ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

'பணம் கட்டினால்தான் பரோலா?'

சித்ரவதையில் சிறைக் கைதி!

##~##

'ஒரு தாயின் கருவறையில் 10 மாதங்களுக்கு மேல் குழந்தை இருந்தால், அது தாய்-சேய் இருவருக்குமே நல்லது இல்லை. அதேபோல் ஒரு கைதி எட்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை யில் இருப்பதும் நீதி இல்லை’ - இது, மனித உரிமை ஆர்வலர் வி.ஆர்.கிருஷ்ணய்யரின் வார்த்தைகள். ஆனால், 20 ஆண் டுகளாகச் சிறையில் இருக்கும் ஒரு கைதி, பரோலில் வருவதற்கே என்ன கஷ்டப்படுகிறார் என்பதைக் கேள்விப்பட்ட போது வருத்தம்தான் ஏற்பட்டது! 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக மதுரை மத்தியச் சிறையில் இருப்பவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன். 1992-ம் ஆண்டு கைதான இவர் இன்னமும் சிறையில்தான் இருக்கிறார். அவரது இப்போதைய கோரிக்கை, 'என்னை ஒரு மாதம் பரோலில் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்க  வேண்டும்’ என்பதுதான். அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சிறைத் துறை இவரிடம், '3,83,040 ரூபாய் கட்டினால்தான் உங்களுக்கு பரோல்’ என்று சொல்லிப் பகீரடிக்க வைத்துள்ளது.

இதுபற்றி அவருடைய வழக்கறிஞர் லஜபதிராய் நம்மிடம் பேசினார். ''1992-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, கைது செய்யப்பட்டவர் ரவிச்சந்திரன். இதுவரை மூன்று முறை அவர் பரோலில் சென்றிருக் கிறார். அவரது அப்பா சீரியஸாக இருந்தபோதும் அவர் இறந்த பிறகு இறுதிச் சடங்குகளுக்காகவுமே

'பணம் கட்டினால்தான் பரோலா?'

பரோலில் சென்றார். 20 ஆண்டுகளில் மூன்று முறை அவர் பரோலில் சென்ற நாட்கள் 14தான். மீண்டும் பரோலுக்கு விண்ணப்பித்தபோது நீதியரசர் சுதாகர் 15.07.11 அன்று 'ரவிச்சந்திரனின் கோரிக்கையை சிறைத் துறை பரிசீலிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். ஆனால் சிறைத் துறையோ, பரோலை மறுத்து விட் டது. 'ரவிச்சந்திரன் வெளியே சென்றால், பொது அமைதிக்குப் பங்கம் வரும். அவருடைய நடத்தை சரியில்லை’ என்று காரணம் சொல்லியது. ஆனால், இதற்குமுன் ரவிச்சந்திரனை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா என்று ஆராயப்பட்டபோது, விருதுநகர் மாவட்ட நன்னடத்தை அலுவலர் சி.யோகமணி ரவிச்சந்திரனுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கி இருந்தார். சிறைப்படும்போது ப்ளஸ் டூ முடித்திருந்த ரவிச்சந்திரன் சிறையில் இருந்துகொண்டே பட்டப் படிப்பையும் பட்டயப் படிப்பையும் முடித்திருப்பதோடு தட்டச்சு, சுருக்கெழுத்தையும் முடித்திருக்கிறார். எனவே, சிறைத்துறை சொல்லும் காரணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் நீதியரசர் வி.ராமசுப்பிரமணியன், 'ரவிச்சந்திரனுக்கு 15 நாட்கள் பரோல் விடுப்பு அளிக்கலாம்’ என்று உத்தரவிட்டார். 'ரவிச்சந்திரன் வெளியில் செல்வதால், பொது அமைதிக்கு எந்தப் பங்கமும் ஏற்படாது’ என்று தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார் நீதிபதி. ஆனால் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த சிறைத் துறை, 'ரவிச்சந்திரன் ஐந்து நாட்கள் வேண்டுமானால் பரோலில் செல்லலாம்’ என்று சொல்வதோடு, 'போலீஸ்காரர்கள் வழித் துணைப்

'பணம் கட்டினால்தான் பரோலா?'

பாதுகாப்புக்காகச் செல்ல ஆகும் செலவு 3,83,040 ரூபாயை ரவிச்சந்திரன் கட்ட வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறது. மேலும், 'ஏற்கெனவே மூன்று முறை ரவிச்சந்திரன் 14 நாட்கள் பரோலில் சென்றதற்கான வழித் துணைப் பாதுகாப்புச் செலவு 1,39,391 ரூபாயையும் கட்ட வேண்டும்’ என்று அவரது வீட்டுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. லட்சக் கணக்கான பணத்தைக் கட்டும் நிலையில் அவர் இல்லை. கைதி பணம் கட்ட வேண்டும் என்று சொல்வது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

ஆலடி அருணா கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஏ.ராஜாவின் வழக்கில், 'கைதி சிறையின் கஸ்டடியில் இருந்தே செல்வதால், அவர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை’ என்று நீதியரசர் சந்துரு தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த முன்மாதிரித் தீர்ப்புகளைச் சிறைத்துறை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை.

20 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒருவர் லட்சக்கணக்கான பணம் கட்ட வேண்டும் என்பது என்ன நீதி? 60 வயதைத் தாண்டிய அவரது தாயார் தன் கணவரின் ஓய்வூதியத்தை நம்பி வாழ்பவர். அவரால் எப்படி ஐந்து லட்ச ரூபாய் கட்ட முடியும்? இத்தனைக்கும் கோவை குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் கைதானவர்களை ஒரு மாதம் வரை பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் மட்டும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுவதை எப்படிப் புரிந்து கொள்வது?

பரோலில் செல்லும் ரவிச்சந்திரனோடு பாதுகாப்புக்காக 73 போலீஸ்காரர்கள் செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஆனால், பரோலை மறுப்பதற்காகவே இந்தக் காரணங்கள் சொல்லப் படுகின்றன. தனிநீதிபதியின் உத்தரவில் பணம் கட்டுவது பற்றிக் குறிப்பிடாதபோது, சிறைத்துறை பணம் கட்ட வலியுறுத்துவது ஏன்? எனவே, சிறைத் துறையின் இந்தப் பதிலை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போகிறோம். 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுப வித்துள்ள ரவிச்சந்திரனை விடுதலை செய்யக் கோரியும் வழக்குத் தொடுக்கப் போகிறோம்'' என்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. டோக்ராவிடம் கேட்ட போது, ''பரோலில் அனுப்புவதற்கு எவ்வளவு செலவாகும் என்று நீதிமன்றம் எங்களிடம் கேட்டது. சிறை விதிகளின்படி பரோலுக்கு ஆகும் செலவை கோர்ட்டில் சொன்னோம். அந்தத் தொகையை ரவிச்சந்திரன் குடும்பத்தில் இருந்து பெறுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறது. அதனால்தான் பணத்தைக் கட்டச் சொல்லியிருக்கிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கு மிகவும் சென்சிட்டிவான வழக்கு என்பதால், அதில் சம்பந்தப்பட்ட கைதிகளை பரோலில் அனுப்புவது குறித்து அரசாங்கம்தான் இறுதி  முடிவு எடுக்கவேண்டும்'' என்றார்.

காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கோபால் கோட்சே 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். இத்தனைக்கும் அவர் கொலை வழக்கில் நேரடியாகத் தொடர்புடையவர். ஆனால் ரவிச்சந்திரனோ, ராஜீவ் கொலை வழக்கில் நேரடித் தொடர்பற்றவர். 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர், 15 நாட்கள் பரோலில் தன் வீட்டுக்குச் செல்லக்கூட உரிமை இல்லை என்றால் அது தனி நபருக்கு இழைக்கப்படுகிற அநீதி மட்டும் அல்ல... நீதிக்கே இழைக்கப்படும் அநீதி!

- ரீ.சிவக்குமார்