Published:Updated:

சவால் விட்டதால் சுட்டாரா? மணல் மாஃபியாவுக்காக சுட்டாரா?

என்கவுன்ட்டருக்குப் பின்னால் எத்தனையோ கேள்விகள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

பொதுவாக என்​கவுன்ட்டர்​கள் செய்தி வந்தா​லே, 'இவனுகளை எல்லாம் இப்படித்தான் கொல்லணும்’ என்று கமென்ட் வரும். ஆனால் மறுகால்குறிச்சி மேட்டர் வித்தி​யாசமாய் மாறிப்போனதில் போலீஸ் திகில் அடித்து நிற்கிறது! 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்​குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வானமாமலை. இவரை ஜூலை 24-ம் தேதி நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் என்​கவுன்ட்டரில் சுட்டுத் தள்ளினார். இதைக் கேள்விப்பட்டதும் அந்த ஏரியாவே அலறியது.

'வானமாமலை மீது எந்த வழக்கும் கிடை​யாது. எந்த வம்புக்கும் போகாத அப்பாவியைச் சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தால் மட்டுமே உடலை எடுக்க அனுமதிப்போம்’ என்று கிராமத்தினர் அவரது உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். பலியான வானமாமலையின் மனைவி மஞ்சு தனது மூன்று வயது மகள் வள்ளித்தாய், இரண்டு வயதே நிரம்பிய மகன் திருமலை ஆகியோரை கையில் பிடித்தபடி அழுது புரண்டுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நெல்லை மாவட்ட எஸ்.பி-யான விஜயேந்திர பிதரியின் மனைவியும் சேரன்மகாதேவி சப்-கலெக்டருமான ரோகினி ராம்தாஸ், மஞ்சுவிடம் இருந்து கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு அவரைச் சமாதானம் செய்தார்.

சவால் விட்டதால் சுட்டாரா? மணல் மாஃபியாவுக்காக சுட்டாரா?

'நடந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. உங்​களையும் இந்த குழந்தைகளையும் ஆதரவற்ற நிலையில் விட மாட்டோம். உரிய நிவாரணம் கிடைக்க நானே ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னதும் கூட்டத்தில் இருந்த​வர்கள் பலரும் சமாதானம் அடைந்து சாலை மறியலைக் கைவிட்டார்கள்.

வானமாமலையின் மனைவி மஞ்சுவிடம் பேச இயலாத நிலை என்பதால், மஞ்சுவின் உறவினரும் நாங்குநேரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.கிருஷ்ணனிடம் பேசினோம். ''இந்த சம்பவத்துக்கு முழு காரணம் மணல் அள்ளுவதற்கு போலீஸார் மாமூல் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னைதான். இங்குள்ள குளத்தில் நாங்குநேரி அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான மாணிக்கராஜ், தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரமேஷ் என்பவருடன் சிண்டிகேட் அமைத்து திருட்டுத்தனமாக மணல் அள்ளுகிறார். வேறு யாராவது இங்கு மணல் எடுத்தால் அவர்​களுக்குக் கப்பம் கட்ட வேண்டும். அப்படிப் பணம் கொடுக்காதவர்களைப் பற்றி போலீஸ் ஸ்டே​ஷனில் லிஸ்ட் கொடுத்துவிடுவார். உடனே போலீஸார் வந்து அவர்களைப் பிடித்து கேஸ் போடுவார்கள்.

சவால் விட்டதால் சுட்டாரா? மணல் மாஃபியாவுக்காக சுட்டாரா?

வானமாமலையின் தம்பி முருகன் யாருக்கும் மாமூல் கொடுக்காமல் மாட்டு வண்டியில் மணல் அள்ளி இருக்கிறார். அதனால் மாணிக்கராஜ் தூண்டுதலில் அவனை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பிடித்து 7,000 ரூபாய் பணத்தையும் அவனது செல்​போனையும் பிடுங்கிக்கொண்டு, 'இனிமேல் உன் மீது கேஸ் போட மாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.

ஆனால் அடுத்து அவருக்கு என்ன பிரஷர் வந்ததோ, மறுநாளே முருகனைக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கப் பரிந்துரை செய்தார். இதனால் வானமாமலை இன்ஸ்பெக்டரை சந்தித்து, 'பணத்தையும் பிடுங்கிக்கொண்டு இப்படி அநியாயமா என் தம்பி மேல கேஸ் போட்டு இருக்கீங்களே?’னு கேட்டிருக்கார்.

சவால் விட்டதால் சுட்டாரா? மணல் மாஃபியாவுக்காக சுட்டாரா?

இதை மனசுல வச்சிக்கிட்டு மறுநாள் மதியம் கைலியுடன் போலீஸ் வாகனத்தில் ஊருக்குள் வந்த இன்ஸ்பெக்டர் விஜயகுமார், வானமாமலையைக் கூப்பிட்டு, வண்டியில் ஏறச் சொல்லி இருக்கார். அவர், 'என்ன சார் தப்பு செஞ்சேன்?’னு கேட்​டதும் துப்பாக்கியை எடுத்து நெஞ்சில் வைத்து சுட்டுக் கொன்றுவிட்டார்'' என்றார் கண்ணோரம் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.

இந்த சம்பவம் பற்றி ஊர்க்காரர்கள் சிலரிடம் பேசினோம். ''தம்பி முருகனைப் பிடிச்சுட்டுப் போனதால் இன்ஸ்பெக்டருக்கும் வானமாமலைக்கும் வாய்த் தகராறு வந்திருக்கு. அப்போது, 'இது போலீஸ் ஸ்டேஷன்கிறதால உங்க இஷ்டப்படி பேசாதீங்க.. மஃப்டியில எங்க ஊருக்கு வந்து இப்படிப் பேசிட்டுப் போயிருவீங்களா?’னு வானமாலை கேட்டு இருக்கார்.

சம்பவம் நடந்த அன்னிக்கு மதியம் 3 மணிக்கு  வானமாமலை, இன்ஸ்பெக்டருக்குப் போன் போட்டு, 'ஊருலதான் இருக்கேன்.. இன்னும் வரலியே? தைரியம் இல்லியா?’னு சவால் விட்டதாகச் சொல்றாங்க. அதில் கோபமான இன்ஸ்பெக்டர் மஃப்டியில் வந்து சுட்டுவிட்டுப் போயிட்டார்'' என்கிறார்கள் பதற்றம் தணியாமல்.

இந்த சூழலில், மணல் கொள்ளைக்குக் காரண​மானவர் என கிராமத்து மக்களால் குற்றம் சாட்டப்படும் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் மாணிக்​கராஜிடம் பேசினோம். ''இந்தக் குளத்தில் மணல் குத்தகையை எடுத்த சிலருடன் முதலில் நானும் பார்ட்னராக இருந்தேன். ஆனால் நிறையப் பேர் திருட்டு மணல் எடுப்பதால் லாபம் கிடைக்காது என்பதால் அதில் இருந்து விலகிட்டேன். நான் மாமூல் வசூலிப்பதாகச் சொல்வது அபத்தம். எஸ்.வி.கிருஷ்ணன் தேவை இல்லாமல் என் மீது புகார் சொல்கிறார். இது தவறானது'' என்றார் கலக்கத்துடன்.

என்கவுன்ட்டரில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நாங்குநேரி ஸ்டேஷனில் இருந்து மாற்றப்பட்டு

சவால் விட்டதால் சுட்டாரா? மணல் மாஃபியாவுக்காக சுட்டாரா?

காத்திருப்பில் வைக்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் பேசினோம். ''முருகன் என்பவர் மீது ஏழெட்டு கேஸ் இருப்பதால் அவர் மீது குண்டாஸுக்குப் பரிந்துரை செய்தது உண்மைதான். ஆனால் வானமாமலையை நான் பார்த்ததே கிடையாது.

24-ம் தேதி 2.30 மணிக்கு எனக்கு டி.எஸ்.பி. ஆபீஸில் இருந்து, 'பெரிய குளத்தில் ஒரு கும்பல் டிராக்டர், இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்குவதால் உடனே போங்க’னு தகவல் வந்துச்சு. அதோடு, முந்தைய நாளில் பேச்சியம்மாள் என்பவரது வீட்டை மூன்று பேர் அடித்து நொறுக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்திருந்தோம். இந்த இரண்டு கேஸையும் பார்ப்பதற்காக நான் உடனே ரெண்டு போலீஸாரைக் கூப்பிட்டுக்கொண்டு அங்கே போனேன்.

அங்குள்ள அய்யன் கோவில் அருகே நான் போகும்போது நாங்க தேடிப் போயிருந்த செல்லப்​பாண்டி டூ வீலரில் வந்தான். அவனை மடக்க நினைத்தபோது வண்டியைப் போட்டுட்டு ஓடிட்​டான். அப்போது பக்கத்தில் இருந்த குளத்துக்குள் இருந்து வானமாமலையும் அவரோடு அய்யப்பன் என்பவரும் கையில் அரிவாளோடு வந்து வெட்ட முயன்றார்கள். நான் விலகிவிட்டேன். தப்பிச் சென்று வாகனத்தில் ஏற முயன்றபோதும் மறுபடியும் வெட்டினார்.

அதனால் வேற வழி இல்லாம துப்பாக்கியை எடுக்க வேண்டியதாகிப் போச்சுது. அதை எடுக்கலைன்னா, நான் இப்போது உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்க முடியாது'' என்றவரிடம், ''மஃப்டியில ஏன் போனீங்க? உங்களை வானமாமலை செல்போனில் திட்டினாராமே..?'' என்று கேட்டோம்.

''குற்றவாளியைப் பிடிக்கப் போகும்போது யூனிஃபார்மில் போனால் ஓடிடுவாங்க. அதனால் அப்படிப் போனேன். செல்போனில் பலரும் பல மாதிரிப் பேசத்தான் செய்வாங்க. அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதில்லை'' என்றார்.  

நெல்லை சரக டி.ஐ.ஜி-யான வரதராஜு, மாவட்ட எஸ்.பி-யான விஜயேந்திர பிதரி, சப்-கலெக்டர் ரோகினி ராம்தாஸ் ஆகியோர் களத்தில் இறங்கி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் போலீஸ் வாகனங்களின் மறைவாக வாகனத்தை நிறுத்திய கலெக்டர் செல்வராஜ், ஏனோ கடைசி வரைக்கும் காரில் இருந்து இறங்கவே இல்லை. அவரிடம் பேசியபோது, ''ஜுடிசியல் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். ஓரிரு தினங்களில் அதன் முடிவு தெரியவரும். அதன் பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார் சுருக்கமாக.

வானமாமலை இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், 'நமது ஊரைக் கேவலப்படுத்தும் வகையில் எந்தத் தப்பும் செய்யாத வானமாமலையைச் சுட்டு கொன்ற இன்ஸ்பெக்டரைப் பழிவாங்கியே தீருவோம்’ என்று சபதம் எடுத்துள்ளார்களாம்.

பல மர்மமான கொலைகளுக்கு அடித்தளம் அமைத்துள்ள மணல் கொள்ளை விவகாரங்களில், அரசாங்கம் விழித்துக்கொள்ளத் தூண்டி இருக்கிறது மறுகால்குறிச்சி சம்பவம்!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு