Published:Updated:

சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்

ஜூ.வி. நூலகம்

பிரீமியம் ஸ்டோரி

கி.வீரமணி, திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல்,

84/1 (50) ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7. விலை

சுயமரியாதைத் திருமணம்  தத்துவமும் வரலாறும்

130

##~##

 செட்டிநாடு கோட்டையூரைச் சேர்ந்த ராம.அழ.சிதம்பரம் - திருவண்ணா​மலையைச் சேர்ந்த ரங்கம்மாள் இருவருக்கும் சுயமரியாதை முறைப்படி திருமணம் நடத்தி வைத்தார் பெரியார். அவர்களுக்கு இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு குழந்தைகள். 20 ஆண்டுகள் கழிந்த பிறகு, சிதம்பரம் குடும்பத்தின் மீது பூர்வீகச்சொத்து தொடர்பான வழக்கு ஒன்று போடப்பட்டு அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் தீர்ப்பு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜகோபாலன், சத்திய நாராயண ராவ் கொண்ட பெஞ்ச், அதிர்ச்சித் தீர்ப்பைக் கொடுத்தது.

'குறிப்பிட்ட இந்தத் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று கூறப்​படுகிறது. இது சாஸ்திரங்களின்படி நடைபெறவில்லை. எனவே, இது இந்துச் சட்டப்படி செல்லத்தக்க திருமணமே இல்லை. யாரோ சிலர் கூடி தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நாங்கள் இந்தத் திருமணம் நடத்துகிறோம்

சுயமரியாதைத் திருமணம்  தத்துவமும் வரலாறும்

என்று கூறிச் செய்ய, அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படியான பிள்ளைகளாகவே கருத முடியாது’ என்று அளித்த தீர்ப்பு அந்த நான்கு குழந்தைகளை மட்டுமல்ல... இதே முறைப்படி திருமணம் செய்துகொண்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் குழந்தைகளையும் நடுத்தெருவில் கேள்விக்குறியாக நிறுத்தியது.

ஆனால், 'சாஸ்திரம், சடங்குகள் இல்லாமல் செய்யப்பட்ட திருமணங்கள் செல்லும்’ என்பதை மத்திய அரசாங்கம் கொண்டுவந்த ஸ்பெஷல் மேரேஜ் ஆக்ட், அண்ணா முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த சுயமரியாதைத் திருமணச் சட்டம் ஆகியவை பிற்காலத்தில் இதற்கு சட்டரீதியாகப் பாதுகாத்தன. இதன் மூலமாக சமூக சீர்திருத்த இயக்கம் ஒன்றின் தத்துவம் ஆட்சி நெறிமுறையாக மாறியது. இந்த வரலாற்றை பல்வேறு ஆவணங்களின் மூலமாக அடுக்கி உள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இதை எழுதுவதற்கு இயக்க ஆர்வம் மட்டுமல்ல, சொந்த குடும்ப ரீதியான பிணைப்பும் வீரமணிக்கு இருக்கிறது. 'சிதம்பரம் - ரங்கம்மாளுக்குப் பிறந்த பிள்ளைகள் சட்டரீதியானவை அல்ல’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது அல்லவா? அந்த பிள்ளைகள் நால்வரில் ஒருவரான மோகனாதான், வீரமணியின் மனைவி!

அருப்புக்கோட்டையில் 1928-ம் ஆண்டு நடந்த ஒரு திருமணம்தான் முதல் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகிறது. அதை நடத்தி வைக்க பெரியார் சென்றதும், அப்போது நடந்த காட்சிகளும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்படுகின்றன. அவர்களது குடும்பத்துப் பேரன், பேத்திகள் பிற்காலத்தில் கொடுத்த பேட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இந்த முதல் சுயமரியாதைத் திருமணம், கடவுளை நம்பி நடந்துள்ளது. '...தம்பதிகளுக்கு மேன்மேலும் ஆண்டவன் அருள் சுரக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை எல்லோரும் வேண்டி அவரவர் ஊருக்கு விடைபெற்றுக்கொண்டு போயினர். சுபம்’ என்று முடிகிறது அப்போதைய குடிஅரசு பத்திரிகை செய்தி. இதன்படி பார்த்தால் கடவுள் மறுப்புக்கு முன்னதாகவே சாஸ்திர, சடங்கு எதிர்ப்புதான் முக்கியமானதாக பெரியார் நினைத்துள்ளார்.

சடங்கு, சம்பிரதாயம் இல்லாததுதான் சுயமரியாதைத் திரு​மணம் என்று பலரும் நினைக்கிறார்கள். வீண் செலவு, அதிக ஆடம்பரம், நீண்ட நேரம் நடப்பது... போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். வாழ்த்துரை என்ற பெயரால் மணிக்கணக்கில் இன்று திருமணங்கள் நடக்கின்றன. ஆடம்பரத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இவை இந்த தத்துவத்தின் அடிப்படைக்கே விரோதமானவை என்று புரிய​வைக்கிறது இந்தப் புத்தகம்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு