Published:Updated:

காதலா? கத்திக் குத்தா?

அதிரவைத்த ஆயுள் தண்டனைக் கைதி!

பிரீமியம் ஸ்டோரி
##~##

சிறைக்குள் பெண் சுகத்தைத் தவிர அனைத்தும் கிடைக்கும் என்று கிண்டலாகச் சொல்வார்கள். ஆனால், 'அதுவும் கிடைக்கிறது’ என்று நமக்கு எழுதிய கடிதத்தில் அதிர வைத்து இருந்தார் ஆயுள் தண்டனைக் கைதியான ராஜேஷ் கண்ணா! 

திருச்சி மத்தியச் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்தவர் ராஜேஷ் கண்ணா. கன்னி யாஸ்திரி ஒருவரைக் கத்தியால் குத்தியதாக இவர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட... புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு இருந்து நமக்கு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அவர், வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படுவதாகத் தகவல் கிடைத்ததும் நாம் அங்கு சென்றோம்.

ராஜேஷ் கண்ணாவிடம் பேசினோம். ''திருச்சி சிறையில் உள்ளவர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதற்காக ஒரு சமுதாயக் கல்லூரிக்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. சமையல்

காதலா? கத்திக் குத்தா?

கலை வகுப்பு எடுப்பதற்காக அந்தக் கல்லூரியின் முதல்வர் ஜோன்ஸ்வா மேரி என்பவரும் இரண்டு கன்னியாஸ்திரிகளும் சிறைக்கு வந்து போவார்கள். இவர்களின் நடமாட்டத்தை போலீஸார் அவ்வளவாகக் கண்காணிப்பது கிடையாது. அதனால் அவர்கள், சிறைவாசிகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பது, பேட்டரிகளை சார்ஜ் செய்துவந்து தருவது போன்ற செயல்களை செய்து வந்தனர்.  சிறைவாசிகளிடம் வாஞ்சையாகப் பேசி மதமாற்றம் செய்யும் முயற்சிகளிலும் இறங்குவார்கள்.

கன்னியாஸ்திரி ஜோன்ஸ்வா மேரி திருச்சி சிறையில் சமையல்கூட ஆய்வகம் கட்டுவதற்கு நன்கொடை வசூலித்தார். எனது நண்பர்கள் மூலம் 35 ஆயிரம் ரூபாய் வசூலித்துக் கொடுத்தேன். அதனால், அவருக்கு என் மீது பிரியம் அதிகமானது. என் செல்போனுக்கு அவரிடம் இருந்து அடிக்கடி அழைப்பு வரும். அந்த நட்பு  காதலாகவும் மாறியது. 'நீங்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும், நான் துறவறத்தைத் தூக்கி எறிந்துவிட்டு உங்களைத் திருமணம் செய்துகொள்வேன்’ என்றார்.

பொதுவாக, மதியம் 2 மணியில் இருந்து 4 மணி வரை சிறை அதிகாரிகள் ஓய்வெடுக்கப் போய்விடுவார்கள். அப்போது என்னை சமையல்கூட ஆய்வகத்துக்கு அழைத்துச்சென்று அந்நியோன்யமாகப் பேசிக்கொண்டு இருப்பார். 6.9.2011 அன்று மதியம் இதேபோல் நாங்கள் தனிமையில் சந்தோஷமாக இருந்ததை சிறைவாசி ஒருவர் பார்த்து சத்தம் போட்டுக் கும்பலைத் திரட்டிவிட்டார். அவசர அவசரமாக எழுந்த ஜோன்ஸ்வா அங்கிருந்து தப்ப முயன்றார். அப்போது, சிறை வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்காகக் கிடந்த கம்பிகளில் தடுக்கி விழுந்தார். அவருடைய கழுத்தில் கம்பி கிழித்து காயம் ஏற்பட்டது. சம்பவத்தைக் கேள்விப்பட்டு சிறை அதிகாரிகள் ஓடோடி வந்தனர். உண்மை வெளியே தெரிந்தால் சிறை

காதலா? கத்திக் குத்தா?

நிர்வாகத்துக்கும் கிறித்துவ திருச்சபைக்கும் அவப்பெயர் உண்டாகும் என்பதால், திட்டம் போட்டு என்னை மட்டும் குற்றவாளி ஆக்கினர். ஜோன்ஸ்வா மேரியை நான் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் சம்மதிக்காததால் அவரைக் கத்தியால் குத்திவிட்டதாகவும் ஜோன்ஸ்வா மேரியை விட்டு புகார் கொடுக்க வைத்து, என் மீது வழக்கு பதிந்தனர்.

தண்டனைக் கைதியாக சிறைக்குள் உள்ள என்னால் உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை. சில மாதங்கள் கழித்து விசாரணை நடத்திய கிறித்துவ திருச்சபை, ஜோன்ஸ்வா மேரியை சபையை விட்டு நீக்கி விட்டதாம். அதனால் அவருடைய தம்பி மற்றும் தங்கை கணவர் இருவரும் என்னிடம், ஜோன்ஸ்வா மேரிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என எழுதித் தரும்படி மிரட்டுகின்றனர். எனக்கு காதல்வலை வீசி வீழ்த்திய மேரி, தான் அப்பாவி எனக் காட்டித் தப்பித்து விட்டார். அவருடைய செல்போனில் இருந்து எனக்கு மணிக்கணக்கில் பேசியது, எஸ்.எம்.எஸ்-கள், காதல் கடிதங்கள், அவர் கொடுத்த அவருடைய புகைப்படங்கள் எனப் பல ஆதாரங்கள் எங்களுடைய காதலுக்கு சாட்சியாக இருக்கிறது'' என்று விரக்தியுடன் சொன்னார்.

இதே கோர்ட்டுக்கு, விசாரணைக்காக  ஜோன்ஸ்வா மேரியும் வந்திருந்தார். அவரிடம் பேசினோம். ''6.9.11 அன்று சிறைக் கைதிகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்தேன். எனது வகுப்பில், ராஜேஷ் கண்ணா என்ற கைதி அவ்வப்போது தேவை இல்லாமல் குறுக்கீடு செய்வார். அன்றும், 'நீங்கள் வகுப்பு எடுக்கும் முறை சரி இல்லை’ என்று என்னிடம் வாக்கு வாதம் செய்தார். நான் அவரிடம், 'ஒழுங்காகக் கவனிப்பதாக இருந்தால் வகுப்பில் இரு. இல்லை என்றால், வகுப்பை விட்டுப் போய்விடு’ என்றேன். இப்படிச் சொன்ன இரண்டே நிமிடத்தில் அவர் என் மீது பாய்ந்தார். அவருடைய கையில் இருந்த ஏதோ ஒரு கூர்மையான பொருளால் என்னைக் குத்தினார். ரத்தம் அதிகம் வெளியேறியதால் நான் மயங்கி விழுந்தேன். சிறை ஊழியர்கள் என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு, எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் ராஜேஷ் கண்ணா ஏகப்பட்ட டார்ச்சர் கொடுத்து வருகிறார்.

சிறையில் இருந்தபடி அவ்வப்போது, 'இந்த வழக்கில் நீ எனக்கு எதிராக சாட்சி சொல்லக் கூடாது. அப்படிக் கூறினால், உன்னை ஆள் வைத்துக் கொலை செய்துவிடுவேன். உன்னை மானபங்கப் படுத்தி விடுவேன்’ என்றெல்லாம் செல்போன் மூலம் எங்களை மிரட்டுகிறார். இதுபற்றி சிறை நிர்வாகம் மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்தும், மிரட்டல்கள் நிற்கவில்லை. இது மட்டும் அல்லாமல், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை செய்தித்தாள்களில் படிக்கும் ராஜேஷ், அந்தக் குடும்பத்தினருக்கு போன் செய்து, காணாமல்போன நபரை எங்கள் வீட்டில் கடத்தி மறைத்து வைத்து இருப்பதாகச் சொல்கிறார். இதனால், அடிக்கடி எங்கள் வீட்டுக்கு ஆட்கள் வந்து விசாரிக்கின்றனர். கடந்த ஆறு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்கள் வீட்டுக்கு ஆட் களைத் தேடி வந்துள்ளனர்'' என்றார் சோக மாக.

ராஜேஷ் கண்ணா தெரிவித்திருந்த விஷயங்கள் பற்றியும் விளக்கம் கேட்டோம். ''சிறையில் எங் களுக்கு எந்தச் சலுகையும் வழங்கப்படுவது இல்லை. தீவிர சோதனைக்குப் பிறகே எங்களை உள்ளே அனுமதிக்கின்றனர். சிறையில், மதம்மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம் என்பது சுத்தப் பொய். நான் அவரைக் காதலித்தேன், அவரோடு உறவு வைத்திருந்தேன், காதல் கடிதங்கள் கொடுத்தேன் என்பது எல்லாம் கட்டுக்கதை. சிறைவாசிகளுக்கு சேவை மனப்பான்மையுடன் சென்று வகுப்பு எடுத்த எனக்குக் கிடைத்த பரிசு அவச்சொல்லும் மிரட்டலும்தான்'' என்றார் கண்ணீருடன்.

இதில் யார் சொல்வது உண்மை..?

- அ.சாதிக் பாட்ஷா

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு