Published:Updated:

கவனிக்கப்பட்ட கறுப்புக் குல்லா!

ஃப்ராடு - 2ஜூ.வி. அதிரடி ஃபாலோ-அப்

பிரீமியம் ஸ்டோரி
##~##

விடை தெரியாத கேள்விகளோடு, விவரம் புரியாத பின்னணியோடு அடிக்கடி சில மனிதர்கள் வெளிச்ச வட்டத்துக்குள் உலா வருவதும்... திடுக்கென காட்சிகள் மாறி அந்த மனிதர்கள் சட்டத்தின் வேட்டைக்கு இலக்காகி இருட்டு மூலைக்குப் போவதும் ஜூ.வி. வாசகர் களுக்குப் புதியது அல்ல! 

ஜூ.வி-யில் அப்படி சுட்டிக்காட்டப்பட்டு... ஒருசில நாட்களிலேயே போலீஸின் வலைவீச்சுக்கு ஆளாகி நிற்கிறார் 'அப்ரோ' யேசுதாஸ்!

ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமலேயே, அதன் பெயரைத் தன் 'நிறுவனத்தோடு’ தொடர்புபடுத்தி விளம்பரங்கள் செய்து... ஜூ.வி-யால் அதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டு... குபீரென்று ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை விளம்பரத்தால் வலை இறுக்கப் பட்டதன் விளைவு -  கறுப்புக் குல்லா போட்டுக்கொண்டு

கவனிக்கப்பட்ட கறுப்புக் குல்லா!

வீர உலா வந்த யேசுதாஸ், போலீஸுக்குப் பயந்து தலைமறைவாக இருக்கிறார். வியாழக்கிழமை இரவு நிலவரம் இது. அதற்குள் அவரது உதவியாளர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்!

யேசுதாஸின் நடவடிக்கைகள் குறித்து கடந்த 22.7.2012 ஜூ.வி. இதழில், 'வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா....  யேசுதாஸ் நல்லவரா?’ என்று கனமான கேள்விகள் எழுப்பி இருந்தோம். அதில், ஐ.பி.யேசுதாஸ் பொதுமக்களிடம் எந்த வழிகளில் பணம் வசூலிக்கிறார்... எப்படி கடன் தருகிறார்... அவருடைய அப்ரோ நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற்றுள்ளதா அல்லது அந்த அனுமதியே  போலியானதா, நுண்கடன் என்ற பெயரில் அந்த நிறுவனம் நடத்தும் கொடுக்கல் வாங்கல் சட்டபூர்வமானதுதானா என்பதையெல்லாம்  ஆதாரங்களுடன் வாசகர்களின் பார்வைக்கு வைத்து இருந்தோம்.

பிரபல பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி களிலும் வட்டியில்லாக் கடன் வழங்குவதாக விளம்பரம் செய்யும் இவருடைய அப்ரோ நிறுவனம், 'குண்டர்களை வைத்து மிரட்டி வட்டி வசூல் செய்வதாகவும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் உறுப்பினராகச் சேருவதற்கு 2,500 முதல் 3,000 ரூபாய் வரை வசூல் செய்வதாகவும், கடன் பெறும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களிடம் அப்ரோ-வின் ஏஜென்டுகள் ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை கமிஷன் பெறுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளையும் அப்படியே பட்டியலிட்டு இருந்தோம்.

இதுபோன்று கடன் தரு வதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றுவது மிகவும் பழைய டெக்னிக். ஆனால், கூடி நிற்கும் பயனாளிப் பெண்கள் வாழ்த்தொலியுடன் பூத்தூவி வரவேற்கும் அரசியல் ஸ்டைல் விளம்பரங்களின் துணையுடன் அப்ரோ நிறுவனம் வசூல் செய்வதால், அன்றாடம் உழைத்து வாழும் ஏதுமறியாத அப்பாவி மக்கள் அதிக எண்ணிக்கையில் ஏமாந்து விடும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது. பெரிய விபரீதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்ற எச் சரிக்கை உணர்வோடு, நாட்டு நலன் விரும்பிகள் சிலர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில்தான் ஜூ.வி.அந்தக் கட்டுரையை வெளிட்டு இருந்தது. இதுபோன்ற ஆசாமிகளிடம் பொதுமக்கள் கவனத்துடனும், காவல்துறை கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அந்தச் செய்தியின் இறுதியில், 'யேசுதாஸ் கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்’ என்றும் பதிவு செய்திருந்தோம்.

