ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

அனுமதி இல்லாத படிப்புக்கு ஆறு வருடங்கள் வீண்?

பரிதாபத்தில் மாற்றுத் திறனாளிகள்!

##~##

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆரம்பித்து வைத்த ஒரு பட்டப்படிப்பு, பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்​கிறது. அந்தப் படிப்பில் சேர்ந்த வாய் பேசாத, காது கேட்காத 200-க்கும் அதிகமான மாணவர்கள் நிலை அந்தரத்தில் அல்லாடுகிறது. தங்களது சோகத்தைச் சொல்லக்கூட முடியாமல் தவிக்கிறார்கள்அந்தப் பிள்ளைகள்! 

ஸ்ரீவில்லிப்புத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே இருக்கிறது, கலசலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்​கழகம். 'வாய் பேச முடியாத, காது கேட்காத மாணவர்கள் 10-ம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும். ஆறு ஆண்டுகள் படித்து பி.டெக். பட்டம் பெற்று இன்ஜினீயர் ஆகிவிடலாம். பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்று கடந்த 2007-ம் ஆண்டு அறிவித்து ஆட்களைச் சேர்த்தனர். அப்துல் கலாம் திறந்து வைக்கவே மளமளவென மாணவர்கள் சேர்ந்தனர். இப்போது இங்கு 255 பேர் படிக்கின்றனர்.  பெங்களூரு, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் கணிசமான அளவில் வந்து சேர்ந்து உள்ளனர். ஒரு செமஸ்டருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டு சேர்ந்த 91 மாணவர்கள் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் பி.டெக். படிப்பை முடிக்கின்றனர். இந்த நேரத்தில், இந்தப் படிப்புக்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை என்பது தெரியவே, மாணவர்களும் பெற்றோரும் கொதித்து போராட்டத்தில் இறங்கும் முஸ்தீபுகளில் இருக்​கிறார்கள்.

அனுமதி இல்லாத படிப்புக்கு ஆறு வருடங்கள் வீண்?

இந்தப் படிப்பை வடிவமைத்த முன்னாள் துணைவேந்தர் தங்கராஜிடம் பேசினோம். ''வாய் பேச முடியாத, காது கேட்காத மாணவர்களுக்காக 'சிப்’ எனப்படும் புதிய பாடத்திட்டத்தைக் கொண்டு​வந்தோம். 10-ம் வகுப்பு முடித்தவர்களை ப்ளஸ் டூ மற்றும் டிப்ளமோ படிக்க வைத்து, லேட்ரல் என்ட்ரி மூலம் அவர்களுக்கு பி.டெக். இன்ஜினீயரிங் பட்டம் வழங்கத்தான் இந்தத் திட்டம். ஆனால், எங்கள் மாணவர்​களுக்கு ப்ளஸ் டூ தேர்வு எழுத தனி மையம் பல்கலைக்கழகம் சார்பில் கேட்கப்பட்டது. சில காரணங்​களால் அது கிடைக்கவில்லை. அதனால், எங்கள் பல்கலைக்கழகத்திலேயே தேர்வு நடத்தி இருக்கிறோம். பல்கலைக்கழக மானியக் குழு இந்தப் படிப்புக்கு சிறப்பு அனுமதி வழங்கினால், இந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.

அனுமதி இல்லாத படிப்புக்கு ஆறு வருடங்கள் வீண்?

இந்த மாணவர்களுக்குப் பாடம் நடத்திய பேராசிரியர் வனிதாவைச் சந்தித்தோம். ''இந்த மாணவர்கள் சைகை மற்றும் ஆசிரியர்களின் உதட்டு அசைவை வைத்துத்தான் பாடத்தைப் புரிந்து கொள்வார்கள்.

அனுமதி இல்லாத படிப்புக்கு ஆறு வருடங்கள் வீண்?

இங்கு சேரும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகள் மாநில அரசின் ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பாடத்திட்டத்தை நடத்துவோம். பிறகு, நான்கு ஆண்டுகளுக்கு இன்ஜினீயரிங் பாடங்கள் நடத்தி... 6-ம் ஆண்டு முடிவில் இன்ஜினீயரிங் பட்டம் வழங்கு வோம்'' என்றார்.

அனுமதி கொடுப்பதில் என்ன பிரச்னை என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், மாநிலத் திட்டக் கமிஷன் உறுப்பினருமான பாலகுருசாமியிடம் கேட்டோம்.

''நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரங்கள் பெற்றிருந்தாலும் இன்ஜினீயரிங் படிப்பில் புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்கும்போது அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகளையும், கலை மற்றும் அறிவியல் தொடர்பான புதிய பாடங்களைத் தொடங்கும்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளையும் பின்பற்றுவது அவசியம். பள்ளிக் கல்வியைப் பொறுத்த வரை 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்ச்சி மிகவும் முக்கியம். அதன் பிறகே கல்லூரிப் படிப்பையும் உயர் கல்வியையும் பெற முடியும். ஆனால், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் ப்ளஸ் டூ முடிக்கவில்லை. சமீபத்தில்கூட, 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ முடிக்காமல் திறந்தவெளிப் பல்கலைக் கழகம் மூலம் பெறும் பட்டப் படிப்புகள் செல்லாது என்று அரசு அறிவித்துள்​ளதை நினைவில் கொள்ள வேண்​டும்'' என்று, இன்றைய நிலையைச் சொன்னார்.

கலசலிங்கம் பல்கலைக்​கழக வேந்தர் ஸ்ரீதரிடம் பேசி​னோம். ''அருணாச்சலப் பிரதேசத்தில் நார்த் ஈஸ்டர்ன் ரீஜனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற நிகர்​நிலைப் பல்கலைக்கழகம் 10-ம் வகுப்பு படித்த மலைவாழ் மக்களுக்கு இதுபோன்ற நேரடி இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு வழங்குகிறது. அந்த அடிப்படையில்தான் நாங்கள் இந்தப் புதிய படிப்பை ஆரம்பித்தோம். ஆனால், பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. மானியக் குழுவிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். விரைவில் கிடைத்து விடும்'' என்றார் சிம்பிளாக.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களோ, ''எங்கள் பிள்ளைகளும் இன்ஜினீயர்கள் ஆவார்கள்... பெரிய நிறுவனத்தில் வேலைக்குப் போவார்கள் என்ற கனவுடன்தான் இந்தப் படிப்பில் சேர்த்தோம். ஆனால் இப்போதுதான், பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி கிடைக்கவில்லை என்கிறார்கள். இந்த வருடம் பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தினர் வந்து கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி எங்கள் பிள்ளைகளை வேலைக்கு எடுப்பார்கள் என்றும் சொன்னார்கள். என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறோம். எங்களுக்கு அரசுதான் நல்ல வழி காட்ட வேண்டும். ஏற்கெனவே சோகமான வாழ்கையில் இருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கு இது இன்னும் பெரிய வேதனையைக் கொடுத்துள்ளது'' என்று சோகமாய்ச்  சொல்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகள் வாழ்க்கையிலுமா விளையாடு​வது..?

- எம்.கார்த்தி,  படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்