ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சங்கரசுப்புவின் மகன் தற்கொலை!

சி.பி.ஐ. அறிக்கையிலும் அவிழாத முடிச்சுகள்

##~##

முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்த விவகாரம், மீண்டும் அனுமார் வாலாக நீண்டு இருக்கிறது! 

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி மாயமானார். ஆறு நாட்கள் கழித்து ஐ.சி.எஃப். ஏரியில் பிணமாகத்தான் அவரு டைய உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரிப்பதில் திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மெத்தனம் காட்டுவதாகவும், வழக்கைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் வழக்கறிஞர்கள் அப்போது குற்றம் சாட்டினர். 'சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்று வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டுத்தான் ஏரியில் வீசப்பட்டுள்ளார்’ என்று பல போராட்டங் கள் நடத்தினர். அதனால், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது.

சங்கரசுப்புவின் மகன் தற்கொலை!

ஆகஸ்ட் 2-ம் தேதி, நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையில், 'சதீஷ்குமாரின் மரணம் தற்கொலைதான்’ என்று உறுதியாகச் சொல்லி இருக்கிறது. அதேசமயம், 'இந்த வழக்கை விசாரிப்பதில் திருமங்கலம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உரிய ஆர்வம் காட்டவில்லை என்றும், வழக்கைத் திசை திருப்பும் வகையில் செயல்பட்ட அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம்’ என்றும் சி.பி.ஐ. கூறியுள்ளது.

இந்த அறிக்கை பற்றி வழக்கறிஞர் சங்கரசுப்புவுக்காக ஆஜரான வழக்கறிஞர் செந்தில்குமார் பேசினார். ''சி.பி.ஐ-யின் விசாரணை அறிக்கையில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. சதீஷ்குமாரின் மரணம் தொடர்பாக நாங்கள் எழுப்பி இருந்த பல நியாயமான கேள்விகளுக்கு அதில் பதில் இல்லை. இந்த வழக்கைத் திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்று மட்டும் சி.பி.ஐ. பரிந்துரை செய்துள்ளது.

சுரேஷ்பாபு ஏன் வழக்கை திசை திருப்ப முயற்சித்தார், அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது யார், எதற்காக அவர்கள் அப்படிச் செய்தார்கள் என்பதையும் சி.பி.ஐ. கண்டுபிடித்து இருக்க வேண்டும். சதீஷ்குமார் தரையில் கொலை செய்யப்பட்டு அதன் பிறகு தண்ணீரில் வீசப்பட்டு இருக்கிறார் என்று நாங்கள் கூறுகிறோம். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையும் டையடோம் சோதனையும் (தண்ணீரில் மீட்கப்படும் பிணங்களுக்கு செய்யப்படும் சோதனை) அதை உறுதிசெய்துள்ளது. ஆனால், தரையில் தற்கொலை செய்துகொண்ட சதீஷ்குமாரின் உடலை நாய், நரி போன்ற மிருகங்கள் தண்ணீருக்குள் இழுத்துப் போட்டிருக்கலாம் என்று சி.பி.ஐ. சொல்கிறது. 75 கிலோ உள்ள ஒரு உடலை நாய், நரி போன்ற விலங்குகள் இழுத்து ஒரு ஏரியின் நடுவில் எப்படிப் போடமுடியும்?

சதீஷ்குமாரின் மரணம் தற்கொலைதான் என்று எந்த ஆதாரங்களின் அடிப்படையில் சி.பி.ஐ. முடிவு செய்ததோ, அவற்றின் நகலை எங்களுக்கும் தர வேண்டும் என்று நாங்கள் கேட்டுள்ளோம். அந்த ஆதாரங்கள் கிடைத்ததும், இந்த வழக்கை விசாரிக்க ஸ்பெஷல் டீம் அமைக்கக் கோருவோம்'' என்றார்.

சதீஷ்குமார் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்வது எப்போது?  

- ஜோ.ஸ்டாலின்