ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், கடந்த 14-ம் தேதி துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்ற காவல்துறையினர், துர்நாற்றம் வீசும் அந்த வீட்டைத் திறந்தபோது ஒரு நடுத்தர வயது பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அந்தச் சடலத்துக்கு அருகில் மனப்பிறழ்வு ஏற்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்திருக்கிறார்.

அதையடுத்து அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், அந்தப் பெண்ணைக் கொலை செய்திருக்கக்கூடும் எனச் சந்தேகத்தின் பேரில், அங்கிருந்த இளைஞரையும் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அந்தப் பகுதி காவல்துறையினர், ``ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா ஆணையர் மண்டலத்தின் மல்காஜ்கிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடிக் கட்டடத்தில், கடந்த 14-ம் தேதி சனிக்கிழமையன்று துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் புகாரளித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதைத் தொடர்ந்து, அந்த வீட்டில் 50 வயது பெண் ஒருவர் இறந்துகிடந்தார். அந்தப் பெண் விஜய வாணி என அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அவர் இறந்து மூன்று நாள்கள் ஆகியிருக்கலாம். அவர் இறந்தும், சடலத்துடன் அவரின் மகன் இருந்திருக்கிறார்.
இறந்த விஜயவாணி தன் மகன் வெங்கட் சாயுடன் வசித்துவந்தது தெரியவந்திருக்கிறது. தற்போது வழக்கு பதிவுசெய்து, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். பி.டெக் பட்டதாரியான சாய், தன் தாயைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகத்தின்பேரில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்று தெரிவித்தனர்.