Published:Updated:

ஆசிரியர்கள் ஃபெயில்

தகுதி இல்லைன்னு சொல்றதுக்கு ஒரு தேர்வா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

வாத்தியார்கள் மொத்தப் பேருக்கும் பெரும்சோதனை ஏற்பட்டு விட்டது! 

கடந்த வியாழக்கிழமை நடந்த தகுதித்தேர்வு, தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களையும்

ஆசிரியர்கள் ஃபெயில்

விழி பிதுங்க வைத்துள்ளது. 'தகுதித்தேர்வு நடத்துறோம்னு சொல்லி எல்லாரையும் தகுதி இல்லாம ஆக்கப்போறாங்க’ என்று கொந்தளிக்கிறார்கள் ஆசிரியர்கள். 'ஆசிரியர் தேர்வு ஆணையம் நடத்தும் இந்தத் தேர்வு, ஆசிரியர்களைப் பணி நியமனத்தில் இருந்து தள்ளி வைப்பதற்காக நடத்தப்பட்ட அநியாயமான தேர்வு’ என்று குமுறுகிறார்கள்!

அப்படி என்ன அநியாயம் நடந்தது?

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை இதுவரை வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்தான் பணி நியமனம் செய்தார்கள். ஆனால் இப்போது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தின்படி, தகுதித்தேர்வு நடத்தித்தான் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதனால் கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றன. கடந்த  தி.மு.க. அரசு அறிவித்த 1,743 இடங்கள் தவிர அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அறிவித்த 27,000 ஆசிரியர் பணி இடங்களும் இப்போது நிரப்பப்பட வேண்டும். இந்த நிலையில்தான் மத்திய அரசின் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் அளிக்கும் பெருநிதியை வாங்குவதற்காக, தகுதித் தேர்வை நடத்த மாநிலஅரசு முடிவு எடுத்தது. 'ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள நாங்கள் இன்னும் ஒரு தேர்வை எதற்காக எழுத வேண்டும்?’ என்று பெரும்பாலானோர் நீதிமன்றம் சென்றனர். அதில் ஒரு முடிவு தெரியும் முன்னரே, இந்தத் தேர்வு தமிழகத்தில் நடந்து விட்டது.

ஆசிரியர்கள் ஃபெயில்

நடந்து முடிந்த தேர்வு குறித்துப் பேசுகிறார் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி. ''எட்டாம் வகுப்பு வரையிலான பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், பெரும்பாலான கேள்விகள் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான

ஆசிரியர்கள் ஃபெயில்

பாடங்களில் இருந்தே கேட்கப்பட்டன. கணக்குப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள்... ஐ.ஏ.எஸ் தேர்வுக்குக் கேட்பதுபோன்று கடினமாக இருந் தன. கடினமாக இருந்தாலும் பரவாயில்லை, அதற்கு ஏற்ப நேரமும் கொடுக்கவில்லை. போனவாரம் நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வில் 200 கேள்விகளை முடிக்க மூன்று மணி நேரம் கொடுத்தனர். அப்படி என்றால் எங்களுக்கான 150 கேள்விகளுக்கு குறைந்தது இரண்டே கால் மணி நேரம் ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், ஒன்றரை மணி நேரத்தில் எழுதி முடிக்க வேண்டும் என்றனர். அதனால், யாராலுமே குறிப்பிட்ட நேரத்துக்குள் 150 கேள்விகளையும் படித்துப் பார்த்து பதில் அளிக்க முடியவில்லை. என்னால் 100 கேள்விகளைக்கூட பதில் எழுதி முடிக்க முடியவில்லை. இத்தனைக்கும் நான் மூன்று மாதங்களாக பாடங்களை விழுந்துவிழுந்து படித்தேன். என்னுடைய அத்தனை எதிர்பார்ப்பும் வீணாகி விட்டது'' என்று கண் கலங்கினார்.

எழுதியதில் இருந்த சிரமம் குறித்துப் பேசுகிறார் திருநெல்வேலி மாவட்டம்  கடையநல்லூரைச் சேர்ந்த ரத்தினம். ''கணக்குப் பாடத்தில் இருந்த 30 கேள்விகளுக்கும் பதில் அளிக்க குறைந்தது ஐந்து படிநிலைகளாவது போட்டுப் பார்க்க வேண்டும். எவ்வளவு வேகமாகப் போட்டுப் பார்த்தாலும் குறைந்தது ஒவ்வொன்றுக்கும் இரண்டு நிமிடங்கள் ஆகும். அப்படிப் பார்த்தால், அந்த 30 கேள்விகளுக்கு மட்டுமே 60 நிமிடங்கள் தேவைப்படும். ஆங்கிலப் பாடத்துக்கான கேள்விகளில் ஒரு பக்க அளவில் ஒரு கட்டுரை கொடுத்து, அதில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதைப் படித்து அர்த்தம் புரிந்து பதில் சொல்ல 10 நிமிடம் ஆகும். ஒவ்வொரு கேள்விக்குமான சரி யான பதிலை, நான்கு வட்டங்களில் இருந்து சரியான வட்டத்துக்கு மையிட வேண்டும். அப்படி மையிடக் குறைந்தது ஐந்து விநாடிகள் என்று வைத்துக் கொண்டாலே, அதற்கு மட்டும் 12.5 நிமிடங்கள் ஆகிறது. கணக்கு, ஆங்கிலத்தை முடிக்க மட்டுமே 82.5 நிமிடங்கள் ஆகிவிட்டன. மீதிஉள்ள 7.5 நிமிடங்களுக்குள் மீதம் உள்ள 100 கேள்விகளையும் முடிக்க முடியுமா? அதனால், பெரும்பாலான கேள்விகளைப் படித்துப் பார்க்க நேரம் இல்லாமல் ஒத்தையா இரட்டையா பாணியில் ஏதோ ஒன்றில்தான் வட்டமிட்டோம். அதனால், யாராலும் 100 மதிப்பெண்களையே தாண்ட முடியாது'' என்கிறார்.

''முதல்வரிடம் நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பதற்காக அவசரம் அவசரமாகக் கேள்வித்தாளைத் தயாரித்து, சரியான நேர மதிப்பீடு செய்யாமல் இந்தத் தேர்வை நடத்தி முடித்திருக்கிறார்கள். அதனால் இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்று அறிவிக்க வேண்டும். அதுதான் தேர்வு எழுதிவிட்டு பதைபதைப்பில் இருக்கும் 6.5 லட்சம் பேரின் துயரத்துக்கு மருந்தாக இருக் கும்'' என்கிறார் வேதாரண்யத்தைச் சேர்ந்த நெடுமாறன்.

இவர்களின் குமுறல்களை, ஆசிரியர் தேர்வாணைய அதிகாரியான சங்கரிடம் கொட்டினோம். ''தகுதித்தேர்வு குறித்த எல்லாமே மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் முடிவு செய்யப்பட்ட ஒன்று. நாங்கள் அவர்களின் வழிகாட்டுதல்படி வெறுமனே தேர்வை நடத்துபவர்கள்தான். இப்போது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தேர்வு குறித்த விவரங்களைத் திரட்டி இருக்கிறோம். நேரப்பற்றாக்குறை என்பதைப் பல இடங்களில் சொல்லி இருக்கிறார்கள். இந்தக் கருத்துகளை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, அவர்களது ஆலோசனையை ஏற்று செயல்படுவோம்'' என்கிறார்.

நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறதோ?

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு