Published:Updated:

கட்டடப் பணிக்குச் சென்ற தாய் -தனியாக வீட்டிலிருந்த சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

வீட்டில் தனியாக இருந்த 23 வயது சென்னை இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்த 2 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை இளம்பெண்
சென்னை இளம்பெண்

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவரின் அம்மா கட்டடப் பணி செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அம்மா வேலைக்குச் சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் அந்தப் பெண் மட்டும் தனியாக இருந்தார். இந்தச் சமயத்தில் அவரின் அம்மாவைத் தேடி 2 பேர் வீட்டுக்கு வந்தனர். அவர்களிடம் இளம்பெண், அம்மா வேலைக்குச் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.

இளம்பெண்
இளம்பெண்

வீட்டில் தனியாக அந்தப் பெண் இருப்பதைப்பார்த்த இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். பிறகு அந்தப் பெண்ணிடம் இருவரும் தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர். தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண், தன்னுடைய சித்தியிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண்ணின் சித்தி, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்தத் தகவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அவர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.

Vikatan

தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. அப்போது அந்த இருவரால் பெண் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரவாயலைச் சேர்ந்த புருஷோத்தம்மன், மூர்த்தி ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இருவரும் கொத்தனார் வேலை செய்துவருகின்றனர். அந்தப் பெண்ணின் அம்மாவை வேலைக்கு அழைத்துச் செல்ல வந்த சமயத்தில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் அயனாவரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.