Published:Updated:

டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பிரீமியம் ஸ்டோரி
##~##

ழ.அதியமான், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669 கே.பி.சாலை, நாகர்கோவில். விலை

டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

375

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை ஆரம்ப காலத்தில் வளர்த்தது யார் என்று கேட்டால், நாயுடு, நாயக்கர், முதலியார் என்பார்கள். டாக்டர் வரதராஜுலு நாயுடு, பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் ஆகிய மூவரை இது குறிக்கும். 'நாயுடு, ராஜதந்திரத் தமிழைப் பயன்படுத்துவார். நான் பச்சைத் தமிழில் எழுதுவேன். திரு.வி.க. சங்கத் தமிழைப் பயன்படுத்துவார்’ என்று பெரியாரே ஒருமுறை சொன்னார். அத்தகைய சிறப்புப் பெற்ற மனிதர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு பற்றி இப்போதுதான் முழுமையான முதல் புத்தகம் வந்துள்ளது.

அறியப்படாத ஆளுமை கள் பற்றி எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் பழ.அதியமான். முன்பு மதுரை ஜார்ஜ் ஜோசப் பற்றி எழுதினார்.. இப்போது வரதராஜுலு. 'வரலாற்று மறதிக்கும், சரியானவற்றைத் தேடாமல் விரும்பியவற்றை வரலாறாக்கிவிடும் வழமைக் கும் பெயர் பெற்றது தமிழ்ச் சமூகம்’ என்பதும் இவரது வருத்தம்!

டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

டாக்டர் வரதராஜுலுவுக்கு 'தென்னாட்டுத் திலகர்’ என்று பட்டம் கொடுத்தவர் வ.உ.சி. இவரைத் 'தமிழ்ப் பெரியார்’ என்று கொண்டாடியவர் வ.ரா. 1952-ம் ஆண்டு ராஜாஜி, சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக ஆகும்போது, அந்தப் பொறுப்பு வரதராஜுலுவுக்கே போய்ச் சேரவேண்டும் என்று பரிந்துரைத்தவர் பெரியார். தமிழ்ச் சமூக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவை, 1920ல் நடந்த சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும், 1953-ல் நடந்த குலக் கல்வி எதிர்ப்பும். இரண்டிலும் வரதராஜுலு  முன்னணி வகித்தார். காங்கிரஸில் இருந்துகொண்டே காங்கிரஸ் முதலமைச்சரை எதிர்க்கலாமா என்று நேரு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பும் அளவுக்குத் தீவிரமாக இருந்தார். இந்த எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் ராஜாஜி பதவி விலகியபோது, காமராஜரை முதல்வராக முன்மொழிந்தவரும் வரதராஜுலு. சில காலம் இந்து மகா சபை பக்கம் இருந்தார் இவர். 'எரிமலை அல்லது முதலாவது இந்திய விடுதலைப் போர்’ என்ற வீரசாவர்கரின் புத்தகத்தை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. அதனை ரகசியமாக வெளியிட நிதி உதவி செய்தவர் இவர். இப்படி வரதராஜுலுவைப் பற்றி ஏராளமான தகவல்கள் இந்தப் புத்தகம் முழுவதும் குவியல் குவியலாகக் கிடைக்கின்றன.

தமிழகத்தின் முன்னோடிப் பத்திரிகை ஆசிரியராகவும் வரதராஜுலுவைக் குறிப்பிட வேண்டும். பிரபஞ்ச மித்ரனும் தமிழ்நாடும் அவர் நடத்திய தமிழ் இதழ்கள். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற ஆங்கில நாளிதழை 1932-ல் ஆரம்பித்ததும் இவரே. அதன் பிறகுதான் சதானந்தாவின் கைக்கு மாறி, கோயங்காவிடம் அடைக்கலம் ஆனது எக்ஸ்பிரஸ். 'சமஸ்கிருதம் கலந்து எழுதும் அந்தக் காலத்தில் பழகு தமிழில் எழுதிவந்தவர்’ என்று இவரைப் பாராட்டும் ம.பொ.சி., 'தமிழ்நாடு’ பத்திரிகையின் அச்சுக் கூடத்தில் அச்சுத் தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர்.

'சமூக மாற்றங்களையும் அவற்றுக்குக் காரணமான ஆளுமைகளின் பங்களிப்புகளையும் கோபம், வருத்தம், இனச்சாய்வு, கருத்தியல் திரிபின்றிச் சமகால ஆதாரங்களுடன் நடுநிலையோடு பதிவுசெய்து அடுத்த தலைமுறைக்குச் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஒரு சமூகத்தின் வரலாறு முழுமைப்படும்’ என்கிறார்  பழ.அதியமான். அவர் அதனைச் சரியாகவே இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார்.

மறக்கப்பட்ட ஒரு மாமனிதரை நினைக்கப்படத் தூண்டுகிறது இந்தப் புத்தகம்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு