Published:Updated:

ஃபிரான்ஸ் மாணவனைத் தவிக்கவிட்ட மயிலாடுதுறை மாணவி!

''எங்கேயும் காதல்... விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச...''

##~##

ண்டதும் காதல் என்பது  ஃபிரான்ஸுக்கும் பொருந்தும். 

ஒரே ஒருநாள் பார்த்த தன் தமிழ்நாட்டுக் காதலிக்​காக மொழி தெரியாத நிலையிலும் இரண்டு நாட்கள் சுற்றி அலைந்திருக்கிறான் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாணவன் கிளமண்ட் எரிக் கிறிஸ்டோ. காதலியைத் தேடிக் காணாமல் போன இவனைத் தேடி அலைந்து நாகப்பட்டினம் மாவட்ட போலீஸாரும் இவனது நண்பர்களும் பரிதவித்த கதைதான் விறுவிறுப்பானது.

ஃபிரான்ஸ் நாட்டில் இருந்து கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேரு​டனும் நான்கு ஆசிரியர்களுடனும் இந்தியக் கலாசாரம், பண்பாட்டை அறிந்து​கொள்வதற்காக கடந்த 10-ம் தேதி சென்னை வந்து இறங்கினான் கிளமண்ட். நாகப்பட்டினத்தில் உள்ள லாசாலி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி விடுதியில் வந்து தங்கியது அந்தக் குழு.  நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கலாசார, பண்பாடுகளை அறிந்துகொள்வது திட்டம். அதன்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஏரியாவாக ஒரு வாடகை வேன் எடுத்துச் சுற்றி வந்தார்கள். வந்தவர்களில் ஆசிரியர்கள் நான்கு பேரில் இருவர் ஆண்கள், இருவர்

ஃபிரான்ஸ் மாணவனைத் தவிக்கவிட்ட மயிலாடுதுறை மாணவி!

பெண்கள். மாணவர்களில் ஐந்து பேர் ஆண்கள், நான்கு பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் மொத்தமாகத்தான் பல இடங்களைச் சுற்றிவந்தார்கள். திடீரென்று கடந்த 20-ம் தேதி காலையில் இருந்து கிளமண்ட்டை மட்டும் காணவில்லை. பதறிப்போய்த் தேடிப் பார்த்துவிட்டு 21-ம் தேதி காலையில் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். வெளிநாட்டு மாணவனைக் காணாவிட்டால் இந்திய அளவில் பெரிய பிரச்னை ஆகுமே என்று பதறிப்போனது காவல் துறை. வேகமாக விசாரணையைத் தொடங்கி அன்று மாலையே மயிலாடுதுறையில் லாட்ஜில் இருந்த கிளமண்ட்டைக் கண்டுபிடித்தார்கள். ஃபிரான்ஸ்  நாட்டுக்கும்  அனுப்பிவைக்கப்பட்டுவிட்டான். அப்புறம் என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா?

அந்த சுவாரஸ்யத்தை விசாரணை நடத்திய காவல் துறை நண்பர் ஒருவர் விளக்​கமாக சொல்ல ஆரம்பித்தார். ''17-ம் தேதி பூம்புகாரைச் சுற்றிப்பார்க்கப் போய் இருக்கிறார்கள். போகும் வழியில் தென்படும் மக்களிடம் எல்லாம் வேனில் இருந்து கை அசைத்தபடி  சென்றிருக்கிறார்கள். கருவிழந்த​நாதபுரம் அருகே போகும்போது அங்கே நின்ற ஒரு மாணவிக்குக் கை காட்டி​யிருக்கிறார் கிள​மண்ட். அந்த மாணவி மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிப்​பவர். வெளிநாட்டு மாணவர் தனக்குக் கை காட்டியதும் மகிழ்ந்து​போன அந்த மாணவி, தன் தோழியின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு தோழியுடன் வேனைப் பின்தொடர்ந்து இருக்கிறார். வேன் பூம்பு​காரில் நின்றதும் தன்னை அறிமுகப்​படுத்திக்கொண்டார். கிளமண்ட்டுக்கும் செம குஷி. அந்த நேரத்தில் கிளமண்ட்டின் கண்களுக்கு அந்த மாணவியே காதலியாகத் தெரிந்தாள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இருவரும் ஜோடியாக பூம்புகாரை சுற்றினார்கள். கிளம்பும் நேரமும் வந்தது. பிரிந்தால் எப்படிப் பேசுவது உன் செல் நம்பரைக் கொடு என்று கிளமண்ட் கேட்க, சாதுர்யமாக அதைக் கொடுக்காமல் அவனது ஃபேஸ்புக் ஐ.டி-யை வாங்கிக்கொண்டாள் அந்த மாணவி.

நாகப்பட்டினம் திரும்பினாலும் கிளமண்ட்டுக்கு தன் தமிழ்நாட்டுத் திடீர்க் காதலி மேல் மோகம் குறையவில்லை. அவனது ஃபேஸ்புக்குக்குள் நுழைந்தாள் மாணவி. காதல் கொப்பளிக்க இரண்டு

ஃபிரான்ஸ் மாணவனைத் தவிக்கவிட்ட மயிலாடுதுறை மாணவி!

நாட்கள் முழுவதும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள் இருவரும். இந்த இரண்டு நாட்களும் தனது சக மாணவர்கள் கலாசார வேட்டையில் இறங்கியபோதும் கிளமண்ட் மட்டும் காதல் வேட்டையிலேயே கவனமாக இருந்தான். அறையைவிட்டு எங்கும் நகரவில்லை கிளமண்ட். லேப்டாப்பே கதியென்று கிடந்திருக்கிறான். ஃபேஸ்புக் பரிமாறலின் முடிவில் மயிலாடுதுறைக்கு வந்தால் தன்னை சந்திக்கலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறாள் கல்லூரி மாணவி.

விடிந்ததும் விடியாததுமாக விடுதியைவிட்டு வெளியேறி மயிலாடுதுறைக்கு எப்படிப் போவது என்று விசாரித்துக்​கொண்டு, மயிலாடு​துறை புதிய பேருந்து நிலையம் வந்து காத்திருந்தான். நேரம் ஓடியதே தவிர  அவள் வரவில்லை. காத்திருந்து நொந்துபோன கிளமண்ட் மதியத்துக்குப் பிறகு ஒரு இன்டர்​நெட் சென்டருக்குப் போய் ஃபேஸ்புக்கில் அவளைத் தொடர்பு​கொண்டு தான் காத்​திருக்கும் விஷயத்தைச் சொல்​லியிருக்கிறான். அவள் உடனே ஒரு செல்போன் நம்பரைக் கொடுத்து அதில் தொடர்பு​​கொள்ளச் சொல்லி இருக்கிறாள். அந்த எண் ஒரு ஆட்டோ டிரைவருடையது. அந்த எண்ணுக்குப் பேசியதும் அந்த ஆட்டோ டிரைவர் கிள​மண்ட்டை சந்தித்துக் கூட்டிச்​சென்று ஆர்.டி.ஓ. ஆபீஸ் எதிரே இருக்கிற ஒரு தனியார் லாட்ஜில் ரூம் போட்டுத் தங்கவைத்துவிட்டு சென்றுவிட்டான். எப்படியும் அந்த மாணவி இங்கு வந்துவிடுவாள் என்ற அதீத நம்பிக்கையோடு மறுநாள் 21-ம் தேதி வரை அங்கே காத்துக்​கிடந்தான் கிளமண்ட். கடைசி வரை அந்த கில்லாடி மாணவி வரவே இல்லை.

இந்த நிலையில் நண்பனைக் காணாமல் தவித்த ஃபிரான்ஸ் மாணவர்கள் அவனது லேப்டாப்பைத் திறந்து ஃபேஸ்புக்கை ஆராய்ந்திருக்கின்றனர். அதில்தான் அவனுக்கும் அந்த மாணவிக்கும் நடந்த உரையாடல் மற்றும் இப்போது எங்கே காத்திருக்கிறான் என்ற தகவல்கள் தெரியவந்தன. அதைவைத்துத்தான் போலீஸும் கிளமண்ட்டின் இருப்பிடத்தை வேகமாகக் கண்டுபிடித்தனர்'' என்றார் அந்தக் காவல் துறை நண்பர்.

கில்லாடி மாணவி கிளமண்ட்டை மறந்திருக்கலாம். ஆனால் கிளமண்ட் பாவம் ஃபிரான்சில் எப்படி இருக்கிறாரோ!

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு