Published:Updated:

எருதாட்டத்தை நிறுத்த வெறியாட்டம்!

எருதாட்டத்தை நிறுத்த வெறியாட்டம்!

எருதாட்டத்தை நிறுத்த வெறியாட்டம்!

எருதாட்டத்தை நிறுத்த வெறியாட்டம்!

Published:Updated:
எருதாட்டத்தை நிறுத்த வெறியாட்டம்!
##~##

மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இரண்டு புறமும் ஆட்கள் பிடித்துக் கொள்வார்கள். எதிரே துணி அல்லது பொம்மையைக் காட்டியதும் அதை, மாடு முட்டப்போகும். கயிற்றைப் பிடித்து இருப்பவர்கள் அதை இழுக்க... மாட்டுடன் மல்லுக்கட்டு நடக்கும். இந்த எருதாட்ட விளையாட்டில் ஆட்களுக்கோ, மாடுகளுக்கோ பெரிய அளவில் சேதம் ஏற்படுவது இல்லை. இந்த விளையாட்டுக்காகவே பலரும் நெய்க்காரப்பட்டிக்கு வந்து குவிவார்கள். ஆனால், இந்த முறை அந்த விளையாட்டே வினை ஆகி இருக்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி கிராமத்தில் 18 பட்டிக்குச் சொந்தமான மூங்கில் குத்து முனியப்பன் கோயில் விழா ஆண்டு தோறும் கோலாகலமாக நடக்கும். அதில் இந்த எருது விளையாட்டு முக்கியமானது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழா. இந்த ஆண்டுக்கான விழா,  கடந்த 18-ம் தேதி ஏக தடபுடலாக ஏற்பாடு ஆனது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து 92 எருதுகள் நெய்க்காரப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டன. சுமார் 5,000 பேர் திரண்டனர். 'எருதாட்டம் நிகழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றத் தடை இருப்பதால், இந்த வருடம் நடைபெறாது’ என்று திடீரென அறிவிக்கப்படவே, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் உட்கார்ந்தார்கள். பேச்சுவார்த்தை நடத்திய வருவாய்த் துறையினர் அப்போதைக்குப் பிரச்னையைத் தீர்க்கும் வண்ணம், 'நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’ என்று பேசி அனுப்பினார்கள்.

எருதாட்டத்தை நிறுத்த வெறியாட்டம்!

அடுத்தநாள் காலை, 'எருதாட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை’ என்று காவல்துறை உறுதியாகச் சொன்னது. மேலும், பிரச்னை வந்தால் சமாளிப்பதற்காக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த  போலீ​ஸாரும் எஸ்.பி., டி.ஐ.ஜி., போன்ற காவல்துறை உயர் அதிகாரிகளும் களத்தில் இறங்கி நின்றனர்.  மதியம் 12 மணிக்கு வந்த கலெக்டர் மகர பூஷணம், ஊர் நாட்டாமை​களிடம் தனிஅறையில் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு​வார்த்தை மாலை வரை இழுத்துக் கொண்டே போகவே, வெளியில் காத்திருந்த மக்கள் ஆவேசம் அடைந்தனர்.

எருதாட்டத்தை நிறுத்த வெறியாட்டம்!

நெடுஞ்சாலையில் கட்டை​களைப் போட்டு போக்குவரத்தைத் தடை செய்வதில் களேபரம் ஆரம்பம் ஆனது. கற்களையும், பாட்டில்​களையும் வீசி... கட்டை​களைப் போட்டு தீ வைக்க ஆரம்பித்தது கூட்டம். அப்போது ஏரியாவில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போன நிலையில் பொறுமை இழந்த இளைஞர் கூட்டம் ஒன்று, மாடுகள் நின்ற இடத்துக்குப் பக்கத்தில் போகத்தொடங்கியது. உடனே உஷார் ஆன போலீஸ் லத்தியைச் சுழற்ற ஆரம்பித்தது. போலீஸார் லத்தியுடன் முன்னேற... ஆவேசமான கும்பல், கற்களை எடுத்து எறிய... சில நிமிடங்களில் அந்த இடமே கலவர பூமியாகி விட்டது.

எருதாட்டத்தை நிறுத்த வெறியாட்டம்!

இளைஞர் பட்டாளம் ஆங்​காங்கே ஒளிந்து நின்று, போலீஸ் மீது கற்களை எறிந்தார்கள். தற்காப்பு கவசத்துடன் கும்பலை நெருங்கிய போலீஸ் கையில் கிடைத்தவர்களை நாயடி, பேயடி என்று அடித்துத் துவைத்தார்கள். கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதால் சாமி கும்பிட வந்த பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் தட்டுத்தடுமாறி தப்பி ஓடினார்கள். ஓடியவர்களை விரட்டிச் சென்ற போலீஸ், வீட்டுக்குள் நுழைந்தாலும் விடாமல் பிடித்து அடித்து மிதித்தது. ஆண், பெண், வயதானவர் என்று எதையும் பார்க்காமல் அடித்ததில் 30-க்கும் மேற் பட்டோர் படுகாயம் அடையவே, ஆஸ்பத்திரிக்கு அள்ளிச்சென்றார்கள். போலீஸ் தரப்பில் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட ஆறு பேர் காயம் அடைந்தனர். இந்தச் சம்ப​வத்தை அடுத்து, 124 பேர் கைது செய்யப்பட்டனர். கலகலவென சந்தோஷமாக களைகட்டிய திருவிழா பிரதேசம்... சில மணி நேரங்களில் குண்டு வெடித்த இடம் போல ரத்தத் துளிகளுடன் வெறிச்சோடிக் கிடந்தது.

நடந்த சம்பவம் குறித்து சேலம் கலெக்டர் மகர பூஷணத்திடம் பேசினோம். ''எருதாட்டம் நடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தடை உள்ளது. அதை எத்தனையோ முறை எடுத்துச் சொல்லியும் இவர்கள் கேட்கவில்லை. சிலர் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொண்டதால் அவர் களைக் கட்டுப்படுத்த வேண்டி வந்தது. மற்றபடி நிலைமை அமைதியாகவே  இருக்கிறது'' என்றார்.

உச்ச நீதிமன்றத் தடை இருந்தால் அதை இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்ன​தாகவே அந்தத் திருவிழாவை ஏற்பாடு செய்பவர்களிடம் சொல்லி... மற்ற ஊர்களில் இருந்து ஆட்களும் எருதுகளும் வருவதை ஆரம்பத்திலேயே தடுத்து இருக்க வேண்டாமா? கூட்டம் கூடியபிறகு சட்டம் பேசுவதும் லத்தியைச் சுழற்றுவதும் எந்த வகை நியாயம்?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.தனசேகரன்,

எம். விஜயகுமார்