Published:Updated:

பிரிவினை நோக்கத்தில் டெசோ மாநாடு

வெடிக்கிறார் 'ஒலிம்பிக்' போராளி சிவந்தன் கோபி

பிரீமியம் ஸ்டோரி
##~##

லகமே லண்டனில் ஒலிம்பிக் போட்டியை கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில், தன்னுடைய கோரிக்கைக்காக உண்ணா விரதம் அமர்ந்தார் சிவந்தன் கோபி. தமிழ் ஈழ ஆதரவாளரான இவரது கோரிக்கை, 'இனப் படுகொலைக்குக் காரணமான இலங்கை, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது’ என்பது.

 ஜூலை 22-ம் தேதி முதல் உண்ணாவிரதம் உட்கார்ந்த சிவந்தன், ஒலிம்பிக் போட்டியின் இறுதி நாளின்போது உண்ணாவிரதத்தை முடித்தார். அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

''சிறிய அளவில் படுகொலைகளைச் செய்துவரும் சிரியா நாட்டின் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கு கொள்ளத் தடை விதித்து விசா தர மறுத்த லண்டன் அரசாங்கம், மிகப்பெரிய அளவில் இனப்படுகொலை செய்துவரும் இலங்கையையும் தடை செய்யவேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே?

பிரிவினை நோக்கத்தில் டெசோ மாநாடு

எமது மக்களுக்கு எதிராக, மானிடத்துக்கு எதிராக நடத்தப்பட்ட இந்தக் குற்றங்கள் எல்லாம் ஐக்கிய நாடுகள் சபையால் விசாரிக்கப்பட்டு, எமது மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு பெற்றுத் தர வேண்டும். குற்றம் செய்த இலங்கை அரசு சர்வதேசத்தின் முன்பு தண்டிக்கப்பட வேண்டும்.

ராஜபக்ஷேவின் அரசு இப்போது வேறு விதமான இனப் படுகொலையை கையில் எடுத்து உள்ளது. அது, நில அபகரிப்பு. வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மை இனம் என்பதை இல்லாமல் செய்வதற்காகத் திட்டம் இட்டு சிங்களக் குடியேற்றங்களை நடத்திவருகிறது. கிட்டத்தட்ட 20,000 சதுர கிலோ மீட்டர் பரப்புகொண்ட எமது தமிழ் ஈழப் பகுதி, போர் முடிந்த மூன்று ஆண்டுகளில் 7,000 சதுர கிலோ மீட்டர் ஆகக் குறைக்கப்பட்டுவிட்டது. சர்வதேசம் தலையிட்டு இந்த நில அபகரிப்பை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதைப் போன்ற கோரிக்கைகளை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவே உண்ணாவிரதம் உட்கார்ந்தேன்!''

''உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெற்றதாகக் கருதுகிறீர் களா?''

''இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூலம் உலக மக்களின் மனசாட்சிகளைத் தட்டி எழுப்பினோம். லண்டன் மாநகரில் எமது தேசியக் கொடி பறந்தது. எம்மை விசாரிக்கவந்த போலீஸார், நலம் விசாரிக்க வந்த மனிதநேய ஆர்வலர்கள் அனைவருக்கும் ஈழத்தில் நடைபெற்ற இனப் படுகொலைகளை வீடியோ வடிவில் போட்டுக்காட்டினோம். பலர் அந்தக் கோரத்தின் வெம்மை தாங்காமல் கண்ணீர்விட்டு அழுதனர். எமது கடுமையான எதிர்ப்பால் ராஜபக்ஷேவை, ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் செய்தோம். இவை உண்ணாவிரதத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன்.''

பிரிவினை நோக்கத்தில் டெசோ மாநாடு

''தாய்த் தமிழக மக்களிடம் நீங்கள் வைக்கும் வேண்டுகோள் என்ன?''

''தமிழக மக்கள் ஈழத் தமிழர்கள் மீது அளவு கடந்த அன்பும் கருணையும்வைத்துள்ளார்கள். ஒரு சிலரைத் தவிர ஈழத்துக்காகப் போராடும் தலைவர் களின் நோக்கங்கள் வியாபார ரீதியானவை என்பது தெரியும். தயவுசெய்து தலைவர்களில் தங்கி இருக்காது சுயமாக எங்களுக்காகப் போராடுங்கள் நண்பர்களே... உங்களைவிட்டால் நாம் வேறு எங்குதான் போவது..?''

''உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கருணாநிதி உங்களுக்குக் கோரிக்கை வைத்தாரே..?''

''என் உயிர் முக்கியம் என்றால் ஈழத்தில் உயிர் இழந்த எனது தம்பிகளின் உயிர் முக்கியம் இல்லையா? ஈழத்தில் கதறக் கதறக் கற்பழித்துக் கொல்லப்பட்ட எனது அக்கா, தங்கைகளின் உயிர் முக்கியம் இல்லையா? போர் நடந்தபோது அவர் என்ன செய்தார்? ஜூலை 22-ம் தேதி ஆரம்பித்து ஒலிம்பிக்கின் இறுதி நாளான இந்த மாதம் 12-ம் தேதி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்று முன்னமே அறிவித்திருந்தேன். நானே முடிக்க இருந்த நாளில் உண்ணாவிரத்தை முடிக்குமாறு அவர் கேட்கிறார். என் உண்ணாவிரதம் எதற்காக நடக்கிறது என்பதைக்கூட அவர் தெரிந்துகொள்ள முயற்சி செய்யவில்லை என்பதுதான் வருத்தம்.''

''கருணாநிதி நடத்திய டெசோ மாநாடு ஈழ மக்களுக்குப் பயன்தரும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?''

''பாயும்புலி பண்டாரக வன்னியன் பற்றி எழுதி எங்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்பிய கருணாநிதி, இந்த மாநாட்டை எப்போது நடத்தியிருக்க வேண்டுமோ... அப்போது நடத்த வில்லையே? அவர் ஆட்சியில் இருந்த நேரத்தில் இதைச் செய்திருக்க வேண்டும். எங்கள் மக்களுக்கு இடையே பிரிவினை உருவாக்கும் நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படுவதாகவே நினைக்கிறோம்!

- அருளினியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு