Published:Updated:

எதுக்கு நடக்குது டிரான்ஸ்ஃபர்?

கொந்தளிக்கும் ஆசிரியர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

மாணவர்கள் போராட்டத்தை மட்டுமே பார்த்தவர்களுக்கு, ஆசிரியர்களின் போராட்டம் புதுசு. 'பிரிக்காதே... பிரிக்காதே... குடும்பத்தைப் பிரிக்காதே’ என்று, சென்னை சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உரக்கக் குரல் கொடுத்தனர் ஆசிரியர்கள். சென்னை மாவட்டப் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள மறுத்துத்தான் போராட்டம். 

''பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஆசிரியர்களைக் கணக்கெடுத்து, தேவையுள்ள மாவட்டங்களுக்கு அவர்களை இடமாறுதல் செய்ய அரசு முயற்சிக்கிறது. இதற்கான கணக்கெடுப்பு முறையாக நடத்தப்படவில்லை. 2011 செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையில் கணக்கெடுத்து, உபரியாக இருந்தவர்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப தமிழக அரசு உத்தரவு போட்டது. ஆனால் அதன் பிறகு, வெளி மாவட்டங்களில் இருந்து நிறையப் பேர் சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்துள்ளனர். சென்னையில் உபரியாக ஆசிரியர்கள் இருக்கும் நிலையில், எதற்காக வெளிமாவட்டங்களில் இருந்து ஆசிரியர்களை இங்கே வர அனுமதிக்கிறார்கள்? இவர்களில் சிலர் மூன்று லட்ச ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து சென்னைக்கு மாற்றலாகி வந்திருப்பதாகத் தெரிகிறது.

எதுக்கு நடக்குது டிரான்ஸ்ஃபர்?

பணம் கொடுத்து இங்கே மாறுதலாகி வருபவர்​களுக்காக... ஏற்கெனவே சென்னையில் இருக்கும் எங்களை உபரிகள் என்று கூறி மாற்றுவது எப்படி நியாயம்? எங்கள் பிள்ளைகள் சென்னையில் படிக்கிறார்கள். பள்ளி தொடங்கி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில் மாறுதல் கொடுப்பது முறைதானா? குடும்பத்தில் உள்ள அனைவரும் சென்னையில் இருக்கும்போது, நாங்கள் மட்டும் குடும் பத்தைப் பிரிந்து எப்படிப் போவது?

சென்னையிலேயே ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கிடைக்காமல், கணிதம் படித்தவர்கள் ஆங்கிலம் எடுத்து வந்தார்கள். இனி, ஆங்கிலம் படித்தவர்கள்தான் ஆங்கிலம் எடுக்க வேண்டும் என்கிறது அரசு. அதனால், இதுவரை ஆங்கிலம் பயிற்றுவித்த கணித ஆசிரியர்களை உபரிகள் என்று சொல்லி விட்டது அரசு. புதிதாக ஆங்கில ஆசிரியர்களைப் பணியில் அமர்த்தாமல்... இதுவரை பாடம் நடத்தியவர்களையும் தூக்கிவிட்டால், மாண வர்​​களுக்கும் நஷ்டம்தான்'' என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத ஆசிரியர்கள்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் மாயவன், ''கடந்த செப்டம்பர் நிலவரப்படி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை இன்று பயன்படுத்துவது தவறு. இடையில் சிலர் ஓய்வு பெற்றிருப்பார்கள். இடமாறுதல், பதவிஉயர்வு நடந்திருக்கும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு எந்த மாவட்டத்திலும் பணியாற்ற இடம் இல்லை என்கிறது அரசின் சுற்றறிக்கை. அப்படி என்றால் இவர்களை எங்கேதான் பணி அமர்த்தப் போகிறார்கள்? அரசின் உத்தரவு பெரும்குழப்பமாக இருக்கிறது'' என்கிறார்.

இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர் தமிழ்மணி, கல்வித்துறை இயக்குநர் மணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி ஆகியோரிடம் பேச தொடர்ந்து முயன்றோம். தொடர்புகொள்வதாகச் சொன்னவர்கள் பிறகு பேசவே இல்லை. விளக்கம் அளித்தால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

- கவின் மலர்

படம்: சொ.பாலசுப்பிரமணியம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு