Published:Updated:

நள்ளிரவு நரபலிகள்...

திகில் கிளப்பும் கிரானைட் ரகசியங்கள்

நள்ளிரவு நரபலிகள்...

திகில் கிளப்பும் கிரானைட் ரகசியங்கள்

Published:Updated:
நள்ளிரவு நரபலிகள்...
##~##

டுத்தடுத்து வழக்குகள், அதிரடிக் கைதுகள், மெகா ரெய்டுகள், பாஸ்போர்ட் முடக்கம் என்று கிரானைட் அதிபர்களுக்கு எதிரான பிடி நாளுக்கு நாள் இறுகிக்கொண்டே போனாலும், 'இதெல்லாம் போதாது... பி.ஆர்.பி-யையும் துரை தயாநிதியையும் அரெஸ்ட் செய்யுங்கள்’ என்று மேலிடத்தில் இருந்து பிரஷர் வந்துகொண்டே இருக்கிறதாம். இதனால், மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும் எஸ்.பி. பாலகிருஷ்ணனும் தூக்கம் துறந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பி.ஆர்.பி-யை வளைக்க வெடிமருந்து வழக்கு!

அத்துமீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்த வழக்கில் பி.ஆர்.பழனிசாமி, துரை தயாநிதி உள்ளிட்டோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டன. 'அனேகமாக முன்ஜாமீன் கிடைத்துவிடும்’ என்று சட்டப் புள்ளிகள் கண் சிமிட்டுவதால், அடுத்தக் கட்டத்துக்குத் தயாராகிறது போலீஸ். இதற்காக, பி.ஆர்.பி. மீது கூடுதல் செக்ஷன்களைப் புகுத்தி இருக்கிறார்கள். 'டாமின் கொடுத்த அனுமதியை மீறி கூடுதல் இடங்களை ஆக்கிரமித்துக் கற்களை வெட்டி எடுத்து நம்பிக்கை மோசடி செய்து இருக்கிறார். அப்படி அனுமதி இன்றி கிரானைட் வெட்டி எடுத்த இடங்களில் வெடி மருந்துகளையும் தவறான வழியில் கடத்தி வந்து பயன்படுத்தி இருக்கிறார்’ என்ற இரண்டு செக்ஷன்கள் பாய்ந்து இருக்கின்றன. தேவைப்பட்டால் இந்த செக்ஷன்கள் துரை தயாநிதி மீதும் பாயுமாம். ''முந்தைய வழக்கில் பி.ஆர்.பி-க்கு முன்ஜாமீன் கிடைத்தாலும் இந்தக் குற்றங்களுக்காக அவரைக் கைதுசெய்ய முடியும். இதிலும் தடை வாங்கினால் இருக்கவே இருக்கின்றன நில அபகரிப்பு வழக்குகள்'' என்று சொல்கிறார்கள் போலீஸார்.

நள்ளிரவு நரபலிகள்...

நடுநடுங்க வைக்கும் நரபலி பூஜைகள்!

மதுரை கலெக்டரிடம் பி.ஆர்.பி. மீது புகார் கொடுத்திருக்கும் கீழையூர் சக்திவேலைத் தொடர்பு கொண்டு பேசினோம். ''எங்கள் விவசாய நிலத்துக்குப் பக்கத்துல 20 நாளைக்கு முந்தி பி.ஆர்.பி-யோட ஆளுங்க

சிவப்புக்கொடி நட்டுட்டுப் போனாங்க. அந்த இடத்தில் குவாரி நடத்தினா எங்க விவசாய நிலம் பாழாப் போயிரும். ஏற்கெனவே, எங்களுக்குச் சொந்தமான 15 சென்ட் நிலத்தைக் கேட்டு பி.ஆர்.பி. குரூப் பிரஷர் கொடுத்தாங்க. அந்த இடத்தையும் வாங்கிட்டாங்கன்னா, அஞ்சு கிலோ மீட்டருக்கு அவங்களே ராஜ்ஜியம் பண்ணிக்கலாம். 'எங்க முன்னோர்களை அந்த இடத்துல புதைச்சு இருக்கோம்’னு சொல்லி இடத்தைக் கொடுக்க மறுத்துட்​டோம். அந்தக் கோபத்தில் இன்னொரு சொத்து விவகாரத்தில் எங்களுக்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சாங்க.

  என்னோட தம்பி கிருஷ்ணன், பி.ஆர்.பி-யோட கிரானைட் குவாரியில்தான் வேலை பாத்துட்டு இருந்தான். எங்களுக்குள் பிரச்னைகள் வந்ததுமே, 'வேலைக்குப் போக வேணாம்’னு சொன்னேன். கேக்கலை. போன வருஷம் மே மாதம் 5-ம் தேதி மதியம் 2 மணிக்கு, 'ஹார்ட் அட்டாக்ல கிருஷ்ணன் இறந்துட்டார். பாடி ஜி.ஹெச்-ல இருக்கு’னு தகவல் வந்தது. எங்களுக்குக்கூடத் தெரிவிக்காம பாடியை ஜி.ஹெச்-சுக்கு எடுத்துட்டுப்போய், 'உடனே போஸ்ட்மார்ட்டம் செய்யணும்’னு அவசரப்படுத்தினாங்க.'தம்பி சாவுல மர்மம் இருக்கு’னு சொன்னதுக்கு எங்க சொந்தக்காரங்களை வெச்சே என்னைச் சமாதானப்படுத்திட்டாங்க. என் தம்பி மகன் முகிலனும் 12 வருஷங்களுக்கு முந்தி குவாரியில இருந்த பள்ளத்துக்குள் தவறி விழுந்து செத்துப்போனான். இந்தச் சம்பவத்தை எல்லாம் சொல்லி, 'தயவுசெஞ்சு அந்தாளுக்கு எங்க இடத்துக்கு பக்கத்துல லைசென்ஸ் கொடுத்துறாதீங்கய்யா’ன்னு சொன்னேன்'' என்றார்.

''கிருஷ்ணன் விவகாரம் சாம்பிள்தான். இதே மாதிரி நூத்துக்கணக்கான பேரை குவாரிக்குள் சமாதி கட்டி இருக்காங்க. தரமான கிரானைட் கிடைக்கணும். எந்தப் பிரச்னையும் இல்லாம கம்பெனி நடக்கணும் என்பதற்காக மலையாள மாந்திரீகர்களைக் அழைத்து வந்து நள்ளிரவுப் பூஜை நடத்துவாங்க. அந்தப் பூஜைகளில் நரபலியும் கொடுக்கப்பட்டதா சொல்றாங்க. குவாரிகளுக்குள் செத்துப்போறது பெரும்பாலும் வடமாநிலக் கூலித் தொழிலாளர்களா இருக்கிறதால, அவங்களைக் கூட்டிட்டு வந்த புரோக்கர்களுக்குக் காசைக் கொடுத்து சரிக்கட்டிட்டு, பாடியை குவாரிக்குள்ளேயே புதைச்சிடுவாங்க. இங்கே இருக்கிற சில குவாரிகளைத் தோண்டினா, பல மர்மங்கள் வெளியே வரும்'' என் கிறார்கள் கீழையூர் பகுதி இளைஞர்கள். போலீஸ் தரப்பும் இந்தக் கோணத்தில் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.

நள்ளிரவு நரபலிகள்...

''என்னோட 74 ஏக்கரை மீட்டுக் கொடுங்க...''

தெற்குத் தெருவைச் சேர்ந்த சோமன் என்பவரும் பி.ஆர்.பி-க்கு எதிராக கலெக்டரிடம் மனு கொடுத்​திருக்கிறார். ''ராணி மங்கம்மாள் காலத்தில் எங்க முன்னோர்களுக்குத் தோட்டி மானியமா 74 ஏக்கர் நிலம் கொடுத்திருக்காங்க. அந்த இடத் தில்​தான் இப்ப பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனியோட முகப்பு இருக்கு. யாருகிட்டயோ கிரையம் வாங்கினதாச் சொல்லி அந்த இடத்தை ஆக்கிரமிச்சிட்டாங்க. இதேபோல் வண்ணார், நாவிதர், பண்டாரம் போன்றவர்களுக்கு மானியமாக் கொடுத்த நிலங்களும் அந்தக் கம்பெனிக்குள்தான் இருக்கு. திருவாதவூர் ஏரியாவில் ஆதிதிராவிட மக்களுக்காகக் கொடுக்கப்பட்ட 250 ஏக்கர்

பஞ்சமி நிலங்களும் குவாரி முதலாளிகள் கைக்குள் போயிருச்சு. நரசிங்கம்பட்டி எல்லையில் அழகர் கோயிலுக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை போலி டாக்குமென்ட் மூலம் மாத்திவிட்டுருக்காங்க. கலெக்டர் நேர்மையா இருக்கார். ஆனா, கீழ்மட்ட அதிகாரிகளில் சிலர் இன்னமும் கிரானைட் முதலாளிகளுக்குத்தான் வாலாட்டுறாங்க'' என்று வேதனைப்பட்டார்.

குவாரிகளுக்குள் கன்டெய்னர்கள்?

சகாயம் அறிக்கை கொடுத்து விட்டார் என்று தெரிந்ததுமே, மேலூர் பகுதியில் இருந்த சில சொத்துக்களை பினாமிகள் பெயருக்கு அவசர, அவசரமாக ஆவண மாற்றம் செய்து இருக்கிறார்கள். இதேபோல், அந்தக் கம்பெனியின் கிரானைட் குவாரிகளில் நிறுத்தப்பட்டு இருந்த எந்திரங்கள் உள்ளிட்ட 16 வாகனங்களை கடந்த வாரம் அவசரகதியில் பெயர் மாற்றமும் செய்து இருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் ஒரு கோடிக்கும் கூடுதலான மதிப்பு உடை​யதாம். போலீஸ் நடவடிக்கைகள் இறுக ஆரம்பித்​ததுமே டாக்குமென்ட்களையும் பணத்தையும் பதுக்கும் வேலைகளைக் கச்சிதமாகச் செய்துவிட்டார்களாம். உள் ளாட்சித் தேர்தலில் கிரானைட் கிங், ஒரு கோடி ரூபாய் செலவு செய்து ஒரு நபரை பிரசிடென்ட் ஆக்கினார். அவருடைய நிழலில்தான் இப்போது கிரானைட் கிங் பதுங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். ''பிரசிடென்ட்டுக்குச் சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ரொம்ப நாளாகவே பூட்டிக்கிடக்கு. அதையும் பிரசிடென்ட் வீட்டையும் துருவினால் ஆவணங்களையும் ரொக்கத்தையும் அள்ளலாம். ரெங்கசாமிபுரத்தில் உள்ள ஒரு குவாரிக்குள் கன்டெய்னர் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து இருக்கிறார்கள். சேந்தலைப்பட்டியில் ஒரு கன்டெய்னரைப் புதைச்சு இருக்காங்க. தெற்குத் தெரு கம்பெனிக்குள் ரெண்டு பெரிய கன்டெய்னர்கள் புதைஞ்சு கிடக்கு'' - கீழையூர் ஏரியாவில் இப்படி எல்லாம் பேச்சு அடிபடுகிறது!

தோண்டப்படாத தோகைமலை, திருத்தங்கல்

இதனிடையே, 15-ம் தேதி காலையில் கீழையூர் கண்மாய்க்கு அருகில் சுமார் 35 ஆயிரம் ஏக்கரில் கிரானைட் 'ஸ்டாக் யார்டு’ ஒன்றை அதிகாரிகள் கண்டு​பிடித்தனர். பல்வேறு இடங்களில் இருந்து வெட்டிக் கடத்திவரப்பட்ட உலகத்தரம் வாய்ந்த சுமார் 15 ஆயிரம் கற்கள் இங்கே இருக்கலாம் என்று கணக்குப் போடுகிறார்கள். ''இதுக்கே நீங்க மலைக்​கிறீங்க... கரூர் மாவட்டம் தோகைமலையில் இதைவிட பிரமாண்டமான கிரானைட் குவாரிகள் பி.ஆர்.பி-க்கு இருக்கு. இதேபோல் விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் ஏரியாவிலும் பி.ஆர்.பி-க்கு ஏராளமான குவாரிகள் இருக்கு. மதுரை கலெக்டர் தீவிரமாக இருக்கிறார். கரூர், விருதுநகர் கலெக்டர்கள் ஏன் மௌனமா இருக்காங்கன்னு தெரியலை'' என்று கிரானைட் பிசினஸில் இருப்ப​வர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.

திருமண வீடியோவில் அதிகாரிகள்!

தனது இளைய மகன் சுரேஷ்குமாரின் திரு​மணத்தை இரண்டு வருடங்களுக்கு முன், மதுரை​யில் படோ​டோபமாக நடத்தினார் பி.ஆர்.பி. அப்போது மதுரை தொடங்கி சென்னை வரை உள்ள கனிம வளத் துறை அதிகாரிகளும். வருவாய்த் துறை அதிகாரிகளும் தவறாமல் வந்திருந்து விசுவாசத்தைக் காட்டினார்கள். அரசியல் கட்சி வி.ஐ.பி-க்களோடு சட்ட மேதைகள் சிலரும் வந்து பி.ஆர்.பி-யோடு கை குலுக்கினர். திருமணத்தில் எடுக்கப்பட்ட ஏழு சி.டி-க்களைக் கைப்பற்றி முதல்வர் பார்வைக்கு அனுப்பி விட்டதாம் உளவுத்துறை. கூடிய விரைவில், வீடியோவில் இருப்பவர்களின் வீடுகளில் அதிரடி சோதனைகள் நடக்கலாம் என்கிறார்கள்.  

இதனிடையே, கிரானைட் புள்ளிகளுக்கு நிலங்களை வாங்கிக் கொடுத்த அ.தி.மு.க-காரரான ஜீவானந்தம், நல்லுச்​சாமி ஆகியோரை 15-ம் தேதி கைதுசெய்த போலீஸார், பி.ஆர்.பி. ரகசியங்களைத் தெரிந்த தெற்குத் தெரு பிரசிடென்ட் சரவணக்குமாரை கஸ்டடியில் வைத்து விசாரிக்கிறார்கள். 'நானும் எங்க அப்பாவும் பி.ஆர்.பி-க்கு நிலங்களை வாங்கிக் கொடுத்தோம்; அதற்கான கமிஷனை கொடுத்தாங்க. இதைத்தவிர எங்களுக்கு எதுவும் தெரியாது'' என்றாராம் சரவணக்குமார்.

''எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு.''

''புதுசு புதுசா இல்லீகல் குவாரிகளைக் கண்டு பிடிச்சுக்கிட்டே இருப்பதால், எங்களோட வேலை முடியுறதுக்கு இன்னும் 15 நாட்கள் ஆகும். 'டாமின் ஏன் புகார் பண்ணலை?’னு கோர்ட்ல கேட்டிருக்காங்க. அரசாங்கம் டாமினுக்கு லீஸுக்குத்தான் நிலத்தைக் கொடுத்திருக்கு. அதை அவங்க தனியாருக்கு லீஸுக்கு விடுறாங்க. அரசு நிலங்கள் அத்துமீறிஆக்கிரமிக்கப்​பட்டால், புகார் கொடுக்க வி.ஏ.ஓ-வுக்கு அதிகாரம் இருக்கு. அந்த அடிப்படையில்தான் புகார் கொடுத்​திருக்கு. இந்த விளக்கத்தை கோர்ட்டில் தெரிவிப்போம்'' என்கிறார் கலெக்டர் அன்சுல் மிஸ்ரா.

''இப்போது, 'அரசுக்குச் சொந்தமான இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது நாங்கள் இல்லை’ என்று பி.ஆர்.பி. தரப்பில் சொல்கிறார்கள். ஆனால், அந்த இடங்களில் பி.ஆர்.பி-க்குச் சொந்த மான வாகனங்கள் கற்களை வெட்டி எடுத்தபோதும், அங்கிருந்து பி.ஆர்.பி. வாகனங்களில் ஏற்றிக் கடத்திய​போதும் ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ ஆதா​ரங்கள் இருக்கிறது. கைதாகி இருக்கும் லேண்ட் புரோக்கர்களும் அந்த இடங்களை தாங்கள் பி.ஆர்.பி. கம்​பெனிக்கு வாங்கிக் கொடுத்ததாக ஒப்புதல் வாக்கு​மூலம் கொடுத்திருக்கிறார்கள்'' என்கிறார் மதுரை எஸ்.பி-யான பாலகிருஷ்ணன்.

தோண்டத் தோண்ட கிரானைட் கொள்ளை வந்துகொண்டே இருக்கிறது!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 நெல்லையிலும் கிரானைட் மோசடி..?

நள்ளிரவு நரபலிகள்...

கிரானைட் மோசடி நடப்பதை எதிர்த்து, அம்பை தாலுக்கா தாமிரபரணி விவசாயிகள் நலச் சங்கம் என்ற அமைப்பினர் கடந்த ஓர் ஆண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் செயலாளரும் கோடாரங்குளம் பஞ்சாயத்துத் தலைவருமான பாபநாசம், ''மதுரையில் கிரானைட் மோசடியில் சிக்கிய அதே நிறுவனம், இந்தப் பகுதியில் இருக்கும் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் அருகேயும் கிரானைட் குவாரிகளை வச்சிருக்காங்க. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி அமைந்து இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள்ளேயும், தேசியப் பூங்கா அல்லது சரணாலயம் இருக்கும் பகுதியில் இருந்து 25 கி.மீ தூரத்துக்குக்குள்ளேயும் எந்தத் திட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது என்று சட்டம் இருக்கு. இந்த விதிகள் எதையும் கடைப்பிடிக்காமல் ஒன்றரை முதல் பத்து கி.மீ. தூரத்துக்குள் 20-க்கும் அதிகமான குவாரிகள் இயங்குது'' என்றார் கவலையுடன்.

கிரானைட் குவாரிகளில் நடக்கும் விதிமுறை மீறல்கள் குறித்து முதல்வரே நேரடிக் கவனம் செலுத்தி வருவதால், நெல்லை மாவட்ட குவாரிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு கேட்டு இருக்கிறதாம். இதனால், சேரன்மாதேவி சப்-கலெக்டர் பாஜி பாஹரே ரோகினி ராம்தாஸ் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் கனிமவளத் துறையினர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிரடி சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி சப்-கலெக்டரிடம் கேட்டதற்கு, ''வருவாய், கனிம வளம், நில அளவை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் முடிவில்தான் விதிமுறை மீறல் எதுவும் நடந்து இருக்கிறதா என்பது தெரியவரும்'' என்றார்.

- ஆண்டனிராஜ், படம்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism