பிரீமியம் ஸ்டோரி

முனைவர் தொ.பரமசிவன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை,

##~##

சென்னை - 2. விலை

சமயங்களின் அரசியல்

85

தமிழர் பண்பாடு, சமூகம், அரசியல் குறித்த தொன்​மங்களை மிகச் சரியாகத் தோண்டி எடுத்துத் தொகுத்துக் கொடுக்​கக்கூடிய முக்கியமான ஆய்வாளர்களில் ஒருவர் முனைவர் தொ.பரமசிவன். ஆய்வு அரங்குகளில் வலம் வருபவர்கள் தொ.ப. என்றே அவரை அன்புடன் அழைப்பார்கள். மிகமிகச் சிறு காட்சிகளுக்குள் உள்ள பெரிய பண்பாட்டுக் கூறுகளை அவர் எழுத்தில் படிக்கும்போது மலைப்​பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும். வழிபாடுகளில் இருக்கும் விளக்கு தொடங்கி பூக்கள் வரை அனைத்துக்கும் நுணுக்கமான வரலாறு சொல்வார். இன்றைய முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக அவர் மதிக்கப்படுகிறார். 'சமயங்களின் அரசியல்’ என்பது குறித்து அவர் எழுதிய ஒரு கட்டுரையும், பேராசிரியர் சுந்தர் காளியுடன் இணைந்து சமயம் குறித்து அவர் நடத்திய உரையாடலும் இணைந்த தொகுப்பாக இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளது.

சமயங்களின் அரசியல்

சமயங்களை தத்துவத்துடனும் பக்தி நெறி​களுடனும் ஆன்மிகத் தலைவர்களுடனும் தர்க்கத்​துடனும்​தான் இணைத்து எத்தனையோ புத்த​கங்கள் வந்துள்ளன. ஆனால் சமயங்களுக்குள் உள்ள அரசியல் மற்றும் ஆட்சியியல் வலிமையை தொ.ப. இந்தப் புத்தகத்தின் மூலமாக விவாதப் பொருள் ஆக்குகிறார். 'கோயில் என்பது அரச அதிகாரத்தின் மறுபக்கமாகவும் துணை அதிகாரமாகவும் செயலாற்றியது’ என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிநாதம்.

பக்திப் பரவசத்துக்கு இன்றும் பெரிய எடுத்துக்​காட்டாக இருப்பவர் திருமங்கை ஆழ்வார். இறை வழிபாட்டில் திளைத்தவர்கள் முதல் எளிய பக்தர்கள் வரை அவரது பாசுரங்களை  மனப்​பாடம் செய்து பாடிப் பரவசம் எய்துவார்கள். அத்த​கைய திருமங்கை ஆழ்வாரின் ஒரு வரி, 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்பது. இதனை மேற்கோள் காட்டும் தொ.ப., 'அரசனும் கடவுளும் சமம் என்று இது பேசுகிறது. வெல்ல முடியாத வரையறை இல்லாத ஓர் அதிகாரத்தை அரசனும் கடவுளும், தாமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகப் பகிர்ந்து​கொண்டனர். அதாவது அரசு அதிகாரத்தின் நிழல் மையங்​களாகக் கோயில்கள் செயல்​பட்டன’ என்கிறார். சமயத்துக்கு அதிகாரம் கிடைப்பது என்பதைத் தாண்டி சமயமே அரசனாக இருப்பதை பல்வேறு நிகழ்வுகள் மூலமாக நிறுவுகிறார்.

மேலும், ஆட்சி அதிகாரத்தை நிறுவுவதற்கு சமயங்கள்தான் முக்கியமான அடித்தளம் இட்டன என்பதும் இவரது முடிவு. 'ஒரு பேரரசு உருவாகின்றபோது, அதற்குச் சார்பான தத்துவ அமைப்பு ​ஒன்று உருவாக வேண்​டும். ஆயுத பலத்தின் வழியாகப் பெற்ற அதி​காரமும் உடைமைகளும், சமூகத்தை மேல், கீழ் அடுக்கு​​களாகப் பிரித்துவைக்கும். பாதிக்கப்பட்ட சமூகம் இந்தப் பிரிவினைகளை எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளுமாறு மறு தரப்பில் சமயம் சார்ந்த சிந்தனை ஒன்று சமூக உளவியலை வடி​வமைத்தாக வேண்டும். சோழ அரசு ஒரு பேரரசாக உருவாகும்போது, அந்தப் பணியைத் தமிழ்​நாட்டில் சைவ சமயம் திறம்படச் செய்தது’ என்று பேராசிரியர் க.கைலாசபதியின் கருத்தை வலி​​யுறுத்தும்வண்ணம் தொ.ப-வின் கருத்துக்கள் இருக்கின்றன.

பொதுவாக இதுபோன்ற தத்துவ வரலாறுகளைப் புரிந்துகொள்ளச் சிரமம் ஏற்படும். ஆனால், சித்தர்கள் அசைவம் சாப்பிட்டார்களா, வெங்கடாசலபதி கோயில்கள் எப்போது உருவாக்கப்படுகின்றன, திருக்குறளைத் தமிழ் அடையாளமாக்கிய ஆங்கில மிஷனரிமார்கள் யார், பக்தி இயக்கத்துக்குள் பெண்கள் முக்கியத்துவம் பெற்றது எப்படி, மஞ்சளின் மகிமை, முருகனின் காதல், விநாயகரின் வருகை... என்று ஆர்வமான பகுதிகளைப் பேசும் மிக முக்கியமான புத்தகம்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு