ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

அமைச்சரைச் சுற்றி ஐந்து பேர்!

சிவபதியை மிரட்டும் போஸ்டர்மந்திரி - 1

##~##

'அதிரடி ஆடித் தள்ளுபடி... பள்ளிக் கல்வித் துறையில் உள்ள காலி இடங்கள் வாங்க, விற்க எங்களது கீழ்க்கண்ட அங்கீகாரம் பெற்ற முகவர்களை (புரோக்கர்களை) மட்டுமே அணுகவும். 1. செல்வம் (ஸ்பெஷல் அடிஷனல் பி.ஏ) 2. துரைசாமி (அமைச்சரின் சகலை, காங்கிரஸ் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர்) 3. ராஜேந்திரன் (ஜூனியர் பி.ஏ.) 4. கலீல் (விஜய பாஸ்கர் எம்.எல்.ஏ-வின் பி.ஏ.) 5. ஆடிட்டர் ராஜா (அமைச்சரின் நண்பர்) இப்படிக்கு, என்றும் கல்விப் பணியில் என்.ஆர் சிவபதி அண்டு கோ பிரைவேட் லிமிடெட்’ - சில தினங்களுக்கு முன் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள அனைத்து பிளாக்குகளிலும் இந்தத் திடீர் போஸ்டர்கள் முளைக்க... அடுத்த சில நிமிடங்களில் பெரும்பாடு பட்டு கிழித்து எறிந்தது ஒரு தரப்பு! 

அமைச்சரைச் சுற்றி ஐந்து பேர்!

என்ன நடக்கிறது என்.ஆர் சிவபதி கூடாரத்தில்? என்று விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம்.

''அமைச்சர் சிவபதியைச் சுற்றி இருப்பவர்கள் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை. கட்சிக் காரர்களை வாழவிடாமல் சில தனிமனிதர்களே  அனைத்தையும்  சுருட்ட நினைக் கின்றனர். இதுதான் பிரச்னைக்கு மூல காரணம். சிவபதியிடம் ஸ்பெஷல் பி.ஏ-வாக இருக்கும் செல்வம், ஆவின் நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராக இருந்தவர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கண்ணப்பனுக்கும் மிக நெருக்கம். சிவபதியின் சகலையான துரைசாமி, கோயம்பேட்டில் வாழைக்​காய் மண்டி வைத்திருந்தார். சிவபதி அமைச்சரானதும் நிழல்போல ஒட்டிக்கொண்டார். பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரை இந்த இருவர் அணி வைத்ததுதான் சட்டம். டிரான்ஸ்ஃபரில் ஆரம்பித்து டெண்டர் வரை அனைத்தும் இவர்களுடைய கண் அசைவுப்படிதான் நடக்கிறது.

மாவட்டங்களில் உள்ள ஏ.இ.ஓ., சி.இ.ஓ., டி.இ.ஓ. என அனைவரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத் திருக்கின்றனர். அ.தி.மு.க-வினரே

அமைச்சரைச் சுற்றி ஐந்து பேர்!

சென்றாலும் கறந்தால்தான் காரியம் நடக்கும். அ.தி.மு.க-வை தீவிரமாக ஆதரிக்கும் மாற்றுக் கட்சித் தலைவர்  ஒருவர் தனக்கு வேண்டப்பட்ட நபருக்கு சிபாரிசு செய்து அனுப்பி னார். 'நீங்க எந்தச் சேனல்ல வந்தாலும் சரி, கொடுத்தாத்தான் டிரான்ஸ்ஃபர்’ என்று கறார் காட்டினார்கள். விஷயத்தை மேலிடம் வரை கொண்டுபோனவர், 'எனக்கே இந்தக் கதியா?’ என்று புலம்பித் தள்ளினாராம்.

கடந்த வாரம், நுங்கம்பாக்கத்தில் உள்ள இணை இயக்குனர் ஒருவரை பார்க்கச் சென்ற அதிகார பலம் பொருந்திய ஒருவர் ஒரே நாளில் கணிசமான ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வாங்கிக்கொண்டு வந்தார். இதேபோல, கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிரான்ஸ்ஃபர் போடப்பட்டுள்ளன. ஒரு டிரான்ஸ்ஃபருக்கு அவர்கள் சொல்லும் தொகை ஏராளமாக இருக்கிறது. சேலம் பார்த்திபன், கலீல் ஆகிய இரண்டு நபர்கள்தான் செல்வத்துக்கு ரைட் அண்டு லெஃப்ட். பொதுவாகவே, மயிலாப்பூரில் உள்ள கற்பகம் லாட்ஜில்தான் இந்தக் காரியங்களைப் பார்க்கிறார்கள். இது, அமைச்சர் சிவபதிக்கு நன்றாகவே தெரியும். ஆனால், தன்னைப் பார்க்க வரும் கட்சிக்காரர்களிடம், 'எனக்கு எதுவும் வேண்டாம்’ என நல்ல பிள்ளை போலச் சொல்வார். ஆனால், அவரது பெயரைச் சொல்லித்தான் இவர்கள் காரியம் முடிக்கிறார்கள். இதுபோக, திருச்சியில் சாந்தமான ஒரு கல்வி அதிகாரி இருக்கிறார். அவரும் நிறைய காரியங்களைச் செய்கிறார்.  

மேலும், தன்னுடைய சொந்தத் தொகுதியில் சிவபதி நடத்தும் சாதி அரசியல் காரணமாகவும், அங்குள்ள ஒட்டுமொத்த அ.தி.மு.க-வினரும் கடுப்பில் இருக்கின்றனர். மூன்று நபர்கள் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு மற்ற நிர்வாகி களைப் புறக்கணிக்கிறார். இந்த மூவருமே அம்மா தொகுதிக்கு நான்தான் பொறுப்பு என்று ஊருக்குள் உதார்விட்டு வருகிறார்கள். மற்ற சமூகத்தினரை அமைச்சரிடம் அண்டவிடாமல் தடுப்பவர்கள். இதுபோல, சிவபதிக்கு எதிராகப் பல புகார்கள் கார்டனில் குவிந்துள்ளன. விரைவில் தனது அமைச்சர் பதவி காலியாகப்போகிறது என்பது அவருக்கும் தெரியும். அதனால், முடிந்தவரை வாரிக் குவிக்கலாம் என சொந்தக் கட்சியினரிடமும்  வேட்டை நடத்துகிறார்கள். இதில், கடுப்பான யாரோதான் போஸ்டர் ரூபத்தில் பூகம்பம் ஏற்படுத்தி விட்டனர்'' என்று அதிர வைத்தனர்.

இந்தப் போஸ்டரை எடுத்துக் கொண்டு நாம், அமைச்சர் சிவபதியின் வீட்டுக்குச் சென்றோம். அந்தப் போஸ்டரை அவரிடம் காண்பித்து விளக்கம் கேட்டோம். வாங்கிப் படித்துப் பார்த்தவர், ''இதுக்கு எந்த விளக்கமும் கூற விரும்பவில்லை. நீங்களே பொதுமக்கள், கட்சியினரிடம் விசாரித்து மனசாட்சிப்படி என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இந்தத் துறை சிறப்பாக இயங்கிவருகிறது. இது பொறுக்காத சிலர்தான் இதுபோன்ற செயலைச் செய்கின்றனர். எனக்கு அதுபற்றி எந்தக் கவலையும் இல்லை. நான் யார் என்று அம்மாவுக்குத் தெரியும்'' என்றார் கூலாக.

ஆனால், போஸ்டர் காரமாக இருக்கிறது!

- தி.கோபிவிஜய்