Published:Updated:

கிரானைட் ரெய்டைத் திசை திருப்ப சிலையை உடைத்தார்களா?

பதற்றம்

கிரானைட் ரெய்டைத் திசை திருப்ப சிலையை உடைத்தார்களா?

பதற்றம்

Published:Updated:
##~##

சாதிப் பதற்றம் தென் தமிழ கத்துக்குப் புதிதல்ல. ஆனால் அதனை சமூக விரோதிகள் பின்புலமாக இருந்து இயக்குவதன் ரகசியம்தான் அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது! 

கடந்த 7-ம் தேதி, தென் மாவட்ட மக்களுக்குப் பதற்றத்துடன்தான் விடிந்தது. காரணம், மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி, சின்னஉடைப்பு கிராமங்களில் ஒரே நேரத்தில் மூன்று சிலைகள் உடைக் கப்பட்டன. டாக்டர் அம்பேத்கரின் இரண்டு சிலைகளும், தலித் தியாகிகளில் முக்கியமானவரான இம்மானுவேல் சேகரனின் ஒரு சிலையும் உடைக்கப்பட்டதைப் பார்த்து  ஏரியா முழுவதும் கலவர சூழல் உருவானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பவ இடத்தில் வெளியாட்கள் குவிவதைத் தடுத்ததன் மூலம், பெரிய அளவிலான வன்முறைகள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர் போலீஸார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டச் செயலாளர் பாண்டியம்மாள் தலைமை யிலும், புதிய தமிழகம் கட்சியினர் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையிலும் மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விளம்பர போர்டுகளை உடைப்பது, சாலையில் முட்களை வெட்டிப்போடுவது என்று கிடுகிடுத்தது மதுரை.

கிரானைட் ரெய்டைத் திசை திருப்ப சிலையை உடைத்தார்களா?

'காலையில் கடையைத் திறக்கும்போதே போலீஸ் கூட்டம். யாரோ வி.ஐ.பி. வர்றாங்கன்னு நினைச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சிப் பார்த்தா, அம்பேத்கர் சிலையைத் துணியால் மூடிவெச்சிருந்தாங்க. என்னமோ ஏதோன்னு மக்கள் அவிழ்த்துப் பார்த்தப்பதான் தெரிஞ்சுது, சிலையோட தலையைக் காணோம். மக்கள் கோபமாகிடக் கூடாதுன்னு தலை மாதிரியே ஒரு கல்லை வெச்சி போலீஸ்காரங்க துணியால் கட்டி இருந்தாங்க. வலுவான கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட சிலை அது. அதைச் சாதாரணமாக உடைக்க முடியாது. கல் அறுக்கிற மெஷினை வெச்சித்தான் அறுத்திருக்க முடியும்' என்றார் சிலை அருகே பெட்டிக் கடை வைத்திருக்கும் ஒரு பெரியவர்.

கிரானைட் ரெய்டைத் திசை திருப்ப சிலையை உடைத்தார்களா?

கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து கூடியிருந்த மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'சிலையை உடைத்த வர்களை குண்டர் சட்டத்தில் கைது

கிரானைட் ரெய்டைத் திசை திருப்ப சிலையை உடைத்தார்களா?

செய்ய வேண்டும். செப்டம்பர் 11-ம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் வருவதால், அதற்குள் புதிதாக வெண்கலச் சிலை வைக்க வேண்டும்’ என்று அவர்கள் வைத்த கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார் கலெக்டர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெரிய அளவில் மோதலோ, வன்முறையோ வெடிக்கவில்லை. காரணம், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களே தங்கள் சமுதாயத்தினரைத் தொடர்புகொண்டு, 'அமைதியாக இருங்கள். கிரானைட் குவாரிகளில் போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் நடத்தி வரும் சோதனையைத் திசை திருப்புவதற்காகவே சிலர் இந்தச் சிலையை உடைத்துள்ளார்கள். இப்போது வன்முறையில் இறங்கினால், அவர்களின் ஆசையை நிறைவேற்றிக்கொடுத்த பாவிகளாகிவிடுவோம்'' என்று எச்சரித்து அமைதிப்படுத்தினார்களாம்.

'பெருங்குடி அம்பேத்கர் சிலையை உடைப்பது லேசான காரியம் அல்ல. ஏதோ இயந்திரத்தைப் பயன்படுத்தி சாவகாசமாக தலையை அறுத்தவர்கள், உடனே தப்பியோடாமல் பக்கத்துக் கிராமத்தில் மேலும் இரு தலைவர்கள் சிலைகளின் தலையையும் அறுத்து, பிறகு உடைத்து நாசப்படுத்தி இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்தால், அவர்களுக்கு வேறு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. குவாரி பிரச்னையைத் திசை திருப்புவதற்காக நடந்த சதியாகவும் இருக்கலாம்'' என்று வெளிப்படையாகச் சொன்னார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாண்டியம்மாள். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமியும் இதேபோன்ற சந்தேகத்தைத்தான் எழுப்பி இருக்கிறார்.

'ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ம் நாளையட்டி (இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்) தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் நடப்பது வாடிக்கையாக இருக்கிறது. கடந்த ஆண்டு பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு வரைக்கும் பிரச்னை போனதால், இந்த ஆண்டு சிலையின் பக்கம் கவனத்தைத் திருப்பி இருக்கலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தாழ்த்தப்பட்ட மக்களை சமரசப்படுத்துவதற்காக இம்மானுவேல் சேகரன் விழாவை அரசு விழாவாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு உடனடிக் காரணம் வேண்டும் என்பதால், அவர்களே சிலையைச் சேதப்படுத்தி இருக்கலாம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. உண்மையை அறிய முழுமையான, நேர்மையான விசாரணை தேவை' என்கிறார் சமூக ஆர்வலர் மாரிக்குமார்.

'உறுதியாகச் சொல்கிறேன். இந்தச் செயலை எதிர் சமுதாயத்தினர் செய்யவில்லை. குவாரி பிரச்னையைத் திசை திருப்பவே இந்த நாடகம் என்று எங்களுக்கும் உறுதியான தகவல்கள் வந்துள்ளன' என்று எவிடென்ஸ் கதிர் கூறுகிறார். இந்தக் கருத்தை உறுதி செய்யும் வகையில் உடைக்கப்பட்ட சிலை அருகே லாட்ஜ் அறையின் சாவி ஒன்று கிடந்திருக்கிறது. அது மதுரையில் உள்ள லாட்ஜ் ஒன்றின் ரூம் சாவி. அதனால், 'உடைத்தவர்கள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் வந்தவர்கள் அல்ல. திட்டமிட்டு வந்தவர்கள்தான்’ என்று போலீஸாரும் சந்தேகிக்கிறார்கள். தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள். 'இனிமேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடராதிருக்க, மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தலைவர் சிலைகளும், இரும்புக் கூண்டு அமைத்து பாதுகாக்கப்படும்'' என்கிறார் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா. மதுரை கிரானைட் குவாரிகள் சம்பந்தமாக ரெய்டு, கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்துவரும் போலீஸ், இந்த சம்பவம் பற்றிய விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளது. சிலை உடைப்பின் பின்னணியில் சமூக விரோதிகளா அல்லது கிரானைட் மனிதர்களா என்பது விரைவில் தெரிந்துவிடும். தங்களின் சுயநலனுக்காக மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடுவது கொள்ளையைவிடக் கொடுமையானது!

- கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism