Published:Updated:

கண்ணால் கண்ட சாட்சியம் மருத்துவ ரிப்போர்ட்

ஃபாலோ - அப்

பிரீமியம் ஸ்டோரி
##~##

வாழ்க்கை சிதைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்டு நிற்கும் வசந்தி மீதான அலட்சியம்  இன்னமும் தொடர்கிறது! 

அபலைப் பெண் ஒருவருக்குக் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் நடந்த கொடுமையை, 'பேய்களைக் கைது செய்யுமா அரசு?’ என்ற தலைப்பில் 8.7.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழிலும், 'கற்பழித்தவரைக் காப்பாற்றும் போலீஸ்!’ என்ற தலைப்பில் கடந்த 25.7.12 இதழிலும் எழுதி இருந்தோம். இன்னும்கூட, தவறு செய்த காவல் துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுதான் அதிகாரத்தின் அராஜகம்!

'நாங்கள் கற்பழிக்கவும் இல்லை, அடித்துத் துன்புறுத்தவும் இல்லை. அவள் ஒரு திருடி. நடத்தை கெட்டவள்’ என்று  பொய்யான தகவல்களை அதி காரிகளுக்கும் அரசுக்கும் சொல்லித் தப் பித்து வருகிறார்கள், தேனி மாவட்டக் காவல்துறை அதிகாரிகள்.

கண்ணால் கண்ட சாட்சியம் மருத்துவ ரிப்போர்ட்

இப்போது, பாதிக்கப்பட்ட வசந்திக்கு ஆதரவாக சில முக்கியமான ஆதாரங்கள் கிடைத்​​​துள்ளன. ஆம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், மதுரை எவிடென்ஸ் அமைப்பினர், மருத்துவ ஆதாரங்களைத் திரட்டி இருக்கிறார்கள். இது குறித்துப் பேசுகிறார் கதிர்.

''வசந்தியை காவல் நிலையத்தில் வைத்துக் கொடுமைப்படுத்திய தினத்தில், ஜெயராஜ் என்பவர் வேறு ஒரு வழக்கு தொடர்பாக அதே காவல் நிலை​யம் போய் இருக்கிறார். அப்போது தனிஅறையில் வசந்தி நிர்வாணமாக அடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்​துள்ளார். ஜெயராஜைப் பார்த்த வசந்தி, தனக்கு நடந்த கொடுமைகளைச் சொல்லி இருக்கிறார். இதைக் கண்ட போலீஸார் உடனே வசந்தியையும் ஜெயராஜையும் தாக்கி இருக்கிறார்கள். இப்போது, இந்த விவகாரம் குறித்து முழு தகவல்களையும் ஜெயராஜ் தனது வாக்குமூலமாகக் கொடுத்து இருக்​கிறார்.

கண்ணால் கண்ட சாட்சியம் மருத்துவ ரிப்போர்ட்

இந்தநிலையில், மிக முக்கியமான ஆதாரம் ஒன்று எங்கள் கைக்குக் கிடைத்து உள்ளது. திருச்சி சிறை மருத்துவ அதிகாரி கொடுத்திருக்கும் ரிப்போர்ட் அது. வசந்திக்கு நடந்த கொடுமையை உறுதி செய்துள்ளது அந்த ரிப்போர்ட். கடந்த 13.2.2012 அன்று நிலக்கோட்டை இணைச் சிறைச் சாலையில் இருந்து, நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார் வசந்தி. அங்கு காயங்களின் தன்மை அதிகமாக இருப்பதால், மருத்துவர்கள் மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்குப் பரிந் துரை செய்து உள்ளார்கள். ஆனால் போலீஸார் வசந்தியை, மதுரை அரசு மருத்துவமனைக்குக் அழைத்துச் செல்லாமல், பெரியகுளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உள்ளனர். 14-ம் தேதி, பெரியகுளத்தில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்து​​வமனைக்குக் கொண்டு​சென்று, மாலை வரை அங்கு இருந்துவிட்டு, மறுநாள் 15-ம் தேதி திருச்சிக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்.

திருச்சி மத்தியச் சிறைச்சாலையில் மருத்துவப் பரிசோதனை செய்த மருத்​துவர் சித்ரலேகா,

கண்ணால் கண்ட சாட்சியம் மருத்துவ ரிப்போர்ட்

'வசந்தியின் இடது கையில் கடுமையான வீக்கமும், இடது தோள்​பட்டையில் ரத்தக் காயங்களும், இடது பக்கப் பிட்டம், கால், தொடை, முழங்கால் என இடுப்பில் இருந்து கால் விரல்களின் நுனி வரை கடுமையான காயங்கள் இருக்கின்றன. இதுதவிர இடது பக்கக் காதும் தாக்கப்பட்டு உள்ளது. வலது முழங்காலில் ரத்தக் காயமும், இடுப்புக்குக் கீழே உள்ள பிட்டப் பகுதியில் 'லத்தி’யால்  கடுமையாக தாக்கப்பட்ட காயங்களும் இருந்தன. வலியால் உட்காருவதற்கே வசந்தி சிரமப்பட்டார்’ என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

வசந்தியின் உடம்பில் இருந்த அத்தனை காயங்​களும் 'போலீஸாரின் லத்திகளால்’தான் ஏற்​பட்டது என்பது சிறைப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்​பட்டு உள்ளது. இதுதவிர, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களும், 'தாக்குதல் காரணமாகவே வசந்திக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனே  சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்றும் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

மாவட்டக் காவல் துறைக் கண்​காணிப்பாளர் பிரவீன் குமார் கடந்த 13.2.12 அன்று பெரியகுளம் நீதிமன்றத்தில், 'வசந்திதான் குற்றவாளி. அவர் தண்டனையில் இருந்து தப்பிக்கவே நாடகம் ஆடி ஏமாற்றுகிறார்’ என்று சொல்லி மக்களையும், அரசையும், முதல்வரையும் ஏமாற்றி இருக்கிறார். திருச்சி சிறை மருத்துவர்களாலும், அரசு மருத்து​வமனை மருத்துவர்களாலும் போலீஸாருக்குப் போதுமான ஆதாரங்கள் கொடுக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யாமல், அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் காவல் துறை உயர் அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். அதனால், நீதித் துறையை நாடி உள்ளோம்'' என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்​கொண்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'வசந்தி வழக்கில் உள்ள நியாயங்களை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தேனி எஸ்.பி. பிரவீன் குமாருக்கு அறிவுறுத்தி உள்ளது. போலீஸ் மீதான குற்றச்சாட்டை போலீஸே விசாரித்தால், உண்மை எப்படி வெளியே வரும்?

இவ்வளவு நடந்த பிறகும், தேசிய மனித உரிமை ஆணையமும், தேசியப் பெண்கள் ஆணையமும், தமிழக அரசும் வேடிக்கை பார்ப்பது என்னநியாயம்?

- சண்.சரவணக்குமார்

படம்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு