Published:Updated:

ரகசியத்தை வெளியே சொல்லலாமா?

ரகசியத்தை வெளியே சொல்லலாமா?

பிரீமியம் ஸ்டோரி
##~##

சிலம்பட்டி எம்.எல்.ஏ-வின் பதவிக்கு உலைவைக்கும் காரியங்கள் தொடங்கிவிட்டன. 'பிரணாப் முகர்ஜிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்’ என்று ரகசியத்தை(?) வெளியிட்ட ஃபார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் கதிரவனின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்துக்குப் புகார் பறந்துள்ளது. ஃபார்வர்டு பிளாக் கட்சியில் கதிரவனுக்கு எதிராகக் கச்சை கட்டியவர்களில் பலர் ஓரங்கட்டப்பட்டார்கள். அவர்களில் ஒருவரான தினகரன், தனது தலைமையில் புதிதாக ஒரு ஃபார்வர்டு பிளாக் பிரிவை உருவாக்கி, அதன் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவர்தான் புகாரைக் கிளப்பி இருப்பவர். ''ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கணும்கிறது ஃபார் வர்டு பிளாக் கட்சியின் மத்தியத் தலைமை எடுத்த முடிவு. ஆனால், அ.தி.மு.க-வுடன் தோழமை யாக இருந்து, காரியம் சாதித்துக் கொள்ளும் கதிரவன், கட்சியின் முடிவை மீறி சங்மாவுக்கு வாக்களித்திருக்கிறார். அ.தி.மு.க-வுக்கு 147, சரத்குமார்  கட்சிக்கு 2, தனியரசு 1,

ரகசியத்தை வெளியே சொல்லலாமா?

செ.கு.தமிழரசன் 1. ஆக மொத்தம் சங்மாவுக்கு 151 ஓட்டுகள்தான் விழுந்திருக்கணும். ஆனால், அவருக்கு மொத்தம் 152 ஓட்டுக்கள் விழுந்திருக்கு. அதே நேரம் பிரணாபுக்கு, தி.மு.க. 23, சி.பி.எம். 10, காங்கிரஸ் 5, பா.ம.க. 3, மனிதநேய மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2 ஃபார்வர்டு பிளாக் 1 என மொத்தம் 46 ஓட்டுக்களுக்குப் பதிலாக 45 ஓட்டுக்கள்தான் விழுந்திருக்கு. ஆக, அணி மாறி வாக்களித்தது கதிரவன்தான் என்பதில் சந்தேகமே இல்லை. இப்ப பிரச்னை வெடிக்கவும், 'நான் பிரணாப் முகர்ஜிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்’னு பகிரங்கமா அறிவிச்சிருக்கார். இதுவே தேர்தல் விதி மீறல். ஜனாதிபதி மற்றும் உதவி ஜனாதிபதி தேர்தல் சீர்திருத்தச் சட்டம் 1974 பிரிவு 115 (ஏ)ன் படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, யாருக்கு ஓட்டு போட்டேன் என்ற ரகசியத்தை வெளியில் சொல்லக் கூடாது. எனவே அவரது வாக்கு செல்லாது என்று அறிவிப்பதுடன் அவரது எம்.எல்.ஏ. பதவியையும் ரத்து செய்யணும்னு தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு ஃபேக்ஸ் கொடுத்திருக்கிறேன். 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறையிட்டு நடவடிக்கை எடுக்கவைப்போம்'' என்றார். ''இதுக்கெல்லாம் நீங்க என்ன சொல்றீங்க..?'' என்று கேட்டதற்கு கதிரவன், ''கட்சி எடுத்த முடிவுப்படி நான் வாக்களித்திருக்கிறேன். என் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே மத்தியக் கமிட்டிக்கு மெசேஜ் போடுறாங்க. அது சம்பந்தமா போலீஸ்ல புகார் பண்ணிட்டு, இந்த வேலையை யாரு செஞ்சதுன்னும் சொல்லிட்டு வந்தேன். தலைமைக்கு உண்மை தெரியும். தொண்டனுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காக 'நான் பிரணாபுக்குத்தான் ஓட்டுப் போட்டேன்’னு சொன்னேன். இதுல என்ன ரகசியம் இருக்கு? முடிஞ்சா சட்டப்படி அவங்க என்னை சந்திக்கட்டும்'' என்று கொந்தளித்தார். 

இதனிடையே, கதிரவனின் ஆதரவாளரான முத்துராமலிங்கம் தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் 26-ம் தேதி காலையில் மனு கொடுத்திருக்கிறார் தினகரன். ''முத்துராமலிங்கம்தான் குரலை மாற்றி எனக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். 'கதிரவனின் பதவியைப் பறிக்க மனு குடுத்தீல்ல... அதுவரைக்கும் நீ உசுரோட இருந்தாத்தானேடா’னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டார்'' என்கிறார் தினகரன்.

ஒரு குட்டிக் கட்சிக்குள்ளும் குடைச்சலை உண்டாக்கிவிட்டது இந்திய ஜனாதிபதி தேர்தல்!

    - குள.சண்முகசுந்தரம்

  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு