ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மீன் மந்திரிக்கு 'டீசல்' சிக்கல்!

மானியப் பிரச்னையால் ஆபத்து வருமா?மந்திரி - 2

##~##

ந்திய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவி ஏற்ற பிறகும் விடாது கறுப்புவாக விரட்டுகிறார் பி.ஏ.சங்மா. 'இந்தியப் புள்ளியியல் நிறுவனத் தலைவராக இருக்​கும் பிரணாப், அதற்காக ஊதியம் பெற்றுவருகிறார். அதனால், அவருடைய வேட்பு மனு செல்லாது’ என்று நீதிமன்றப் படி ஏறி இருக்கிறார். அதே போன்று ஒரு விவகாரம் தமிழகத்திலும் எழுந்து இருக்கிறது. இதில் சிக்கி இருப்பவர், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால். 

நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயபால், அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மீன்வளத் துறையின் அமைச்சராகப் பதவி ஏற்றவர். அதற்குப் பிறகு பலமுறை அமைச்சரவை மாற்றம் நடந்தபோதும், எந்தச் சேதாரமும் இல்லாமல் இன்று வரை அதே பதவியில் தொடர்கிறார். ஆனால், இப்போது எழுந்து இருக்கும் விவகாரத்தைப் பார்த்தால், அவரு​டைய அமைச்சர் பதவி

மீன் மந்திரிக்கு 'டீசல்' சிக்கல்!

மட்டுமல்ல, எம்.எல்.ஏ. பதவியே தப்புமா என்பது சந்தேகம்தான்.

தேர்தல் கமிஷனுக்குப் புகார் அனுப்பி இருக்கும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஆதாரங்களை நம்மிடம் கொடுத்துப் பேசினார்கள். ''ஜெயபால் அமைச்சராக இருப்பதால் எங்கள் பதவியையும் பெயரையும் சொல்ல விரும்பவில்லை'' என்று தொடங்​கினார்கள்.

''நாகப்பட்டினம் அருகில் உள்ள அக்கரைப்​பேட்டை கிராமத்தில் பிறந்தவர் ஜெயபால். திடீரென கட்சியில் நுழைந்து பல பதவிகளை வகித்தார். 1996-2001 காலகட்டத்தில் அக்கரைப்பேட்டை பஞ்சாயத்து யூனியன் தலைவராகவும் இருந்தவர். கடந்த 2011 தேர்தலில் இவருக்கு நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.  வெற்றி பெற்ற அவருக்கு எதிர்பாராத விதமாக மீன்வளத் துறை அமைச்சர் பதவி கிடைத்தது.

படகுகள் மற்றும் டீசல் விநியோக மையம் வைத்து தொழில் நடத்திவரும் ஜெயபாலின் பதவிக்கு வேட்டுவைக்கக் காத்திருப்பது, அவருக்குச் சொந்தமான டீசல் விநியோகம்தான். தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மீனவர்களுக்கு டீசல் விநியோகம் செய்ய ஆயில் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் மையங்கள் பல இருக்கின்றன. இவைதவிர, 14 தனியார் டீசல் விநியோக மையங்களும் இருக்கின்றன. அதில், நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் இருக்கும், 'கோவிந்தம்மாள் டீசல் சென்டர்’ அமைச்சர் ஜெயபாலுக்குச் சொந்தமானது. கடந்த 1989-ம் ஆண்டு முதல் இதை அவர் நடத்தி வருகிறார். மீனவர்களுக்கு வழங்குவதற்காக இந்த மையத்துக்கு 36,000 லிட்டர் டீசலுக்கு அரசு மானியம் வழங்குகிறது. அரசிடம் இருந்து இன்றைய தேதி வரை மானியம் வாங்கிக்கொண்டு இருக்கிறார் அமைச்சர் ஜெயபால்.

இந்தத் தகவலை தன்னுடைய வேட்புமனு அஃபிடவிட்டில் அவர் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அதை மறைத்து விட் டார் ஜெயபால். இது, தேர்தல் ஆணையத்தை மட்டும் அல்ல, அரசையும் ஏமாற்றும் செயல். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தனியார் டீசல் சென்டர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசல் அளவைக் குறைத்தனர். அப்போது, அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று போராடிய ஜெயபால்தான், இன்று அதே துறைக்கு அமைச்சராக இருக்கிறார். மானியம் பெற்ற உண்மையை மறைத்த குற்றம் செய்தவர் இந்தப் பதவியில் தொடரலாமா?'' என்று கேட்டார்கள். இப்படிச் சொன்னவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்தான். கோஷ்டி பொறாமை காரணமாகத்தான் இந்த தகவலைச் சொல்கிறார்கள் என்பதும் அனைவருக்கும் புரிந்த விஷயம்.

ஆனாலும் உண்மை என்ன?  அமைச்சர் ஜெயபாலிடம் விளக்கம் கேட்டோம். ''என் மீது எந்தக் குற்றச்சாட்டையும் சொல்ல முடியவில்லையே என்று ஏங்கும் சிலர் கிளப்பிவிடுவதுதான் இந்தக் குற்றச்சாட்டு. அரசு வழங்கும் மானியம் என்பது 16 சதவிகித விற்பனை வரி விலக்குதான். அதை அனுபவிப்பது நான் கிடையாது. அது, மீனவர்களுக்கு வழங்கப்படும் சலுகை. வரிவிலக்கு போக மீதித் தொகைக்கு பில் போட்டுத்தான் நாங்கள் டீசல் விற்க முடியும். அதற்கென்று, டீசல் புத்தகம் ஒன்றை மீன்வளத் துறையில் இருந்து ஒவ்வொரு மீனவருக்கும் வழங்கி இருக்கின்றனர். எந்தத் தேதியில் எவ்வளவு லிட்டர் டீசல் வழங்கப்பட்டது என்ற விவரம் அந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. மேலும், கடலுக்குள்ளும் இந்த டீசல் புத்தகத்தை நேவி அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். இதில் யாரும் ஏமாற்ற முடியாது. மானிய விலை டீசல் விற்பனையில் எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போன்ற தனியார் டீசல் சென்டர் உரிமையாளர்கள் யாருக்குமே ஆதாயம் கிடை யாது. அதனால்தான், அஃபிடவிட்டில் நான் குறிப்பிடவில்லை. அதேபோல, டீசல் அளவு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததும் உண்மைதான். அமைச்சராகப் பதவி ஏற்றவுடன் அந்த வழக்கில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அதோடு, அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யச் சொல்லி, நான் அமைச்சராக பதவி ஏற்றவுடன்தான் கையெழுத்துப் போட்டேன்'' என்றார்.

அரசிடம் இருந்து மானியம், வரிவிலக்கு பெறுகிறீர்களா என்று வேட்புமனுவில் தேர்தல் ஆணையம் கேட்டிருந்த கேள்விக்கு 'இல்லை’ என்று பதில் சொல்லி இருக்கிறார் ஜெயபால். அதனால், ஜெயபாலின் பதவி, இனி தேர்தல் ஆணையத்தின் கைகளில்!

- எஸ்.கோபாலகிருஷ்ணன்