ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

திகில் மரணங்கள்... திடீர்த் தாக்குதல்கள்!

என்ன நடக்கிறது சென்னை ஐ.ஐ.டி-யில்?

##~##

கரத்தின் பரபரப்பில் இருந்து தன்னை துண்டித்துக்கொண்டு, வனப் பகுதிக்குள் இயங்கி வரும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தை சந்தேகக் கண் கொண்டு இதுவரை யாரும் பார்த்தது இல்லை. ஆனால், சமீப காலமாக அங்கு அடிக்கடி நிகழும் மர்ம மரணங்களும் அதை வெளிக்காட்ட மறுக்கும் பேராசிரியர்களின் நடவடிக்கைகளும் பலத்த சந்தேகங்களை எழுப்புகின்றன! 

கடந்த எட்டு மாதங்களில் மட்டும், சென்னை ஐ.ஐ.டி-யில் படித்த மாணவர்கள் நான்கு பேர் அந்த வளாகத்துக்குள் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார்கள். அங்கே பணியாற்றிய காவலாளி ஒருவர் சாக்கடைக்குள் பிணமாகக் கிடந்தார். மாணவர்களின் மரணங்கள் அனைத்தும் தற்கொலைகளாகச் சொல்லப்படுகின்றன. மாணவர்​களின் சொந்தப் பிரச்னைகளும், குடும்பச் சூழ்நிலை​யையும்தான் தற்கொலைக்குக் காரணம் என்று ஐ.ஐ.டி. நிர்வாகம், தானாக முன்வந்து விளக்கம் கொடுக்​கிறது. ஆனால் பெற்றோர்கள் தரப்பில் இதைக் கடுமையாக மறுக்கிறார்கள். 'ஐ.ஐ.டி-யில் பணிபுரியும் சிலரின்  நடவடிக்கைகளே தங்கள் பிள்ளைகளின் மரணங்களுக்குக் காரணம்’ என்று குமுறுகிறார்கள்.

திகில் மரணங்கள்... திடீர்த் தாக்குதல்கள்!

அரைகுறை ஆடையுடன் ஐ.ஐ.டி. வளாகத்துக்குள் நடத்தப்படும் கலாசார(?) நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகை​யாளர்களைத் தானாக முன்வந்து அழைக்கும்  நிர்​வாகம், மரணங்கள் நிகழும் நேரங்களில் செய்தியாளர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை. செய்தி சேகரிக்கும் பணிக்காக  நுழைபவர்களைத் தடுக்கவும் தாக்கவும் செய்கிறது. ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற ஒவ்வொரு மர்ம மரணத்தின்போதும் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த 21-ம் தேதி ஒரு மரணம் நடந்தபோதும், பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.டெக். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி மெருகு மானஷா. இவர் வளாகத்துக்குள் அமைந்துள்ள விடுதியில் தங்கிப் படித்தார். 21-ம் தேதி காலை வகுப்புக்குச் சென்ற மெருகு மானாஷா, மதியம் தன் அறைக்குத் திரும்பி உள்ளார். பின்னர், அந்த அறைக்கு கார்பென்டர் வேலை செய்வதற்காகச் சென்ற சில தொழிலாளர்கள்தான், மாணவி மெருகு மானஷா தூக்கில் பிணமாகத் தொங்குவதை பார்த்துள்ளனர். தகவல் கசியத் தொடங்​கியதும் மக்களும் பத்திரிகையாளர்களும் திரண்டனர். ஆனால், ஐ.ஐ.டி. காவலர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

'இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் புகைப்படக்காரர் ஆல்ஃபி மேத்யூ மட்டும் ஐ.ஐ.டி. நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டு, அவருடைய அனுமதியுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பேராசிரியர் பிரகாஷ் மைய்யா, 'புகைப்படம் எடுக்கக்கூடாது’ என்றதுடன் நில்லாமல் எடுத்த புகைப்படங்களை அழிக்கச் சொல்லியும் ஆல்ஃபி மேத்யூவை மிரட்டி உள்ளார். ஆனால் ஆல்ஃபி அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் ஐ.ஐ.டி. காவலர்களைக் கொண்டு ரத்தம் வரும் அளவுக்குத் தாக்கியதுடன், அறை ஒன்றில் ஆல்ஃபியை சிறை வைத்து உள்ளார்கள். பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் இறங்கிய பிறகே, புகைப்படக்காரர் ஆல்ஃபி மேத்யூவை விடுவித்துள்ளனர்.

திகில் மரணங்கள்... திடீர்த் தாக்குதல்கள்!

பேராசிரியர் பிரகாஷ் மைய்யா நடத்தியது அராஜகம் என்றால், சென்னை ஐ.ஐ.டி-யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி நடந்து கொண்ட விதம் அருவருப்பானது. இந்தக் களேபரங்கள் நடந்து முடிந்த சில மணி நேரங்களில், அதற்காக வருத்தம் தெரிவித்து அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும் அறிக்கை அனுப்பினார். ஆனால், சில மணி நேரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். 'புகைப்படக்காரர் ஆல்ஃபி மேத்யூ மாணவிகளைத் தவறாக படம் எடுத்தார்.  படம் எடுக்கப்பட்ட மாணவிகள் மூலம் போலீஸில் புகார் கொடுக்கப் போகிறோம்’ என்று அறிவித்தார்.

திகில் மரணங்கள்... திடீர்த் தாக்குதல்கள்!

அதனால் கொதித்துப் போன பத்திரிகையாளர்கள் போலீஸ்  இணை ஆணையர் சேஷாயியைச் சந்தித்து, புகார் அளித்தனர். புகாரை வாங்க மறுத்தவர், 'முதலில் கலைந்து செல்லுங்கள். இல்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளார். அதன் பிறகு பத்திரிகையாளர்கள் சாலை மறியலில் இறங்கிய பிறகே பிரகாஷ் மைய்யா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் துறை ஆணையர் திரிபாதியைச் சந்தித்தும் பத்திரிகை​யாளர்கள் புகார் அளித்துள்ளனர். ஓரிரு நாட்களுக்குள் இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

எந்தக் குற்றச் சம்பவம் நடந்தாலும் அந்த இடத்துக்குள் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் செல்வது அவரது முக்கியப் பணியாக உள்ளது. 'இது ஐ.டி.டி. வளாகம் இங்கு யாரும் வரக்கூடாது’ என்பது சட்ட ரீதியாக அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையா?’ எனத் தெரியவில்லை. ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு உண்மையான காரணம் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கு உண்டு. இது அந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக்கே கூட உதவிகரமான விஷயம்தான். ஆனால், அதைத் தடுப்பது அதிகார வன்முறை ஆகும். அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள் இத்தகைய காரியங்களைச் செய்யும்போது குற்றம் சொல்லும் சில அறிவுஜீ​விகளும் அதே காரியத்தைச் செய்தது தவறானது.  

இரும்புத் திரையில் இருந்து ஐ.ஐ.டி. வெளிவரட்​டும்!

- ஜோ.ஸ்டாலின்

படங்கள்: எம்.உசேன்,

சொ.பாலசுப்பிரமணியம்