Published:Updated:

`30 தண்ணீர் விற்பனை நிறுவனங்களில் 23 அனுமதி பெறாதவை!' - திருச்சி பொதுப்பணித் துறையின் அதிரடி

சீல் வைக்கப்பட்ட தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனங்கள்
சீல் வைக்கப்பட்ட தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனங்கள்

திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 23 தனியார் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை நிறுவனங்களுக்கு திருச்சி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடியாகச் சீல் வைத்தனர்.

தமிழகம் முழுவதும் தனியார் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை நிறுவனங்கள் உரிய அனுமதி பெறாமல் இயங்கிவருவதுடன், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக செயல்படும் தண்ணீர் விற்பனை நிறுவனங்களை மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிக்க உத்தரவு பிறப்பித்தது.

`கன்னத்தில் அடித்தார், பதிலுக்கு நானும் அறைந்தேன்' -பெண் எம்எல்ஏ, ஒ.செ மோதலால் வெளிவந்த பண விவகாரம்

அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சட்டவிரோத தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனங்கள் குறித்த ஆய்வை எடுத்துவரும் மாவட்ட நிர்வாகங்கள், அந்த நிறுவனங்களுக்குச் சீல் வைக்கத் தொடங்கியுள்ளது.

அந்த வரிசையில், திருச்சி பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அதிகாரிகள், திருச்சி மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் தனியார் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை நிலையங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

சீல் வைக்கப்பட்ட தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனங்கள்.
சீல் வைக்கப்பட்ட தனியார் தண்ணீர் விற்பனை நிறுவனங்கள்.

அந்த ஆய்வில் திருச்சி மாவட்டத்தில் 30 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை நிறுவனங்கள் இயங்கி வந்ததும், அதில் 23 நிறுவனங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் நிலத்தடி நீரை உறிஞ்சி, சுத்திகரித்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. மேலும், அந்த அனுமதி பெறாமல் இயங்கிவந்த தண்ணீர் விற்பனை நிறுவனங்களில் சில நிறுவனங்கள் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றதாக விளம்பரம் செய்து வந்ததும் தெரியவே அதிகாரிகளே அதிர்ந்துபோனார்கள். அதைத் தொடர்ந்து, சட்டவிரோதமான நிறுவனங்களுக்குச் சீல் வைத்திட அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, இன்று திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை நிலத்தடி நீரியல் பிரிவு உதவி இயக்குநர் பாலகுமாரன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி உய்யக்கொண்டான் திருமலைப் பகுதியில் இயங்கிவந்த பெஸ்ட் அக்வா எனும் தனியார் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை நிறுவனத்துக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி மாநகரம் மற்றும் துறையூர் மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பல்வேறு ஆலைகளுக்குச் சீல் வைத்தனர்.

``ஒரு நாளைக்கு 20 மில்லியன் லிட்டர்!''- நிலத்தடி நீர் மேலாண்மையில் அசத்தும் சென்னை குடிநீர் வாரியம்

4 குழுக்களாக பிரிந்து செயல்பட்ட அதிகாரிகளின் சீல் வைக்கும் பணி இரவு வரை தொடர்ந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு நிலவியது. இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் திருச்சி மாவட்டத்தில் உள்ள அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளர்கள் நலச்சங்கம் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.

நம்மிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் கலியமூர்த்தி, ``கடந்த 17 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறோம். இதில் விற்பனை முகவர்களாக சுமார் 2,000 பேர் உள்ளனர்.

அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை யாளர்கள் நலச்சங்கம்
அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை யாளர்கள் நலச்சங்கம்

மேலும், எங்களிடம் ஓட்டுநர்களாகவும் கூலித் தொழிலாளர்களாகவும் சுமார் பத்தாயிரம் பேர் பணிபுரிகிறார்கள். இத்தொழிலை நம்பி வாழ்கிறோம். சமீபத்தில் வெளியான உயர் நீதிமன்ற உத்தரவால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதன்காரணமாக திருச்சி மாநகரில் சுமார் 75 சதவிகித மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

இதனிடையே, திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 23 தனியார் சுத்திகரிப்பு குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்குச் சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு