்வளவு கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்ற தகவலும் தெரியாது. விதிமுறைப்படி மொத்தம் 100 மதிப்பெண்கள். இதில் 85 மதிப்பெண்கள் மாணவர்கள் கல்லூரியில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து

10 லட்சம் முதல் 15 லட்சம் வரை ஏலமா?

எடுத்துக்கொள்ளப்படும். மீதம் உள்ள 15 மதிப் பெண்கள் மட்டுமே நேர்முகத்தேர்வில் வழங்கப்படும். கல்லூரியில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களில் எந்தக் குளறுபடியும் செய்ய முடியாது. ஆனால், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை எப்படி வேண்டு மானாலும், அதிகாரிகள் நினைத்தபடி மாற்ற முடியும். ஏனென்றால், அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண்கள் பென்சிலில்தான் குறிக்கப்படுகிறது. அதன்பின், அவை சென்னையில் உள்ள தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் பணித் தொகுப்புப் பிரிவுக்கு அனுப்பப்படும். அங்கு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் நேர்முகத் தேர்வு மதிப்பெண்ணை அதிகமாக்குவதன் மூலம் போட்டியாக உள்ள மற்றவர்களைத் தகுதி குறைப்பு செய்து விடலாம். வேண்டப்பட்ட நபரைத் தேர்வு செய்து விடவும் முடியும்.''

''தொழிற்சங்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் கள் இதைத் தட்டிக்கேட்கலாமே?''

''பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் எப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரியாது. பணம் வாங்கிக்கொண்டு இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் செக்காகவோ, டி.டி-யாகவோ பணத்தை வாங்குவது இல்லை. அதனால், இவற்றை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை.''

''அப்படியானால் இதுபோன்ற முறைகேடுகளை எப்படித்தான் தடுக்க முடியும்?''

''வெளிப்படைத்தன்மை வேண்டும். வி.ஏ.ஓ. பதவி இடங்கள் எப்படி முறையாக நிரப்பப்படுகிறதோ, அதே பாணியில் அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டால், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கலாம்'' என்றனர்.

துணைப் பொறியாளர் தேர்வில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், 'தமிழ்நாடு மின்சார வாரியத் தில் காலியாக உள்ள 4,000 களப்பணியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அந்தப் பணியிடங்கள் அனைத்தும் ஐ.டி.ஐ. படித் தவர்களுக்கானது. 10-ம் வகுப்பை முடித்துவிட்டு மேல்படிப்பைத் தொடர வசதி இல்லாமல் தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு உரியது.  மேலும், களப்பணியாளர்களின் வேலை யானது, துணைப் பொறியாளர்களின் பணியைப் போல் வெள்ளைக்காலர் பணியும் அல்ல; பசை உள்ள பணியும் அல்ல. குழி வெட்டுவதும், மின் கம்பத்தில் ஏறுவதுமான உடல் உழைப்பு நிறைந்த வேலை. அந்த வேலைக்குத் தேர்வாகும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாத ஊதியமாக 3,500 மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசும் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கும் போட்டி கடுமையாகத்தான் இருக்கும். ஏழை மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ளப்போகும் இந்த நேர்முகத்தேர்வாவது நேர்மையுடன் நடக்குமா?

பணியாளர் நியமனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் இப்போது தேர்வு செய்வதைப் போன்ற முறையான அணுகு முறைப்படி நடக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு