Published:Updated:

கர்ப்பப் பையைச் சிதைத்து... ஸ்லோ பாய்சன் கொடுத்து...

பெரம்பலூரில் சிதைக்கப்பட்ட கேரளச் சிறுமி!

##~##

கேரளச் சிறுமி ஒருத்தி தமி ழகத்​தில் அனு​பவித்த துயரத்​தை நினைத்தால் தலைகவிழ்ந்து நிற்க வேண்டி இருக்கிறது. இந்தக் கொடூரத்தைச் செய்ததாகக் கைது செய்யப்​பட்டு இருப்பவர் தமிழ்நாடு சட்ட​மன்றத்தில் அங்கம் வகித்த ஒரு மனிதர் என்பதும், முக்கியக் கட்சியான தி.மு.க-வின் உறுப்பினர் என்பதும் வேதனையைக் கூட்டும் விஷயங்கள்.

 'பதினைந்து வயது கேரளச் சிறுமி கொடூரமாகக் கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க சிலர் முயற்சிக்கிறார்கள்’ என்று கேரளா கொந்தளிக்கிறது!

லான்டரம் எஸ்டேட் டூ பெரம்பலூர்!

கேரள மாநிலம் வண்டிப்பெரியாரை அடுத்துள்ள பாம்பனாறு லான்டரம் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் - சுசீலா தம்பதியின் நான்காவது மகளான சத்யாதான் மிகக்கொடூரமாகக் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டவர். லான்டரம் எஸ்டேட்டுக்குச் சென்று சத்யாவின் அப்பா சந்திரனிடம் பேசினோம். ''என் பொண்ணுங்களைப் படிக்க வைக்க என்கிட்ட போதுமான வசதி இல்லை. 'பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், உங்க பொண்ணை படிக்க வெச்சு, நல்லாப் பார்த்துப்பார்’னு பெரம்பலூரில் இருந்து வந்து இங்கே வேலை செய்யும் ஹரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம், அன்பரசு ஆகியோர் சொன்னாங்க. கஷ்​டத்தில் இருந்த நாங்களும் ஒப்புக்​கிட்டோம். சத்யாவை காரில் அழைச்சுக்கிட்டு ஜூன் 22-ம் தேதி சாயங்காலம் பெரம்பலூர் போனோம். எங்களை, ஒரு லாட்ஜில் தங்க வெச்சாங்க. மறுநாள், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் சத்யாவை விட்டோம். அங்கிருந்த எல்லோரும் 'எங்க பொண்ணைப் போல பார்த்துக்கிறோம்’னு சொல்ல, அதை நம்பி சத்யாவை விட்டுட்டு வந்தோம். கடைசியில இப்படிப் பண் ணிட்டாங்களே'' என்ற அவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

கர்ப்பப் பையைச் சிதைத்து... ஸ்லோ பாய்சன் கொடுத்து...

போனில் கதறிய சத்யா!

தொடர்ந்த சத்யாவின் அம்மா சுசீலா சொன்னார். ''சத்யாவை விட்டுட்டு வந்து ரெண்டு நாள் கழிச்சு, ராத்திரி பத்து மணிக்கு அவ போன் பண்ணினா. 'எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கலே... தயவுசெஞ்சு கூட்டிட்டுப் போயிடுங்க’ன்னா. மறுநாள் நான் மட்டும் கிளம்பிப் போனேன். பெரம்பலூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சத்யா இருந்துச்சு. அங்கிருந்த ராஜ் குமாரோட ஆளுங்க, 'உன் மகளுக்கு

கர்ப்பப் பையைச் சிதைத்து... ஸ்லோ பாய்சன் கொடுத்து...

மூளைக்காய்ச்சல் வந்திருக்கு’னு சொன்னாங்க. மூக்கு, வாயில எல்லாம் டியூப் மாட்டி அவசர சிகிச்சைப் பிரிவுல கொடுமையா இருந்தா. என் கணவரை வரச்சொல்லி போன் பண்ணினேன். மறுநாள் அவரும் எங்க ஊர்க்காரர் கருணாகரனும் வந்தாங்க. பெரம்பலூரில் இருந்து சத்யாவை திருச்சி தனியார் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்த எம்.எல்.ஏ. ஆளுங்க மட்டும்தான் அவளுக்கு மூளைக்காய்ச்சல்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. டாக்டர்கள் எங்களிடம் எந்தத் தகவலையும் சொல்லவே இல்லை. கடைசிவரை எங்களி டம் சத்யா ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை'' என்று கதறினார் சுசீலா.

பற்கள் பதிந்த தடம்

அடுத்து, அவர்கள் குறிப்பிட்ட கருணாகரனை சந்தித் தோம். ''ஆரம்பத்துல எங்களுக்கு எந்தச் சந்தேகமும் வரலை. பெரம்பலூர், திருச்சினு ஹாஸ்பிட்டலை மாத்திட்டே இருந்ததோட, அடுத்து தேனிக்கு கொண்டுபோகச் சொன் னாங்க. தேனி மருத்துவமனையில், 'இதுக்கு முன்னால் பார்த்த ஹாஸ்பிட்டல் சீட்டுகளைக் கொடுங்க’ன்னு கேட் டாங்க. அவங்க எதுவும் தரலை. நாங்க, தேனி மருத்துவ மனை போலீஸ் ஸ்டேஷனில்போய் புகார் கொடுத்தோம். பெரம்பலூரில் இருந்து வந்த போலீஸ்காரங்க, 'சத்யா விஷம் குடிச்சு தற்கொ​லைக்கு முயற்சி செஞ்சிருக்கு’ன்னு எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க...'' என்றார்.

தொடர்ந்தார் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த சுகு. ''சத்யாவை ஜூலை 4-ம் தேதி இரவு 9 மணிக்கு தேனிக்கு கொண்டுவந்து இருக்காங்க. மறுநாள் மதியம் அவர் இறந்துட்டார். பிரேதப் பரிசோதனைக்காக, கேரள போலீஸாரிடம் கடிதம் வாங்கிட்டுட்டு வாங்கன்னு தேனி ஆஸ்பத்திரியில் சொல்லிட்டாங்க. அதனால,  சத்யாவோட பெற்றோர் பீர்மேடு காவல் நிலையத்துக்கு எம்.எல்.ஏ-வின் ஆட்களோட போயிட்டாங்க. 4-ம் தேதி இரவே ஊருக்குப் போன கருணாகரன், ஊர்க்காரங்ககிட்ட நடந்த விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்.  

6-ம் தேதி காலை சத்யாவின் ஊர்க்காரர்கள் தேனிக்கு போனப்ப, புரோக்கர்களும் எக்ஸ். எம்.எல்.ஏ-வின்

கர்ப்பப் பையைச் சிதைத்து... ஸ்லோ பாய்சன் கொடுத்து...

ஆட்களும் தப்பி ஓடிட்டாங்க. போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலை வாங்கிக்​கிட்டு, ஊருக்கு வந்த பிறகு, சத்யாவின் உடலில், உதட்டில், கன்னத்தில் பற்கள் கடித்திருக்கும் தடத்தைப் பார்த்து ஊர்க்காரங்க அதிர்ச்சி ஆகிட்டாங்க. மார்புப் பகுதியில் பற்கள் பதிந் திருக்கும் தடமும் இருந்திருக்கு. லோக்கல் சி.பி.எம். தோழர்கள் மூலம், எம்.எல்.ஏ. பிஜிமோ​லுக்கு தகவல் சொல்லி இருக்காங்க. அதுக்குப் பிறகுதான் சத்யாவின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய கோட்டயம் அரசுமருத்துவ​மனைக்கு அனுப்பினோம்'' என்றார் விரிவாக.

'பதினைந்து வயதுச் சிறுமியை கற்பழித்துக் கொலை செய்து விட்டார்கள் பெரம்பலூரில்’ என்று சி.பி.எம். தோழர்கள் புயலைக் கிளப்ப... ஆடிப்​போனது கேரள அரசு. இந்த விவகாரத்தை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட... தேனி, பெரம்பலூர் என்று விரைந்தனர் போலீஸார். கோட்டயம் மருத்துவக் கல்லூரியும், இது மிகவும் கொடூரமாக நடத்தப்பட்ட பலாத்காரம் என்றும் பிறப்பு உறுப்பு மற்றும் உடலில் உள்ள காயங்கள் பற்றியும் முதல்கட்ட அறிக்கையை காவல் துறைக்கு அனுப்பியது.

ஆதாரங்களை அழிக்க நடந்த முயற்சிகள்!

சத்யாவின் உட​லைப் பரிசோதித்த மருத்துவர்​களிடம் பேசியபோது, ''பதி​னைந்து வயது சிறுமி என்றும் பாராமல், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் மிகக் கொடூ​ரமாகக் கற்பழித்து உள்ளனர். ஜூன் 25-

கர்ப்பப் பையைச் சிதைத்து... ஸ்லோ பாய்சன் கொடுத்து...

ம் தேதியில் இருந்து ஜூலை 4-ம் தேதி வரை சத்யாவின் பிறப்பு உறுப்பில் இருந்து ரத்தம் நிற்காமல் போய்க்கொண்டே இருந்து இருக்கிறது. கற்பழித்த​வர்கள், மாட்டிக்கொள்வோம் என்று பயந்து, மருத்துவர்கள் உதவியோடு, சத்யாவின் கர்ப்பப்பையில் இருந்த விந்து அணுக்களை அகற்றி இருக்கிறார்கள். அப்போது கர்ப்பப்பை சேதம் அடைந்து உள்ளது. பெரம்பலூர், திருச்சி என்று தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசென்று, சத்யாவுக்கு ஸ்லோ பாய்சன் ஊசியைப் போட்டு உள்ளனர். சத்யா விஷம் குடித்தார் என்று செட்டப் செய்து, தற்கொலை கேஸாக முடிக்க இந்த முயற்சி செய்துள்ளனர்'' என்று நெஞ்சை உலுக்கும் விஷயங்களைப் பட்டியல் இட்டனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்!

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரோடு புரோக்கர்கள் அன்​பரசு, பன்னீர்செல்வம், கார் டிரைவர் மகேந்திரன், வழக்​கறிஞரும் தி.மு.க-வின் மாவட்டப் பிரதிநிதியுமான ஜெய்​சங்கர் மற்றும் தி.மு.க.

கர்ப்பப் பையைச் சிதைத்து... ஸ்லோ பாய்சன் கொடுத்து...

பிரமுகர் பாபு ஆகியோர் கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். புரோக்கர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் சிலரைத் தேடுகிறார்கள்.

கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுசெல்லும் முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராஜ்குமார், ''என் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. பொதுவாக தி.மு.க-வினர் மீது நிலஅபகரிப்பு வழக்குப் பதிவு செய்துவரும் இந்த அரசு, முதன் முதலில் என்னை கற்பழிப்பு வழக்கில் கைது செய்து உள்ளது. இதைச் சட்டப்படி எதிர்கொண்டு, விரைவில் வெளியே வருவேன்'' என்றார்.

திருச்சி ஏ.டி.எஸ்.பி. ஃபெரோஸ்கானிடம் பேசினோம். ''மருத்துவப் பரிசோதனையின்போது உடலில் இருந்த காயங்​கள் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப் போட்டு விசாரித்தோம். சத்யா கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது. சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆறு பேர் மீதும் கற்பழிப்பு, ஆள்கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம்'' என்றார்.

சத்யாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள், பரிசோ​தனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்னும் சில அதிர்ச்சிகளை வெளிக்கொண்டு வரலாம். தவறை மறைக்கத் துணைபோன மருத்துவமனைகள் மற்றும் விலைபோன தமிழகக் காவல்துறை அதிகாரிகள் மீது சட்டம் பாய்வது எப்போது?

- சி.ஆனந்தகுமார், சண்.சரவணகுமார்

படங்கள்: எம்.ராமசாமி, வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு