ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கொலை வழக்கில் நித்தியின் பி.ஆர்.ஓ.!

துருவும் போலீஸ்... அலறும் ஆதீனம்!

##~##

''ஐ.டி. கம்பெனியில் 70 ஆயிரம் சம்பளத்தை உதறிட்டு இங்கே வந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் நித்தியானந்தர்கிட்ட இருக்கிற தெய்வீக சக்திதான்'' என்று புல்லரிப்பு காட்டிவந்த நித்தியானந்தாவின் பி.ஆர்.ஓ. பாண்டிச்​செல்வத்தை, இப்போது வலைவீசித் தேடுகிறது சிவகங்கை போலீஸ்! 

மதுரையில் உள்ள பைபாஸ் ரோடு நேரு நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. ஏலச்சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தியும் வட்டிக்குப் பணம் கொடுத்தும் சம்பாதித்தார். சிவகங்கை ஏரியாவிலும் சீட்டுத் தொழில் நடத்திய இவர், கடந்த 14-ம் தேதி நாமனூரில் இருந்து தனது அக்கா மருமகள் முத்துமணி என்ற சித்ராதேவியை ஸ்கூட்டியில் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள லட்சுமிபுரம் கிராமத்துக்கு குலுக்கல் சீட்டு நடத்தப் போயிருக்கிறார். மாலை 5 மணிக்கு, அங்கிருந்து நாமனூருக்கு இருவரும் திரும்பிய நேரத்தில் மூன்று பைக்குகளில் வந்த நான்கு பேர், அவர்களை வழி மறித்து ஸ்கூட்டியைக் தள்ளிவிட்டு இருக்கிறார்கள். இருவரும் சுதாரித்து எழுவதற்குள் ஜெகதீஸ்வரி மீது கத்திகள் வெறித்தனமாய் பாய்ந்​திருக்​கின்றன. தடுக்கப்போன சித்ராதேவிக்கும் சரமாரியாகக் கத்திக் குத்து. 11

கொலை வழக்கில் நித்தியின் பி.ஆர்.ஓ.!

இடங்களில்  குத்துப்​பட்டு சரிந்த ஜெகதீஸ்வரி, அங்கேயே பிணமானார். உயிருக்குப் போராடிய சித்ராதேவி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு​செல்லப்​பட்டார். இந்தக் கொலையில்தான் நித்தியின் சீடர் பாண்டிச்செல்வம் சிக்கி இருக்கிறார்.

அவரைத் தேடிவரும் தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ''சிவகங்​​கைக்குப் பக்கத்தில் இருக்​கும் ஏரியூரைச் சேர்ந்த கலைச் செல்வனின் மனைவி​தான் ஜெகதீஸ்வரி. இவங்​களுக்கு இரண்டு பெண்கள். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.  இன்னொரு பெண் ஆறாவது படிக்கிறாள். கலைச்செல்வன் துபாயில் வேலை செய்கிறார். அந்த நேரம் ஜெகதீஸ்வரிக்கு,  மதுரை துவரிமானைச் சேர்ந்த பாண்டிச்​செல்வத்தோட பழக்கம் ஏற்பட்டிருக்கு. பாண்டிச்செல்வத்தின் பொண்டாட்டி பாமா சேலத்தில் இருக்காங்க. பி.ஹெச்டி. முடிச்ச அந்தப் பெண் ஏற்கெனவே நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்தாங்க. அங்கே போக வர இருந்தப்பத்தான் பாமாவைப் பழக்கம் பிடிச்சு கல்யாணம் பண்ணிருக்கார்.

    பாமா மூலமாவே நித்தியானந்தாவுடன் ஒட்டிக்​கொண்டார். ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்த​தாகவும், ஐ.பி-யில் இருந்ததாவும் சொல்லித்தான் பி.ஏ. ஆனார். ஆனா, அதுக்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஒருகட்டத்தில் தொழில் தொடங்கப்போறதாச் சொல்லி ஜெகதீஸ்வரியோட 60 பவுன் நகையை வாங்கி 12 லட்சத்துக்கு முத்தூட் ஃபைனான்ஸ்ல அடமானம் வெச்​சிருக்கார் பாண்டிச்​செல்வம்.

ஊர்ல இருந்து வந்த கலைச்செல்வனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சு பிரச்னை ஆகிருச்சு. ஜெகதீஸ்வரி அவரை எதிர்த்துப் பேசவும், குடும்பத்தை விட்டுட்டு தனியாப் போய் திருப்பரங்குன்றத்தில் செட்டில் ஆகிட்டார் கலைச்செல்வன். அந்த வருத்தத்தில் இருந்த ஜெகதீஸ்வரி, தன்னோட நகைகளை

கொலை வழக்கில் நித்தியின் பி.ஆர்.ஓ.!

மீட்டுத்தரச் சொல்லி பாண்டிச்செல்வத்தை நெருக்கி​யிருக்கு. இதுல இவங்க ரெண்டு பேருக்கும் காரசாரமா சண்டைகள் நடந்ததாச் சொல்றாங்க. இந்த நிலையில்தான் ஜெகதீஸ்வரியைக் கொடூரமா கொலை பண்ணிட்டு, வசூல் பணத்தையும் அள்ளிட்டுப் போயிருக்காங்க. ஆனா, அந்தம்மா போட்டிருந்த நகைகள் எதையும் தொடவே இல்லை.

முதலில், கலைச்செல்வன் தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்தக் கொலையை செஞ்சிருப்பாங்கன்னு சந்தேகப் பட்டோம். அதுக்கு சான்ஸ் இல்லைன்னு தெரிஞ்ச பிறகு​தான், பாண்டிச்செல்வம் மேல சந்தேகம் வந்தது. நாங்க தேட ஆரம்பிச்சதுமே ஆள் எஸ்கேப். அதனால நிச்சயமா அவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்கு.'' என்றார்கள்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சித்ராதேவியை சந்திக்க நாமனூருக்குச் சென்றோம். நம்மைக் கையெடுத்துக் கும்பிட்ட அவரது கணவர் சுரேந்திரன், ''எங்களை இந்த விவகாரத்​தில் இழுக்காதீங்க. எதையும் பேசுற நிலையில அவ இல்லை'' என்று வழியனுப்பி விட்டார். மதுரை விளாங்குடியில் உள்ள பாண்டிச்செல்வத்தின் வீடும் பூட்டிக் கிடந்ததால் மதுரை ஆதீனத்திடம் பேசினோம். ''அந்தாளு ஒரு கல்பிரிட் மாதிரித்தான் இருந்தான். அவன் தப்பான ஆளுன்னு மனோதத்துவ ரீதியாவே(?) நான் கண்டு​பிடிச்சிட்டேன். ஏகப்பட்ட புகார்களும் வந்ததால், 'ஹி மஸ்ட் பி சென்ட்அவுட்’னு நித்தியானந்தர்​கிட்டயும் சொல்லிட்டேன். அவரும் அவனைக் கூப்பிட்டுக் கண்டிச்சு, அண்ணா நகரில் இருக்கிற நித்தியானந்தர் தியான பீடத்துக்கு மாத்திட்டார். நான் அந்தாளைப் பாத்து 20 நாளைக்கு மேலாச்சு'' என்றார் ஆதீனம்.

சிவகங்கை தாலுக்கா இன்ஸ்பெக்டர் சங்கர், ''தலைமறைவாகி இருக்கும் பாண்டிச்செல்வத்தின் மீது எங்களுக்கு வலுவான சந்தேகம் இருக்கிறது. இரண்டொரு நாட்களில் அவரை நெருங்கி விடுவோம்'' என்றார்.

இருக்கின்ற சிக்கல்கள் போதாதா நித்திக்கு?

   - குள.சண்முகசுந்தரம்

    படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி,   எஸ்.சாய் தர்மராஜ்