கவனிக்கப்பட்ட கறுப்புக் குல்லா!

அந்தச் செய்தி பிரசுரமான இதழ் வெளியானதும் கடந்த 20-ம் தேதி, யேசுதாஸின் மேனேஜர் ராஜேஷ், 150  பெண்களைத் திரட்டிக் கொண்டு நமது அலுவலகத்துக்கு வந்திருந்தார். பாவம் அந்த அப்பாவிப் பெண்கள்... பலமான சில வாக்குறுதிகள் கொடுத்து, ஜூ.வி.. அலுவலகத்தை முற்றுகை இடுவதற்காகத் திரட்டி வரப்பட்டார்கள் என்பது பிறகு நமக்குத் தெரிய வந்தது. நாம் வெளியிட்ட செய்தி குறித்து விவாதிக்கவோ, அதுபற்றி நாம் அளித்த விளக்கத்தைக் காது கொடுத்துக் கேட்கவோ அந்த மேனேஜர் ராஜேஷ் தயாராக இல்லை. தான் தகவல் கொடுத்து திரட்டி வந்த மகளிர் கூட்டத்தை மேலும் மேலும் உசுப்பேற்றி,  கறுப்புக் குல்லா யேசுதாஸுக்கு ஆதரவாக கோஷமிட வைப்பதிலேயே குறியாக இருந்தார்.  தாங்கள் அம்பலப்பட்டு விட்டோம், தங்கள் குபீர் தொழில் பாதிக்கப்பட்டு விட்டது என்ற ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக அந்த அப்பாவிப் பெண்களை பிரெயின்வாஷ் செய்து அழைத்து வந்திருந்தார் என்று புரிந்தது. 'எங்க சாருக்கு நாங்க பூ போட்டா உங்களுக்கு என்ன?’ என்று கேட்டார் ஒரு பெண். 'எங்களுக்கு நல்லது பண்றவரைப் பத்தி எப்படி தப்பா எழுதலாம்?’ என்று அதில் பலர் கேட்டார்கள். நமக்கு அவர்களைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

இதற்கெல்லாம் பிறகுதான் அதிரடிக் காட்சிகள் ஆரம்பம் ஆனது!

ரிசர்வ் வங்கி பரபரப்பான எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை நாம் எழுப்பிய பகீர் சந்தேகங்களை உறுதிபடுத்துவது  போல  இருந்தது. அந்த அறிக்கையின் முழு விவரம் இங்கே....

'சென்னை கொளத்தூரில் கதவு எண் 27/49, 5-வது மெயின் ரோடு, 3-வது லே அவுட், ஆசிரியர் குடியிருப்பு என்ற முகவரியில் அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவர்கள் தமது இணையத்தளத்தில் www.aphrofin.com இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கடன் அளிக்கப்படுகிறது என்று தெரிவிப்பதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரை உரிய அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தி வருவது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்குத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், அப்ரோ டிரஸ்ட் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் நெறிப்படுத்தப்படவில்லை. மேலும், இந்த நிறுவனங்கள் மின்னணு (டி.வி. ஊடகங்கள்) மூலம் செய்யும் விளம்பரங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று பொதுமக்கள் எச்சரிக்கப்படுகின்றனர். இந்த நிறுவனங்களுடன் எவரேனும் பரிவர்த்தனை மேற்கொண்டால், அவற்றின் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பு ஆவார்கள்’ என்பதே ரிசர்வ் வங்கி தனது ரகசிய விசாரணையைத் தொடர்ந்து வெளியிட்ட அந்த அறிக்கை.

இது வெளியானதுமே, யேசுதாஸ் விவகாரத்தில் காட்சிகள் அதிரடியாக மாறியது. உடனே சுதாரித்துக் கொண்ட மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார், சூ-மோட்டாவாக இதையே ஒரு புகாராகப் பதிவு செய்து, யேசுதாஸ் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். மத்தியக் குற்றப்புலனாய்வுப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் 'அப்ரோ' நிறுவனம் மீது புகார் அளிக்க, அதன் பேரில், யேசுதாஸ் மீது கூட்டுச் சதி, பண மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். யேசுதாஸைக் கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப் படை போலீஸார், அவருடைய கொளத்தூர் வீட்டை 25-ம் தேதி சுற்றி வளைத்தனர். ஆனால், இந்த தகவலைக் கேள்விப்பட்ட யேசுதாஸ் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார் என்கிறது போலீஸ் வட்டாரத் தகவல்.

இதையடுத்து, அவருடைய மேனேஜர் ராஜேஷ் மற்றும் அவரது உதவியாளர்கள் செல்வதுரை, அகஸ்தியநாதன், கேப்ரியல் ஆகியோரைச் சுற்றி வளைத்தனர். இவர்களை ஒவ்வொருவராக கைது செய்தபோதுதான், யேசுதாஸுக்கு சென்னையில் பல பகுதிகளில் சொந்த பங்களாக்கள் இருப்பது தெரிய வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அப்ரோ நிறுவனத்தின் மீது புகார் அளித்த மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை சந்தித்தோம். ''எண்ணூர் பகுதியில் யேசுதாஸைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குற்றச்சாட்டுகள் வந்தன. ஆனால், யாரும் அவர் மீது எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவிக்க முன்வரவில்லை. இருந்தாலும் யேசுதாஸின் நட வடிக்கைகளை நாங்கள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டுதான் இருந்தோம். சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தோம். சமீபத்தில், ரிசர்வ் வங்கியின் அறிக்கை, யேசுதாஸும் அவருடைய நிறுவனமும் மோசடியானவை என்பதைத் தெளிவுபடுத்தியது. அதன்பிறகுதான் இந்த நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம். தலைமறைவாக உள்ள யேசுதாஸை விரைவில் கைது செய்வோம்'' என்றார்.

மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் ஆணையர் ராதிகாவிடம் பேசினோம். ''மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றுதான் இந்த நடவடிக்கையை நாங்களாகவே எடுத்துள்ளோம். இனிமேல் தைரியமாக நிறையப் பேர் புகார் கொடுக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். யேசுதாஸைக் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினால்தான் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்ற தகவல் தெரியவரும்'' என்றார்.

இதற்கிடையே, ''போலீஸா - நாமா என்று ஒரு கை பார்த்துவிடுவோம். நமக்குப் பின்னால் மகளிர் பலம் இருக்கிறது என்று காட்டும் வகையில் மேலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துங்கள்'' என்று 'அப்ரோ'வின் மெயின் மூளை கட்டளை இட்டிருப்​பதாக ஒரு தகவல் காவல்துறையை எட்டி உள்ளது. இதை உண்மையாக்கும் வகையில் சென்னை மாநகரக் காவல் துறைக்குக் குடைச்சல் கொடுக்கும் வகையில் அப்பாவி மகளிரைத் திரட்டி போராட்டங்கள் நடத்தும் வேலை சுறுசுறுப்பாகி உள்ளது.

''ஆளும் அரசுக்கே நமது பலத்தைக் காட்டி கிடுகிடுக்க வைப்போம்'' என்ற அதிரடி முடிவோடு மிக விரைவில் கோட்டையை வளைக்கவும் ஆள் திரட்டும் வேலை நடப்பதாகச் சொல்கிறார்கள்.

அரசா... அப்ரோவா... விரைவில் தெரியும்!

- ஜோ.ஸ்டாலின்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு